குர்-ஆன் 24:33 – அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் முஸ்லிம்களை அல்லாஹ் தண்டிப்பானா?

இது எப்படிப்பட்ட கூற்று?  ஒரு முஸ்லிம் அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் பணத்தை சாப்பிடுவானா? இப்படியும் யாராவது எழுதுவார்களா? போன்ற கேள்விகள் இக்கட்டுரையை படிக்கும் முஸ்லிம்களுக்கு எழும். ஆனால், இப்படிப்பட்ட (மாமா) வேலைகளை செய்யும் முஸ்லிம்களை தண்டிக்கமாட்டேன் என்று அல்லாஹ் குர்-ஆனில் மறைமுகமாக சொல்லியிருந்தால் முஸ்லிம்கள் எப்படி இதனை ஜீரணித்துக்கொள்வார்கள்? 

நம் கட்டுரைக்கு மையமாக இருக்கும் குர்-ஆன் வசனத்தை இப்போது படிப்போம்.

1) குர்-ஆன் 24:33

குர்-ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ்வின் வாயிலிருந்து புறப்பட்டதாகும், இதில் முஸ்லிம்களுக்கு சந்தேகமில்லை. 

குர்-ஆன் 24:33ஐ நான்கு தமிழ் மொழியாக்கங்களில் படிப்போம். கடைசி வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

இதர தமிழாக்கங்களில் முழுவசனத்தை படிக்காமல், இவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தை மட்டும் படிப்போம்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:33. . . . தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

24:33. . . . மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

பிஜே தமிழாக்கம்:

24:33. . . . கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

கவனிக்கவும்: இங்கு பிஜே அவர்கள் “உங்கள் பெண்களை” என்று குழப்பம் தரும்படி தமிழாக்கம் செய்துள்ளார். இந்த வசனம் அடிமைப்பெண்கள் பற்றி பேசுகின்றதே தவிர, முஸ்லிம்கள் சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் (1 லிருந்து 4 வரையுள்ள) பெண்களைப் பற்றி பேசவில்லை. ஆனால், இதே பிஜே அவர்கள், தம் ஆங்கில மொழியாக்கத்தில் அடைப்பிற்குள் (slaves - அடிமைகள்) என்று எழுதியுள்ளார், இதே போல தமிழில் அவர் செய்திருக்கலாம்.

பிஜே தமிழாக்கத்தின் ஆங்கில மொழியாக்கம்:

33. Let those who have no means to marry, safe guard their chastity435, until Allah makes them self sufficient by his bounty. Those among your slaves, who ask for a deed of freedom in writing, then you give them in writing, the deed of freedom if you know the goodness in them301. You give them from the wealth which Allah has given you. Do not compel in prostitution your women (slaves) who desire chastity in order to get the material gains of the world. Whoever compels, then indeed, Allah is Forgiving and the Most Merciful to the compelled women.

2) தமிழாக்கங்களின் சுருக்கமான ஆய்வு

மேலே நான்கு தமிழாக்கங்களில் குர்-ஆன் 24:33ம் வசனத்தை படித்தோம். முக்கியமாக, அவ்வசனத்தின் கடைசி வாக்கியத்தை, அப்துல் ஹமீது பாகவி தவிர, மற்றவர்கள் ஒரே மாதிரியாக தமிழாக்கம் செய்துள்ளார்கள். அப்துல் ஹமீது பாகவி அவர்களால், அல்லாஹ்வின் தெய்வீக கடைசி வாக்கியத்தை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை ஒரு முஸ்லிம் தன்னிடமுள்ள, ஒழுக்கமாக வாழவேண்டுமென்று விரும்புகின்ற ஒரு அடிமைப் பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணத்தை சம்பாதித்தால், அல்லாஹ் அப்பெண்ணை மன்னிப்பான் என்று இவ்வசனம் சொல்கிறது. ஆனால், அந்த மாமா வேலை செய்த முஸ்லிம் பற்றி ஒன்றுமே சொல்லாமல், அல்லாஹ் அமைதியாக இருந்துவிட்டான். இதனை ஜீரணித்துக்கொள்ளாத பாகவி அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு வாக்கியத்தை அடைப்பிற்குள் எழுதுகிறார்கள், கடைசி வாக்கியத்தை கவனிக்கவும்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

24:33. . . . தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)

பாகவி அவர்களின் இந்த மொழியாக்கம், குர்-ஆனுக்கு எதிரானதா? இக்கட்டுரையின் கடைசியில் இதைப் பற்றி சில கேள்விகளை முன்வைப்போம்.

3) குர்-ஆன் 24:33ன் நான்கு வாக்கியங்கள்

இப்போது இந்த வசனத்தின் நான்கு வாக்கியங்களை ஆய்வு செய்வோம். நான்காவது வாக்கியம் தான் இக்கட்டுரையின் மையப்பொருள் ஆகும். 

முதல் வாக்கியம்: 

முதல் வாக்கியத்தில் திருமணமாகாதவர்கள் (ஆண்கள்) எப்படி தங்கள் ”கற்பை” காத்துக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். ஒவ்வொரு தமிழாக்கத்திலும் ”கற்பு - ஒழுக்கம்” என்ற வார்த்தையை எப்படி குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை கவனிக்கவும்:

  • முஹம்மது ஜான் தமிழாக்கம்: ஒழுக்கம் பேணட்டும்
  • அப்துல் ஹமீது பாகவி: கற்பைக் காத்துக் கொள்ளவும்
  • IFT தமிழாக்கம்: ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும்
  • பிஜே தமிழாக்கம்:  கற்பொழுக்கம் பேணட்டும்

இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று உள்ளது. இவ்வசனத்தில் ”கற்பு, ஒழுக்கம், ஒழுக்கத்தூய்மை” போன்ற வார்த்தைகளுக்கு இஸ்லாம் கொடுக்கும் அர்த்தம் வேறு, நாம் பொதுவாக கொடுக்கும் அர்த்தம் வேறு. 

நாத்தீகர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களிடம் சென்று, ”ஒருவன் தனக்கு திருமணம் ஆகும் வரை தன் கற்பை காத்துக்கொண்டான் அல்லது ஒழுக்கதூய்மையோடு இருந்தான்” என்றுச் சொன்னால், “அவன் திருமணத்திற்கு  முன்பு வேறு  எந்த பெண்ணோடும் உடலுறவு கொள்ளவில்லை” என்று அர்த்தம் என பொதுவாக புரிந்துக்கொள்வோம். ஆனால், முஸ்லிம்களிடம் சென்று, ”இந்த முஸ்லிம் வாலிபன்  தனக்கு திருமணம் ஆகும் வரை தன் கற்பை காத்துக்கொண்டான் அல்லது ஒழுக்கதூய்மையோடு இருந்தான்” என்று நாம் சொன்னால், அதற்கு என்ன அர்த்தமென்றால், “இவன் தனக்கு திருமணம் ஆகும் வரை, தன் அடிமைப் பெண்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தான், ஆனால், இதர பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளாமல், தன் கற்பைக் காத்துக்கொண்டான்” என்று அர்த்தமாகும்.

ஆக, ஒரு முஸ்லிம் வாலிபன் கணக்கிலடங்கா அடிமைப்பெண்களோடு உடலுறவு வைத்துக்கொண்டாலும், தன் கற்பை பல அடிமைப்பெண்களுக்கு பகிர்ந்து கொடுத்தாலும், அல்லாஹ் அவனைப் பார்த்து, “சபாஷ், இவன் தன் கற்பை காத்துக்கொண்டான்” என்று மெச்சிக்கொள்வான்.  அடிமைப் பெண்களோடு முஸ்லிம் ஆண்கள் திருமணமாகாமல் உடலுறவு கொண்டால், அதனை “இஸ்லாம் விபச்சாரம்” என்று அழைக்காது, “அவனைப் பார்த்து கற்புள்ளவன்” என்று தான் அழைக்கும், இந்த விவரத்தை முஸ்லிமல்லாதவர்கள் புரிந்துக்கொள்வது சிறிது கடினமே. 

முஸ்லிம்களின் அகராதியில் ”கற்பு, ஒழுக்கம்” போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே வேறு.

இரண்டாவது வாக்கியம்: 

இரண்டாவதாக, “உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!” என்ற வாக்கியமாகும். இந்த வாக்கியம் அடிமைகளாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிக்கும். ஆனால், அடிமைப் பெண்களின் விஷயத்தில் சில சிக்கல்கள் தெரிகின்றன. 

1) விடுதலைப் பத்திரம் பெற்றுக்கொண்ட அடிமைப்பெண்கள் எப்படி சம்பாதித்து தங்கள் கடனை அடைப்பார்கள்?

2) இப்பெண்களின் குடும்பங்கள் மற்றும் பெற்றோர்களை கொன்றுவிட்டுத்தான் இவர்களை அடிமைகளாக கொண்டுவந்துள்ளார்கள்.

3) இப்பெண்கள் சம்பாதிக்க தங்கள் நாட்டிற்குச் செல்ல வாய்ப்பு இல்லை, அங்கு அவர்களின் குடும்ப நபர்கள் கூட உயிரோடு இல்லை.

4) இவர்களிடத்தில் பலவகையான திறமைகளை வெளிக்காட்டி சம்பாதிக்கும் வாய்ப்பு கூட இருக்காது. முஸ்லிம்கள் வாழும் இடத்தில் பெண்கள் எப்படி முன்னேறமுடியும்? இந்த அடிமைப்பெண்கள் என்ன தொழில் செய்து சம்பாதித்து, தங்கள் எஜமானர்களின் கடனை தீர்ப்பார்கள்?

5) அடிமைகளாக கொண்டு வரப்பட்ட நாள் முதற்கொண்டு, இந்த முஸ்லிம் எஜமானர்கள் தொடர்ச்சியாக இவர்களை கற்பழித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் என்ன தொழில் செய்து பணம் சம்பாதிக்கமுடியும்?

6) இவர்கள் விடுதலை பத்திரம் எழுதிக்கொண்டு, ஏதோ ஒரு தொழில் செய்து சம்பாதிக்கிறேன் என்றுச் சொல்லி,  இஸ்லாமிய சமுதாயத்தில் வாழமுயன்றாலும், மற்ற முஸ்லிம்கள், இவர்கள் அடிமைகள் அல்லவா? என்றுச் சொல்லி, இவர்களுக்கு பாலியல் தொல்லை தரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

7) பெயரளவிற்கு, அடிமைப்பெண்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக்கொடுங்கள் என்று குர்-ஆன் சொன்னாலும், அது முஸ்லிம்கள் வாழும் சமுதாயத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும். இன்னொரு நிபந்தனையும் குர்-ஆன் சொல்கிறது, அதாவது அடிமைகளிடம் “நல்லதை நீங்கள் அறிந்தால்” அவர்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக்கொடுங்கள் என்றுச் சொல்கிறது.  அடிமைப்பெண்களிடம் என்ன நல்லதை (தொழில் செய்து சம்பாதிக்கும் திறமையை) இந்த முஸ்லிம் ஆண்கள் காணமுடியும்? குர்-ஆனின் படி, அடிமைப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. குர்-ஆன் பெயரளவிற்கு சொல்கிறது என்பதை காணமுடியும்.

8) இஸ்லாமிய சமுதாயத்தில், அடிமைப்பெண்கள் விடுதலை பத்திரம் எழுதப்பட்டு விடுவிக்கப்பட்டால், அவர்கள் விபச்சாரம் புரிந்து தான் சம்பாதிக்கமுடியும். அதுவும், முஸ்லிம் எஜமானனிடம் இருந்துக்கொண்டு விபச்சாரம் புரிந்தால், அப்பெண்களுக்கு சிறிது பாதுகாப்பாவது கிடைக்கும், அந்த எஜமானனை விட்டு வெளியே வந்து அந்த தொழில் செய்தால், இவர்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாம் பாதுகாப்பு அளிக்காது. 

9) பெயரளவிற்கு குர்-ஆன்  “அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்!”  என்று சொல்கிறது, ஆனால், எவ்வளவு தரவேண்டும், எந்த வகையில் தரவேண்டும்? போன்ற விவரங்களை அல்லாஹ் நிர்ணயிக்கவில்லை. உண்மையாகவே, அடிமைப்பெண்கள் மீது அக்கரையுள்ளவர்களாக அல்லாஹ்வும் முஸ்லிம்களும் இருந்திருந்தால், அவர்களை கற்பழிக்கும் படி அல்லாஹ் குர்-ஆனில் சொல்லியிருக்கமாட்டான், முஸ்லிம்களும், முஹம்மதுவும் அந்த வசனத்தை பின்பற்றியிருந்திருக்கமாட்டார்கள். 

மூன்றாவது வாக்கியம்:

”கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்!”

இந்த வாக்கியத்தில் ”கற்புள்ளவர்களாக வாழவேண்டும் என்று விரும்பும் அடிமைப்பெண்களை, முஸ்லிம்களே, நீங்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்காதீர்கள்” என்று அல்லாஹ் சொல்கின்றான். இப்படியும் முஹம்மதுவின் கால முஸ்லிம்கள் செய்வார்களா? என்று புருவங்களை உயர்த்துகிறீர்களா? ஆம், குர்-ஆனில் அல்லாஹ் அப்படித் தான் சொல்கிறான். 

இது சாதாரண வாக்கியமல்ல, அல்லாஹ்வினால் விஷமேற்றப்பட்ட வாக்கியமாகும். இவ்வாக்கியம் மறைமுகமாக என்ன சொல்கிறது? நேரடியாக என்ன சொல்கிறது? என்பதை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கும்.

1) அடிமைப்பெண்கள் யார்? இவர்களும் குடும்பப்பெண்களே! ஆனால், போரினால் தங்கள் குடும்பங்களை இழந்துவிட்டு, அடிமைகளாக விற்கப்பட்டவர்கள்.

2) கற்பொழுக்கத்தோடு வாழவேண்டுமென்று விரும்புகிற அடிமைப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவேண்டாமென்று அல்லாஹ் சொல்வதிலிருந்து, மறைமுகமாக முஸ்லிம்களுக்கு  ”கற்பு பற்றி அக்கரை கொள்ளாத அடிமைப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்” என்று அல்லாஹ் சொல்லவருகிறார் என்று புரிகின்றதல்லவா? என்னுடைய இந்த விளக்கம் தவறு என்று முஸ்லிம்கள் கருதினால், இவ்வசனத்திற்கு சரியான விளக்கத்தை கொடுக்கலாம்.

3) ஒரு முஸ்லிமிடம், ஒரு அடிமைப்பெண் இருப்பாள் என்று வைத்துக்கொள்வோம், அவள் கற்பு பற்றி அக்கரையில்லாதவள் என்று வைத்துக்கொள்வோம். குர்-ஆன் 24:33ன் படி, இந்த முஸ்லிம் தன் நண்பர்களிடம் தன் அடிமைப்பெண்ணை கூட்டிக்கொடுத்து (விபச்சாரத்தில் ஈடுபடுத்தி) பணம் சம்பாதிக்கலாம். 

4) இந்த வாக்கியம், ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொல்வது பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், குர்-ஆனின் படி, தன் அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொள்வது என்பது ஹலால் ஆகும், ஹராம் அல்ல. இங்கு அல்லாஹ் குறிப்பிட்டுச் சொல்வது, அந்த பெண்ணை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிப்பது பற்றியதாகும்.

5) அல்லாஹ் எப்படிப்பட்ட தெய்வமாக இருக்கிறான் பாருங்கள்! குர்-ஆன் எப்படிப்பட்ட வேதமாக இருக்கிறது என்று பாருங்கள்! தன் மக்கள் அடிமைப்பெண்களை கற்பழிக்கவும், கற்பைப் பற்றி அக்கரையில்லாத அடிமைகள் மூலமாக விபச்சாரத்தொழில் நடத்தி பணத்தை சம்பாதிக்கவும் குர்-ஆன் அனுமதிக்கிறது. இதனை மறுப்பவர்கள், தகுந்த ஆதாரங்களோடு மறுக்கலாம்.

நான்காவது வாக்கியம்:

”யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.”

இப்போது நான்காவது வாக்கியத்துக்கு வருவோம். இது தான் இக்கட்டுரையின் கருப்பொருள் வாக்கியம்.

ஒருவேளை முஸ்லிம்களில் சிலர்,  கற்பை பேணவேண்டுமென்று விரும்பும் அடிமைப்பெண்களை பலவந்தப்படுத்தி, விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்தினாலும், அதன் மூலம் வரும் பணத்தை சாப்பிட்டாலும், இதில் அப்பெண்களின் தவறு ஒன்றுமில்லை,  எனவே ”நான் மன்னித்துவிடுவேன்” என்று அல்லாஹ் இந்த வாக்கியத்தில் சொல்கின்றான். 

1) மேலோட்டமாக இந்த வாக்கியத்தை படிப்பவர்கள், அல்லாஹ் எவ்வளவு பெரிய அன்பாளனாக இருக்கிறான் பாருங்கள்! அந்த அடிமைப்பெண்களை மன்னிப்பேன் என்று குர்-ஆனில் சொல்லியிருக்கிறான் என்று எண்ணக்கூடும். ஆனால், தன் இறைத்தூதரையும், தன் வேதத்தையும் நம்பும் முஸ்லிம்கள் ஒரு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தை சாப்பிட முயன்றுள்ளார்களே! அந்த முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்பதை கவனித்தீர்களா?

2) இது எவ்வளவு பெரிய கேடுகெட்ட செயலாகும். அடிமைப்பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் அவர்களை கற்பழிப்பது ஒரு பெருங்குற்றம். இதோடு கூட, அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பணத்தைச் சம்பாதிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் பாருங்கள்?

3) இந்த வாக்கியத்தில், அப்படிப்பட்ட முஸ்லிம்கள் “காஃபிர்கள் ஆவார்கள்” என்றோ, அல்லது, அவர்கள் செய்வது ”ஷிர்க்” என்றுச் சொல்லக்கூடிய அளவிற்கு பெரிய பாவம் என்றோ அல்லாஹ் சொல்லவில்லை? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமென்றும்? அல்லாஹ் குர்-ஆனில் இவ்வசனத்தில் குறிப்பிடவில்லை. 

4) இப்படிப்பட்ட காரிங்கள் செய்யும் முஸ்லிம்கள் “காஃபிர்கள்” என்று நம் முஸ்லிம் அறிஞர்கள் ஃபத்வா கொடுப்பார்களா? இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும்? என்று தண்டனையை நிர்ணயிப்பார்களா?

5) பல பக்கங்கள் விளக்கங்களை எழுதிய பிஜே அவர்கள், இந்த விவரம் குறித்து ஒரு விளக்கமாவது கொடுத்திருக்கின்றாரா? பிஜே அவர்களின் கருத்துப்படி, முக்கியமாக TNTJ குழுவில் உள்ள முஸ்லிம்களின் கருத்துப்படி, இப்படிப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டும்? ஒருவேளை, இவ்வசனத்தில் அல்லாஹ்வே அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காத பட்சத்தில் “நாங்கள் அவர்களுக்கு இன்ன தண்டனை கொடுக்கப்படவேண்டுமென்று ஃபத்வா கொடுத்தால், நாங்கள் அல்லாஹ்வோடு மோதுகின்றவர்களாக கருதப்படுவோம்” என்று பயப்படுகின்றீர்களா?

6) இவ்வாக்கியத்தில் வரும் கேவலமான விவரத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாத அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தன் தமிழாக்கத்தில் “(எனினும், நிர்ப்பந்தித்தவன் பெரும் பாவி ஆகின்றான்.)” என்று எழுதியிருப்பது? ஏற்றத்தக்கதா? இவர் அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிராக எழுதியதாக கருதப்படவேண்டுமா? 

7) பாகவி அவர்கள், அப்படிப்பட்ட முஸ்லிம்கள் ”பெரும் பாவிகள்” என்று முத்திரை குத்துவது பற்றி பிஜே மற்றும் இதர முஸ்லிம் அறிஞர்களின் கருத்து என்ன? அதுவும் ”வெறும் பாவியல்ல”, “பெரும் பாவி” என்று இவர் கூறுகின்றார். அப்படியானால், பெரும் பாவியாகிய அந்த முஸ்லிமுக்கு, ஷரியா சட்டத்தின் படி என்ன தண்டனை கொடுக்கப்படவேண்டும்? தற்காலத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இப்பாவத்தைச் செய்யும் முஸ்லிமுக்கு என்ன தண்டனையுள்ளது, யாராவது இந்த விஷயத்தில் தெளிவான விளக்கம் அளிக்கமுடியுமா?

8) பாகவி போன்ற ஒரு முஸ்லிமுக்கு இந்த பாவம் “பெரும்  பாவம்” என்று தோன்றியுள்ளது, ஆனால் அல்லாஹ்விற்கும், இதர முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றவில்லை?

9) ஒருவேளை, குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் இந்த பெரும் பாவத்துக்கு என்ன தண்டனையை அல்லாஹ் நியமித்துள்ளான் என்று ஆராய்ச்சி செய்து, முஸ்லிம்கள் எனக்கு தெரிவித்தால், நான் இந்த கட்டுரையில் அதனை “தமிழ் முஸ்லிம்கள் கொடுத்த மேலதிக விளக்கம்/பதில்” என்று தலைப்பிட்டு, அதனை அப்படியே பதித்து, என் கட்டுரையில் எந்த இடத்தில் மாற்றம் செய்யமுடியுமோ, அங்கு மாற்றம் செய்து பதிப்பேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 

10) அல்லாஹ் ஒரே ஒரு வாக்கியத்தில், ”அடிமைப்பெண்களை முஸ்லிம்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது, அப்படி செய்பவர்கள் பெரும் பாவிகள் ஆவார்கள், அது ஷிர்க் ஆகும்” என்று குர்ஆனில் சொல்லியிருந்தால், முஸ்லிம்கள் அதனை நிச்சயம் பின்பற்றியிருந்திருப்பார்களே! ஆனால், அடிமைப்பெண்களின் துரதிஷ்டம்! எனக்கு தெரிந்தவரை குர்-ஆனில் அப்படி அல்லாஹ் சொல்லவே இல்லை. இதனை மறுப்பவர்கள் குர்-ஆனிலிருந்து மேற்கண்டது போல அல்லாஹ் சொல்லியிருந்தால், அந்த வசனத்தை குறிப்பிடவும். நான் இந்த கட்டுரையில் அவ்வசனத்தை பதித்து, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பேன். 

முடிவுரை: 

குர்-ஆன் 24:33ஐ நாம் ஆய்வு செய்தோம். எனக்கு தெரிந்த விளக்கத்தை நான் கொடுத்தேன். பிஜே முதற்கொண்டு, இதர முஸ்லிம் அறிஞர்களிடமிருந்து நான் இக்கட்டுரைக்கு பதிலையும், விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கிறேன். நான் வெளிப்படையாக அல்லாஹ் மீது குற்றம் சுமத்தியுள்ளேன், இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் படி பிஜே அவர்களை கேட்டுக்கொள்கிறேன், தம்முடைய குர்-ஆன் விளக்கத்தில் இதற்கான பதிலை விளக்கமாக எழுதும் படி, முஸ்லிம்கள் அவரை நிர்பந்திக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். யாரேனும் அவரை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட பிஜே அவர்களை  அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


உமரின் குர்-ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

பிஜே அவர்களுக்கு மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்