ரமலான் சிந்தனைகள் 17

குர்-ஆனில் சிலுவை மரணம் - அது ஈஸா இல்லை என்றால் வேறு யார்?

ஈஸா பற்றி குர்-ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பவைகளில், மற்றவைகளைப் பார்க்கிலும், அவருடைய மரணம் பற்றிக் கூறும் வசனங்கள் மிகக் குறைவானதாகவும், ஆனால் அதிக குழப்பம் விளைவிப்பதாகவும் இருக்கிறது. முஸ்லீம்கள் குர்-ஆன் 4:157 ஐக் காட்டி, “இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்” ஈஸா கொல்லப்படவே இல்லை என்றும்,  உண்மையில் நடந்தது என்னவெனில், ஈஸாவுக்குப் பதில் வேறு ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் சொல்வர். ஈஸா கொல்லப்படாமல் யார் கொல்லப்பட்டார் எனக் கேட்டால், சீடர்களில் ஒருவர், யூதாஸ்காரியோத்து என பலவிதமான தெளிவற்ற பதில்கள் வரும். ஒருவேளை, அல்லாஹ் அப்படிச் செய்து மற்றவர்களை ஏமாற்றினார் என்றால், குர்-ஆன் விஷயத்திலும் அப்படி ஏமாற்றி இருக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா என்று அல்-ராஜி (al-Razi  c.1200 AD) போன்ற இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் ஈஸா சிலுவையில் மரணமடைந்தது உண்மைதான் என சொன்னாலும், முஸ்லீம்களில் பெரும்பாலானோர் சிலுவை மரணம் நடக்கவில்லை என்றுதான் சொல்கின்றனர். ஆனால், குர்-ஆன் 3:54,55; 5:116,117 ஆகிய வசனங்களை வாசிக்கும்போது, நாம் tawaffa என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.  “உயர்த்திக் கொள்ளுதல்” என்ற பெயரில் இந்த வினைச்சொல் இந்த இரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குர்-ஆனின் மற்ற இடங்களில் (25 இடங்களில், அதில் 3 முஹம்மது பற்றியது)  மரணத்தைக் குறிக்கிற சொல் ஆக இது இருப்பதைக் காண முடியும். குர்-ஆன் 3:54-55 ல், அல்லாஹ் ஈஸாவைப் பார்த்து உன்னை மரணமடையச் செய்வேன்  (cause you to die) என்று சொல்வதாகவும், 5:116, 117ல் அல்லாஹ்வைப் பார்த்து "நீ என்னை மரணிக்கச் செய்த பின்பு” என்று ஈஸா சொல்வதாக இவ்வார்த்தை பொருள் தருவதைக் காணலாம். ஆகவே, யூதர்கள் பெருமைப்பட்டுக் கொண்டபடி, ஈஸாவை அவர்கள் கொல்லவில்லை, அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தான் என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். குர்-ஆன் 19:33ல், ஈஸா தன் மரணத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம், முஸ்லீம்கள் இதற்குப் பல விளக்கங்களைத் தந்தாலும், அதற்கு குர்-ஆனில் ஆதாரம் இல்லை. ஆகவே, குர்-ஆன் சிலுவை மரணம் பற்றிக் கூறும் எதிர்மறையான செய்தி, தெளிவைத் தருவதற்குப் பதிலாக, குர்-ஆன் வசனங்களுக்கே முரண்பாடானதாக இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் குர்-ஆன் கூறும் சிலுவை மரணச் செய்தி, Monophysites என்ற கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினரின் நம்பிக்கைக்கு ஒத்ததாக இருப்பதாக சிலர் சொல்கின்றன்ர்.

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்ற வரலாற்று உண்மையை, குர்-ஆனின் ஒரே ஒரு வசனம் மூலம் மூடி மறைக்க முடியாது. இயேசுவே உலக இரட்சகர் என்ற சத்தியத்தை, குர்-ஆன் நிராகரிக்கக் காரணமாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, மனிதனின் பாவத்தை சொந்த கிரியைகள் மூலமாக, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அதிக நன்மைகளைச் செய்வதினால் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதால் ஒரு இரட்சகர் தேவை இல்லை. இரண்டாவதாக, சிலுவையில் மனிதர்களின் பாவங்களுக்காக ஒருவர் மரித்தார் என்பதை இஸ்லாம் நிராகரிக்க காரணம் என்னவெனில்,  பலியிடுதல் பற்றிய புரிதல் இஸ்லாமில் கிடையாது. ஆனாலும், முஸ்லீம்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான “பக்ரீத்” பண்டிகையானது பலியுடன் தொடர்புடையது என்பது என்பது பல முஸ்லீம்களே புரிந்து கொள்ளத் தவறுகிற உண்மை.  இயேசுவைப் பார்த்த யோவான்ஸ்நானகன், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றார். இயேசு, தான் சொன்னபடியே சிலுவையில்  சகல மனிதரின் இரட்சிப்புக்காக தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் பரமேறுதலுக்குப் பின், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்ற இயேசுவின் சீடர்கள், “நீங்கள் அவரைக் கொலை செய்தீர்கள், தேவன் அவரை உயிரோடெழுப்பினார் என்பதற்கு நாங்கள் சாட்சிகள்” என்று  தைரியமாகப் பிரசங்கித்தனர். “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று சொன்ன இயேசுவை பறைசாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா!

இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய வேதாகம மற்றும் வரலாற்று உண்மையை தைரியமாக அனைவருக்கும் சொல்லி புரியவைக்கும் கிருபையை கிறிஸ்தவர்கள் பெறவேண்டும் என்றும், சிலுவை மரணம் பற்றிய எல்லா தவறான நம்பிக்கைகளில் இருந்தும் விடுபட்டு, முஸ்லீம்கள் வேதத்தில் ஒளியில் உண்மை என்ன என்று கண்டு, இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பைக் கண்டு கொள்ளவும் நாம் ஜெபிப்போம்.

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது (I கொரிந்தியர் 1:18).

- அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 10th May 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/05/17.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்