2020 ரமலான் சிந்தனைகள் - 5

இறைவனின் அன்பா? அல்லது இறுதி நாள் தீர்ப்பா...?

ரமலான் நாட்களில் முஸ்லீம்களிடையே குர்-ஆன் வாசிப்பும், அதைப் பற்றிய உரைகளைக் கேட்பதும் அதிகமாக இருக்கும் என்று முன்பு எழுதி இருந்தேன். "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என குர்-ஆனில் இறைவனைப் பற்றி அடிக்கடி எழுதப்பட்டிருந்தாலும், இன்னும் சொல்லப்போனால் ஒன்று குறைய எல்லா ஸூராக்களும் (குர்-ஆன் அத்தியாயங்களும்) இந்த சொற்றொடரை ஆரம்ப வாக்கியமாகக் கொண்டிருந்தாலும், குர்-ஆனின் உள்ளடக்கமானது இறைவனின் அன்பைப் பற்றிப் பேசுவதை விட இறுதிநாளில் அல்லது மறுமை நாளில் மனிதர்களுக்கு உண்டாகும் தண்டனை அல்லது நியாயத்தீர்ப்பு பற்றிய வசனங்களே மிகவும் அதிகம். ஆகவே குர்-ஆன் வாசிக்கும் ஒரு நபர் இறுதி நாளில் அக்கினி நெருப்புக்குள் தள்ளப்பட்டு, ஒருவர் பெறும் முடிவிலா நித்திய தண்டனை பற்றி அதிகம் வாசித்து ஒரு பயத்திற்குள் தள்ளப்படுகிறார். அந்த நித்திய அக்கினிக்குள் தள்ளப்படும் நரக தண்டனைக்கு தப்புவது எப்படி என்பது பற்றிய தெளிவான விளக்கம் குர்-ஆனில் கிடையாது. முஹம்மதுவும் சொல்லவில்லை. மாறாக அந்த தண்டனையானது எவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்ற விவரங்கள் குர்-ஆனில் கொட்டிக் கிடக்கின்றன.

பரிசுத்த வேதாகமத்தில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6)  என்று தெளிவாக வழி காட்டியதுமன்றி, ஒருவர் நரக ஆக்கினைக்கு தப்புவது எப்படி என்றும் சொல்லி இருக்கிறார். இயேசுவும் அவருடைய சீடர்களும் பரலோகத்தைப் பற்றியும் பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றியும் அதிகம் பேசினார்கள், பிரசங்கித்தார்கள் என்று நாம் புதிய ஏற்ப்பாட்டை வாசிக்கையில் அறிகிறோம்.

 நாமும் கூட, நம் முஸ்லீம் நண்பர்களுடன் உரையாட விரும்பினால், அவர்களின் நரகம்-சொர்க்கம் பற்றிய கேள்விகளுடன் (குற்றஞ்சாட்டும் மனப்பான்மையின்றி, அவர்கள் கருத்தை அறியும்படி) பேசத் துவங்கினால், அது பெரிதும் பலனளிப்பதாக மட்டுமன்றி, அவர்களை இயேசுவிடம் திருப்ப எளிதாகவும் இருக்கும்.

சிந்திப்போம் செயல்படுவோம்

-அற்புதராஜ் சாமுவேல்

தேதி: 28th April 2020

Source: http://arputhaa.blogspot.com/2020/04/5.html


2020 ரமலான் சிந்தனைகள் பக்கம்

சகோ. அற்புதராஜ் சாமுவேல் பக்கம்