Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு

கடந்த ஆண்டு 2020, ஜூன் 25ம் தேதி கீழ்கண்ட கட்டுரையை பதித்து இருந்தேன்.

சரியாக, ஒரு வருடம் கழித்து, 2021 ஜூன் 27ம் தேதி, பீஜே அவர்கள் ஒரு வீடியோவின் மூலம் முஸ்லிம்களுக்கு ஒரு பரிசுப்போட்டியை அறிவித்து இருந்தார்கள்.  மேற்கண்ட  குர்‍ஆன் ஆய்வு கட்டுரைக்கு சரியான பதிலை முஸ்லிம்கள் எழுதி அனுப்பினால், அவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்குவதாக பீஜே அவர்கள் கூறியிருந்தார்கள்.

அதன் தொடுப்பு இங்கே:

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து, ஜூலை 5ம் தேதி பீஜே அவர்கள் கொடுத்த பதில் இந்த தொடுப்பில் காணலாம்:

முதலாவதாக, கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க பீஜே அவர்கள் முகமலர்ந்ததற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு

முஸ்லிம் அறிஞர்கள் எங்களுடைய‌ ஆய்வு கட்டுரைகளையும், விமர்சனங்களையும், கேள்விகளையும்  படித்து பதில் சொல்வார்கள் என்று பல ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது தான் அதற்கு ஒரு வழிவாசல் பீஜே அவர்கள் மூலமாக திறக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழுகிறோம்.

நம்மை அகமகிழ வைத்த பீஜே அவர்களையும் மகிழ்விக்க விரும்பி, அவருக்கு ஒரு பரிசு மழையை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் (மழையென்றுச் சொல்வதைவிட தூறல் என்றுச் சொன்னால் தான் சரியாக இருக்கும், தூறலில் நனைவதும் ஒருசுகம் தானே!).

நம்முடைய ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் இது வரை (ஜூன் 2021) 800+ கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளன. இவைகளில் பாதி, அதாவது 400+ கட்டுரைகள் "கிறிஸ்தவம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு" பதில்களாக இருக்கின்றன, மீதியுள்ள 400+ கட்டுரைகள் "இஸ்லாம்/குர்‍ஆன்/முஹம்மது/அல்லாஹ் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளாகவும், விமர்சனங்களாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும் " இருக்கின்றன. பீஜே போன்றவர்கள் பதில் கொடுக்க முயலும் போது, இப்படிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இன்னும் வேகமாக தொடரும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு கட்டுரைக்காகவும் ரூபாய் 1000 பரிசு

பீஜே அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: 

மேற்கண்ட 400 கட்டுரைகளில், குறைந்தபட்சம் 200 கட்டுரைகளை தெரிவு செய்து, நீங்கள் பதில் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உங்களின் முந்தைய வீடியோவைப் பார்த்தால்,  நீங்கள் களத்தில் ஏற்கனவே இறங்கிவிட்டீர்கள் என்று அறியமுடிகின்றது. கரும்பு திண்ணக்கூலியா என்று சொல்வார்கள், அது போல, நீங்கள் பதில் கொடுக்கும் ஒவ்வொரு கட்டுரைக்காகவும் ரூபாய் 1000 பரிசு கொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.  200 கட்டுரைகளுக்கு மொத்தம் 2 லட்சம் பரிசு கொடுக்கப்படும்.

பரிசுக்கான நிபந்தனைகள்:

1) நீங்கள் அதாவது பீஜே அவர்கள் பதில் கொடுக்கவேண்டும், அதுவும் வீடியோ பதிலாக இருக்கவேண்டும்.

2) வீடியோ பதில் குறைந்தபட்சம் 5 நிமிடங்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும்.

3) ஆடியோ பதில்கள் வேண்டாம், ஏனென்றால் ஆடியோவில் உங்களைப்போல பேசி வேறு நபர்கள் பதில் சொல்லமுடியும், எனவே நீங்கள் நேரடியாக வீடியோவில் பதில் கொடுக்கவேண்டும்.

4) எழுத்துவடியில் உங்கள் தளத்தில் பதில் கொடுத்தால், இந்த நிபந்தனைகளுக்கு அது உட்படாது, வீடியோ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். வீடியோவிலும் பதில் கொடுத்துவிட்டு, அதனை கட்டுரையாக மாற்றி உங்கள் தளத்தில் பதிப்பது உங்கள் விருப்பம்.

5) நீங்கள் ஏற்கனவே முஸ்லிம் மக்களை உற்சாகப்படுத்தியது போன்று, மற்றவர்கள் மூலமாக ஆய்வு செய்யச் சொல்லியோ, அவர்கள் கட்டுரைகளை எழுதியோ உங்களிடத்தில் கொடுக்கலாம். ஆனால், நீங்கள் வீடியோவில் பதில் சொல்லவேண்டும்.

6) முக்கியமாக, எங்களின் எந்த கட்டுரைக்கு நீங்கள் பதில் சொல்கிறீர்களோ, அந்த கட்டுரையின் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் தொடுப்பை குறைந்தபட்சம் 1 நிமிடம் உங்கள் வீடியோவின் ஆடி பாகத்தில் மக்கள் படித்து புரிந்துக்கொள்ளக் கூடிய எழுத்துவடியில் (Font Size) நீங்கள் காட்டவேண்டும். யுடியூப் டிஸ்கிரிப்ஷனிலும் (Youtube Description) நம் கட்டுரையின் தொடுப்பு, கொடுக்கப்படவேண்டும். முகநூலில்(Facebook) வீடியோவை பதித்தாலும், உங்கள் தளத்தில் வீடியோவை பதித்தாலும் தொடுப்பை கொடுக்கவேண்டும்.

7) நீங்கள் கொடுக்கும் பதில்  எங்கள் கட்டுரைக்கான சரியான பதிலாக இருந்தாலும் சரி, தவறான பதிலாக இருந்தாலும் சரி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையின் பதிலுக்கும் ரூபாய் 1000 ஐ, நீங்கள் சொல்லும் கணக்கில் சேர்க்கப்படும். 

வாசகர்களுக்கு எழும் சில சந்தேகங்களும் அவைகளுக்கான பதில்களும்:

1) பீஜே அவர்களின் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ரூபாய் 1000 பரிசு கொடுப்பது குறைவானதல்லவா?

பரிசுத்தொகையைப் பார்க்கவேண்டாம், யாரிடமிருந்து பரிசு வருகிறது என்பதைப் பாருங்கள். மேலும், ஒவ்வொரு கட்டுரைக்கும் 1000 என்பதால், அவர் 50 கட்டுரைகளுக்கு பதில் கொடுத்தால் 50 ஆயிரம் கிடைக்கும், 200 கட்டுரைக்கு பதில் கொடுத்தால், இரண்டு லட்சங்கள் கிடைக்கும்.  இந்த தொகையானது, இஸ்லாமிய தாவா பணிக்கு உதவுமில்லையா? எனவே பரிசுத் தொகையைப் பார்த்து சோர்வடையவேண்டாம்.

2) நீங்கள் பரிசுத்தொகையை கொடுப்பீர்கள் என்று நம்புவது எப்படி?

இது ஒன்றும் “காணாமல் போன நாய்க்குட்டியை கண்டுபிடித்து கொடுத்தால் கிடைக்கும் பரிசுத்தொகை அல்ல‌”.  இந்த பணி மிகவும் மகத்தானது, யாருமே தமிழ் நாட்டில் செய்ய மறுத்தது, மறந்தது. செய்யப்படும் பணியைத் தான் பார்க்கவேண்டும், பரிசை அல்ல.  மேலும், மேற்கண்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றி கொடுக்கப்படும் வீடியோ பதிலுக்கு நிச்சயம் பரிசு தரப்படும்.  ஒருவேளை நான் கொடுக்க மறுத்தாலும், வெற்றி உங்களுக்குத்தானே! “உமர் என்பவன் வாக்கு மாறினான், நாங்கள் வெற்றி பெற்றோம், இஸ்லாம் வெற்றிப்பெற்றது” என்று கொண்டாடுவீர்கள் அல்லவா? அதே நேரத்தில், இஸ்லாமை விமர்சித்தவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லிவிட்டோம் என்ற பெயரும் புகழும் கிடைக்குமில்லையா? எது செய்தாலும் அல்லாஹ்விற்குத் தானே புகழ் அனைத்தும்! அல்லாஹ்விற்கு அதிக புகழைச் சேர்க்கும் இந்த பணி மகத்தானது என்பதை மட்டும் மனதில் கொள்ளவும், நிச்சயம் 'பரிசு' கிடைக்கும்.

3) கிறிஸ்தவர்களுக்கு எழும் சந்தேகம்: சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்றால் இது தானே! 

கிறிஸ்தவத்திற்கு எதிராக போதனை செய்கிறவர்களுக்கு நீங்கள் எப்படி பரிசு தரலாம்? என்று கேள்வி கேட்பார்கள் சில கிறிஸ்தவர்கள். இஸ்லாமை நன்கு அறிந்த பீஜே போன்றவர்களும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் இஸ்லாமிய ஆய்வு கட்டுரைகளை படித்தவர்களும் இந்த பரிசு போட்டியைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்வார்கள்.  நீங்கள் சொன்ன பழமொழி இதற்கு சரிப்படாது என்று நான் எண்ணுகிறேன், வேண்டுமென்றால் 'கொசுவை வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குவது' என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்ற ஒன்றையாவது கேள்விபட்டு இருக்கிறீர்களா? இந்த பழமொழி இதற்கு சரியாக பயன்படும். நான் "பெரிய மீன்" என்றுச் சொன்னது பீஜே அவர்களை அல்ல. 

4) இது வெறும் விளம்பரத்திற்குத் தானே நீங்கள் செய்கிறீர்கள்?

இல்லை.. இல்லை, இது விளம்பரத்திற்கு அல்ல, இயேசுவின் நற்செய்தி வியாபிப்பதற்கு, சத்தியம் வெற்றிபெறுவதற்கு.  பீஜே அவர்கள் பதில் சொன்னால், எப்படி இயேசுவின் நற்செய்தி வியாபிக்கும்?  என்று கேட்கிறீர்களா? அவர் முதலாவது கட்டுரைகளுக்கு பதில் சொல்லட்டும், அதன் பிறகு பாருங்கள் நடப்பது என்னவென்று! நான் செய்வது விளம்பரத்திற்கு என்றுச் சொன்னால், அவர் செய்தது என்ன?

5) ஏற்கனவே பீஜே அவர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லியுள்ளாரே, அதற்கு பரிசு இல்லையா?

அது ஒரு ட்ரையல் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேலும், அவர் பதில் சொல்லும் போது, எந்த தளத்திற்கு பதில் தருகிறோம் என்றுச் சொல்லி எங்கள், தளத்தின் தமிழ் தொடுப்பைக் கொடுக்கவில்லை. மேலும், அவரது பதிலைக் கண்டபிறகு தான் இந்த போட்டியையே நான் முடிவு செய்தேன். எனவே, முதல் பதிலுக்கு இந்த பரிசு ஏற்காது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை பீஜே அவர்கள் 'இந்த முதல் கேள்விக்கும் பரிசு தரப்படவேண்டும் என்று சொன்னால், நிச்சயம் கொடுக்கப்படும்'.

6) இந்த முதல் வீடியோவில் கொடுத்த பதிலை நீங்கள் ஏற்கிறீர்களா?

பீஜே அவர்கள் தவறான பல விஷயங்களை அந்த பதிலில் கூறியுள்ளார், எனவே, அவருக்கு அடுத்தடுத்த பதிலை நான் தொடர் கட்டுரையாக கொடுக்கவுள்ளேன்.

இப்படிக்கு

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள நிர்வாகம்

ஈஸா குர்‍ஆன் தமிழ் தளம்

தேதி: ஜூலை 9, 2021


பீஜே மறுப்புக் கட்டுரைகள்

உமரின் பக்கம்