பாகம் 2 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்: புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு

[கிறிஸ்தவ போதகரும் உமரும் சந்தித்து உரையாடிய முதல் பாகத்தை இந்த தொடுப்பில் ("கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1") படிக்கவும். 

இப்போது இந்த கிறிஸ்தவ போதகர் தன் சபையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, தன் சபை விசுவாசிகளுடன் உமர் மற்றும் அவருடைய நண்பன் ஜான்சன் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இனி அந்த சபையின் விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை இந்த கட்டுரையில் காண்போம். அந்த போதகர் அறிமுக உரையை முடித்துவிட்டு, நேரடியாக கேள்வி பதில்களுக்கு மீதமுள்ள நேரத்தை கொடுத்துவிட்டார்.]


புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பு

உமர்: கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, இயேசுவின் நாமத்தில் எங்கள் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். என்னோடு சகோதரர் ஜான்சன் அவர்கள் வந்துள்ளார்கள், அவரும் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். உங்கள் போதகர் ஏற்கனவே அறித்தபடி, இன்று நாம் முஹம்மது மற்றும் அவரது நபித்துவம் பற்றிய கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கூட்டத்தில் நாம் இதர தலைப்புகளில் பேசுவோம். 

இப்போது நாம் நேரடியாக முதல் கேள்விக்குச் செல்வோம். உங்களில் யார் முதல் கேள்வியை கேட்கப்போகிறீர்கள்? 

[முதல் கேள்வியை கேட்பதற்கு, ஒரு கரம் மேலே எழும்புகிறது, முதல் கேள்வி கேட்கப்படுகின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகும்.]

கேள்வி 1: என் பெயர் ஜெபராஜ். நான் ஒரு கிளைச் சபையின் போதகராக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், கிறிஸ்தவர்களாகிய நாம் இஸ்லாமியர்களுக்காக ஜெபித்தால் மட்டும் போதாதா? அவர்களுக்கு சுவிசேஷத்தை அதாவது நற்செய்தியை கூறினால் போதாதா? ஏன் நாம் அவர்கள் வேதமாகிய குர்‍ஆனை படிக்கவேண்டும் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை படித்து இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்? இஸ்லாமை கற்க நாம் ஏன் நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டும்?

உமர்: முதலாவது சில கேள்விகளுக்கு நம்முடைய சகோதரர் பதில் அளிப்பார்கள், ஏனென்றால், அவர் அனேக இஸ்லாமியர்களோடு நேரடியாக உரையாடியுள்ளார், அவருக்கு இந்த விஷயத்தில் அதிக அனுபவம் உண்டு. சகோதரர் ஜான்சன் வாங்க‌.{சகோ. ஜான்சன் பதில் அளிக்கிறார்] 

சகோதரர் ஜான்சன்:

கர்த்தருடைய நாமத்தில் உங்கள் அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. 

நீங்கள் ஒரு அடிப்படையான கேள்வியைத் தான் கேட்டு இருக்கிறீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் இஸ்லாம் பற்றி ஓரளவாவது கற்றுக்கொள்ளுங்கள் என்று போதகர்களுக்கு சொல்லுகிறோமோ! அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. 

கிறிஸ்தவ போதகர்கள் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு சுவிசேஷம் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதாவது, நீங்கள் இஸ்லாமியர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் போது, அவர்கள் எதிர் கேள்விகளை கேட்பார்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாட வேண்டுமென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

இமாம்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். பைபிளுக்கு எதிரான அனேக கருத்துக்களை இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இது மட்டுமல்லாமல், பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்ஆன் மறுக்கிறது. உதாரணத்திற்கு கீழ்கண்டவைகளைச் சொல்லலாம்:

1) இஸ்லாமின் படி, இயேசு மற்ற தீர்க்கதரிசிகளைப் போல ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவர் தேவகுமாரனல்ல. 

2) இஸ்லாமின் படி, இயேசு பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும் இரட்சகர் அல்ல (அ) அவர் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை. 

3) இஸ்லாமின் படி, இயேசுவிற்கு அடுத்தபடியாக, தேவன் முஹம்மதுவை அனுப்பினார், எனவே, முந்தையை தீர்க்கதரிசிகள் சொன்ன போதனைகளின் படி வாழும் மக்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ), இப்போது அந்த வரிசையில் வந்த முஹம்மதுவை நம்பவேண்டும். அவரை தம்முடைய வழிகாட்டியாக பாவித்து வாழவேண்டும், வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடவேண்டும்.

இஸ்லாமியர்களின் சிறுவயது முதற்கொண்டு அவர்களுக்கு மேற்கண்ட விதமான போதனைகள் போதிக்கப்படுவதினால், அவர்களுக்கு நற்செய்தியை சொல்லும் போது, அவர்கள் ஒரு சில கேள்விகளையாவது கேட்பார்கள். ஆகையால், குறைந்தபட்சமாக, போதகர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறவேண்டும், இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகள் எவைகள், வேற்றுமைகள் எவைகள் என்பதை அறியவேண்டும். 

ஆகையால், முதலாவது இஸ்லாமியர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும், அதன் பிறகு அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்ல நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். இயேசுவின் நற்செய்தி இஸ்லாமியர்களை சென்றடைய அனேக தடைகள் உள்ளன, அவைகளில் ஒரு தடை, "இயேசு பற்றியும், பைபிள் பற்றியும்" அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தவறான விவரங்களாகும். ஆகவே, அவர்கள் தவறாக புரிந்துவைத்துக்கொண்டுள்ள விவரங்களுக்கு நாம் பதில்களைக் கொடுத்தால், அவர்களின் சந்தேகங்களை நாம் தீர்த்துவைத்தால் தான் சுவிசேஷம் அவர்களை சென்றடையும், அவர்களும் தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக மாறுவார்கள். 

இஸ்லாமை கற்க போதகர்களாகிய நீங்கள் செலவிடும் நேரம் வீணான நேரமல்ல, அது தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக செலவிடப்படும் சிறந்த முதலீடு ஆகும். எனவே, உங்கள் ஜெப அறையில் அந்தரங்கத்தில் அவர்களுக்காக ஜெபியுங்கள், அதே நேரத்தில் வெளியரங்கமாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து, நற்செய்தியை கூறுங்கள். 

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 2: என் பெயர் தாமஸ். நான் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "என்னுடைய முஸ்லிம் நண்பர் "முஹம்மது கடைசி தீர்க்கதரிசி" எனவே, கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரை நபி (தீர்க்கதரிசி) என்று ஏற்கவேண்டும் மற்றும் அவரை பின்பற்ற வேண்டும்" என்று கூறுகிறார். முஹம்மது கடைசி தீர்க்கதரிசியா? முஹம்மது பற்றிய பைபிளின் கருத்து என்ன?

சகோதரர் ஜான்சன் - பதில் 2: 

இது மிகவும் முக்கியமான கேள்வி, அதே நேரத்தில் பைபிளை படிக்கும் ஒரு நபர் சுலபமாக பதில் தரக்கூடிய கேள்வியும் இதுவே. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டை தொடர்ந்து படிக்கும் ஒரு நபர் இந்த கேள்விக்கு சுலபமாக பதில் அளித்துவிடமுடியும். இக்கேள்விக்கான பதிலை நான் விவரிக்கும் போது, பைபிளிலிருந்து சில கேள்விகளை உங்களிடம் கேட்பேன், அதற்கு உங்களில் சிலர் பதில் கூறலாம். நீங்கள் கூறும் பதிலே இந்த கேள்விக்கான பதிலாக அமையும். 

இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வந்தாரா? 

1) என் முதல் கேள்வி என்னவென்றால், "புதிய ஏற்பாட்டில்" இயேசு எங்கேயாவது தனக்கு பின்பாக ஒரு "தீர்க்கதரிசி" வருவார் அவரை நீங்கள் (கிறிஸ்தவர்கள்) பின் பற்றவேண்டும் என்று கூறியுள்ளாரா? 

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று: இயேசு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று கூறவில்லை, ஆனால், தனக்கு பின்பு "ஒரு தேற்றரவாளனை" அனுப்புவதாக கூறியுள்ளார் என்று பதில் அளித்தார். 

சகோதரர் ஜான்சன் : சரியாகச் சொன்னீர்கள், இப்போது அடுத்த கேள்வி: "அந்த தேற்றரவாளன்" வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று இயேசு கூறினார்? 100 ஆண்டுகள் 200 ஆண்டுகள் அல்லது 600 ஆண்டுகள் என்று இயேசு கூறினாரா? 

கூட்டத்திலிருந்து ஒருவர் பதில் கூறுகிறார்: இயேசு எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்றுச் சொல்லவில்லை, ஆனால், தம்முடைய சீடர்கள், அந்த தேற்றரவாளன் வரும்வரை எருசலேமில் காத்திருக்கும் படி கூறினார், அதன் பின்பு தான் "நீங்கள் எனக்கு சாட்சிகளாக ஊழியம் செய்யலாம்" என்று இயேசு கூறியுள்ளார். 

சகோதரர் ஜான்சன்: ஆக, தம்முடைய சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தேற்றரவாளன் வருவார் என்பது தெளிவு. அடுத்த கேள்வி: இயேசு கூறியபடி அந்த தேற்றரவாளன் வந்தாரா? இல்லையா? 

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று பதில் கூறுகிறார்: 

இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு பல சந்தர்பங்களில் தன்னை உயிரோடு இருப்பவராக காண்பித்து, 40 நாட்கள் அவர்களோடு சம்பாஷித்தார், அதன் பிறகு பரமேரிச் சென்றார், பரிசுத்த ஆவியாவர் வரும்வரை எருசலேமில் காத்திருங்கள் என்றார். அதே போல, சீடர்கள் காத்திருந்தார்கள், 10 நாட்கள் கழித்து பரிசுத்த ஆவியானவர் வந்தார். அதன் பின்பு சீடர்கள் ஊழியம் செய்தார்கள். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம். 

சகோதரர் ஜான்சன்: ஆக, இயேசு தனக்கு பின்பு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று சொல்லவில்லை, மற்றும் அவர் வருவார் என்றுச் சொன்னவர் "பரிசுத்த ஆவியானவரைத் தான்". பரிசுத்த ஆவியானவரும் சில நாட்களுக்குள்ளேயே வந்தார். இப்படி இருக்கும் போது "தேற்றரவாளன்" என்று இயேசு குறிப்பிட்டது "முஹம்மதுவைத் தான்" என்று இஸ்லாமியர்கள் சொல்வது எல்லாம் சுத்தப் பொய்யாகும். நம்முடைய வேதத்தில் உள்ள விவரங்களை திருத்திச் சொல்லி, நம்மையே வஞ்சிக்க இஸ்லாமிய அறிஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் .

இரண்டாவதாக, இன்னொரு கோணத்தில் "முஹம்மது கடைசி நபியா?" என்பதை புதிய ஏற்பாட்டிலிருந்து காண்போம். 

இயேசு இரட்சிப்பை (அ)  தம் மார்க்கத்தை அறைகுறையாக விட்டுச் சென்றாரா? அல்லது முழுமைப்படுத்திச் சென்றாரா? அதாவது இயேசு "இரட்சிப்பை" முழுவதுமாக முடித்துச் சென்றாரா? அல்லது "நான் பாதியை முடித்தேன், எனக்கு பின்பு ஒரு தீர்க்கதரிசி வருவார் அவர் மீதியை முடிப்பார்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரா? 

புதிய ஏற்பாட்டை தன் தாய் மொழியில் அல்லது தனக்கு புரியும் மொழியில் படிக்கும் கிறிஸ்தவர் இதற்கு சுலபமாக பதிலைக் கூறுவார். 

நீங்கள் எல்லாரும் புதிய ஏற்பாட்டை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஆகையால், இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள். 

கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து நின்று "இயேசு சிலுவையில் மரிக்கும் போது 'முடிந்தது' என்றுச் சொல்லி மரித்தார், அதாவது தாம் எதற்காக வந்தாரோ அதை முடித்துவிட்டேன், எதையும் மீதி வைக்கவில்லை என்றுச் சொல்லி மரித்தார், ஆகையால் இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்தியே சென்றார்" என்று கூறினார். 

சகோதரர் ஜான்சன்: சகோதரரே சரியாகச் சொன்னீர்கள். இது ஒரு முக்கியமான விவரம். அடுத்த விவரத்தை யார் கூறப்போகிறீர்கள்? 

இன்னொரு சகோதரர் எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "இயேசு நமக்காக மரித்தது மாத்திரமல்ல, மூன்றாம் நாளில் தாம் சொன்னதுபோலவே உயிர்த்தெழுந்தார். இதோடு நின்றுவிடாமல், தமக்கு அடுத்து "எப்படி ஊழியம் செய்யவேண்டும்?" போன்ற விவரங்களை தம்முடைய சீடர்களுக்கு கூறிவிட்டுச் சென்றார். அவர் பரமேரிச்சென்ற போது, தூதர்கள் "இயேசு எப்படி சென்றாரோ அதே போல வருவார்" என்றுச் சொல்லி "மறுபடியும் இயேசு வருவார்" என்பதை உறுதிப்படுத்தினார்கள், இன்னொரு தீர்க்கதரிசி முஹம்மது என்ற பெயரில் வருவார் அவருக்காக காத்திருங்கள் என்று தேவதூதர்கள் கூறவில்லை. ஆகையால், இயேசு தம்முடைய இரட்சிப்பை அறைகுறையாக விட்டுவிட்டுச் செல்லவில்லை, அதனை முழுமைப்படுத்திச் சென்றார்." 

சகோதரர் ஜான்சன்: இதுவும் ஒரு சரியான பதில் தான். மேலும் யாராவது எதையாவது கூறவிரும்புகிறீர்களா? 

ஒரு சகோதரி எழுந்து நின்று இப்படியாக கூறினார்: "நாம் அப்போஸ்தலர் நடபடிகளை படித்தால், அதில் இயேசு தம் சீடர்கள் ஊழியம் செய்யும் போது எப்படி தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார், எவ்விதம் அற்புதங்கள் அடையாளங்கள் மூலமாக, தம்முடைய இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை பார்க்கலாம்". இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற ஒரு கோட்பாடு அல்லது எதிர்பார்ப்பு வேண்டும் என்று பைபிள் எங்கும் கூறவில்லை. மிகவும் முக்கியமான விவரம் என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய "வெளிப்படுத்தின விசேஷம்" எல்லாவற்றையும் முத்தரித்து விடுகின்றது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள், இன்னொரு தீர்க்கதரிசி வரவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறது. ஆக, இன்னொரு தீர்க்கதரிசி இல்லை.. வரவேண்டிய அவசியமும் இல்லை. இயேசு இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார், இன்னொருவர் வந்து இடையில் நுழைவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் பைபிள் அனுமதிக்கவில்லை, முக்கியமாக "வெளிப்படுத்தின விசேஷம்" என்ற நூல் அனுமதிப்பதில்லை. 

சகோதரர் ஜான்சன்:

நீங்கள் அனைவரும் கூறிய விவரங்கள் சரியான விவரங்களாகும். இதனை தொகுத்து நான் இப்போது சுருக்கமாக கூறுகிறேன். 

இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார், இஸ்லாமியர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், "இயேசு தம் மார்க்கத்தை முழுமைப்படுத்திச் சென்றார்", அதனை அறைகுறையாக விட்டுச் செல்லவில்லை. இதனை நாம் புதிய ஏற்பாட்டில், கீழ்கண்ட விவரங்களை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். 

1) இயேசுவின் சிலுவை மரணம்

2) அவரது உயிர்த்தெழுதல்

3) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தமது சீடர்களுடன் அவர் பகிர்ந்துக்கொண்ட விவரங்கள்

4) தம் சீடர்கள் உலகமனைத்திற்கும் நற்செய்தி கூறுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவருக்காக எருசலேமில் காத்திருக்கும் படி இயேசு கூறிய கட்டளை. இயேசு கூறியபடியே பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வருதல்

5) அதன் பிறகு, அப்போஸ்தலர்கள் தம் ஊழியத்தை செய்தல், சீடர்கள் மூலமாக இயேசு அற்புதங்கள் செய்து அந்த ஊழியத்தை ஆசீர்வதித்தல்.

6) கடைசியாக, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உலகத்தின் முடிவு, மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை, கடைசி நியாயத்தீர்ப்பு போன்றவிவரங்களை தீர்க்கதரிசனங்களாக இயேசு கூறுதல்.

இந்த மேற்கண்ட அனைத்து விவரங்களை நாம் கூர்ந்து கவனித்தால், இயேசு தம் இரட்சிப்பை முழுமைப்படுத்திச் சென்றார் என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். இதனை அறிய பெரிய பட்டப்படிப்போ, பல ஆண்டுகால பைபிள் கல்லூரி படிப்போ தேவையில்லை. புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை தனக்கு புரியும் மொழியில் படிக்கும் எந்த ஒரு சராசரி மனிதனும் (முஸ்லிமும்) புரிந்துக்கொள்வான். 

இப்போது நாம் இரண்டு விவரங்களைக் கண்டோம்:

முதலாவது, இயேசு தமக்கு பிறகு "ஒரு தீர்க்கதரிசி" வருவார் என்று கூறவில்லை, அதற்கு பதிலாக‌ அவர் பரிசுத்த ஆவியானவர் வருவார் என்று கூறினார். பரிசுத்த ஆவியானவரும் அவர் கூறியபடியே வந்தார். இரண்டாவதாக, இயேசு தம் இரட்சிப்பை முழுவதுமாக 100 சதவிகிதம் முழுமைப்படுத்தியே சென்றார். 

எனவே, புதிய ஏற்பாட்டின் படி:

1) முஹம்மது என்ற பெயரில் ஒருவர் வருவார் என்று புதிய ஏற்பாடு கூறவில்லை, இயேசுவும் கூறவில்லை. 

2) புதிய ஏற்பாட்டில் முஹம்மது பற்றி கூறப்பட்டுள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினால் அது மிகப்பெரிய பொய்யாகும். கிறிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தான் செய்யும் சூழ்ச்சியாகும்.

3) இயேசுவிற்கு பிறகு இன்னொரு தீர்க்கதரிசி உலக மக்களை வழிநடத்த அவசியமில்லை.

4) நம்முடைய தேவன் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி முஹம்மது அல்ல.

5) கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பவேண்டிய அவசியமும் இல்லை. கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நம்பினால் தங்கள் இரட்சிப்பை இழந்துவிடுவார்கள்.

எனவே அருமை சகோதர சகோதரிகளே, முஹம்மது கடைசி தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறினால் அது "பொய்" என்பதை அறியுங்கள். உங்கள் பைபிள் முஹம்மது பற்றி கூறுகிறது என்று இஸ்லாமியர்கள் கூறினால், "நம்முடைய தாய் மொழியில் பைபிளை படிக்கும் நம்மிடமே வந்து நம்மை வஞ்சிக்க" அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை அறியுங்கள். தன்னுடைய வேதத்தை (குர்‍ஆனை) தன் தாய் மொழியில் படிக்க அவ்வளவாக விரும்பாத இஸ்லாமியர்கள் நம் தாய் மொழியில் நாம் படிக்கும் வேதத்தை நமக்கு கற்றுக்கொடுக்க‌ வருவது என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை கவனியுங்கள். 

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 3: என் பெயர் சாமுவேல், என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் படி "முஹம்மது ஒரு தீர்க்கதரிசி" இல்லை என்பது உண்மை, அப்படியானால், புதிய ஏற்பாடு முஹம்மதுவை எப்படி காண்கிறது? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டின் படி நாம் "முஹம்மதுவை" எப்படி அழைக்கலாம் அல்லது புதிய ஏற்பாட்டின் படி "அவர் யார்?"

சகோதரர் ஜான்சன்:

மிகவும் அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு விடையை காண்பதற்கு முன்பாக, நான் உங்களிடம் ஒரு 100 ரூபாய் நோட்டை தருகிறேன், அதனை உங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்து நான் உங்களிடம் கொடுத்த நோட்டு நல்ல நோட்டா? என்பதை பார்த்துச் சொல்லுங்கள். 

[சகோதரர் ஜான்சன் ஒரு 100 ரூபாய் நோட்டை கேள்வி கேட்டவரிடம் தருகிறார், அதனை அவர் வாங்கி தன்னிடம் இருக்கும் 100 ரூபாய் நோட்டுடன் ஒப்பிடுகிறார், இப்போது சகோதரர் ஜான்ச‌ன் ம‌றுப‌டியும் பேசுகிறார்..] 

ஜான்சன்: நான் கொடுத்த நோட்டுடன் உங்கள் நோட்டை ஒப்பிட்டீர்களா? 

சாமுவேல்: ஆம் நான் ஒப்பிட்டேன். 

ஜான்சன்: சரி, முடிவு என்ன? 

சாமுவேல்: நீங்கள் கொடுத்த நோட்டு, இந்திய அரசாங்கம் அச்சடித்த நோட்டு அல்ல.  

ஜான்சன்: சரி, இதனை எப்படி கண்டுபிடிச்சீங்க? 

சாமுவேல்: என்னிடமுள்ள நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஆகையால் அது அரசாங்கம் அச்சடித்த நோட்டு இல்லை என்பதை கண்டுபிடித்தேன். 

ஜான்சன்: சரி, அது நல்ல நோட்டு இல்லை என்றுச் சொல்லிவிட்டீர்கள், அதற்கு இன்னொரு பெயர் என்ன? 

சாமுவேல்: ம்ம்ம்ம்ம் நல்ல நோட்டு இல்லையானால், அதற்கு பெயர் "கள்ள நோட்டு"... 

ஜான்சன்: சரியாக பதில் சொன்னீங்க. இப்போது பைபிளின்படி முஹம்மது "தீர்க்கதரிசி" இல்லை என்று நிருபணமாகிவிட்டதால், அவரை பைபிள் எப்படி அழைக்கும்? 

சாமுவேல்: ம்ம்ம்ம்.... "கள்ளத் தீர்க்கதரிசி" என்று பைபிள் அழைக்கும்...  

ஜான்சன்: சரியாகச் சொன்னீர்கள். பைபிளின் படி முஹம்மது ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" ஆவார். 

இயேசு தமக்கு பின்பு அனேக கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள் என்று எச்சரித்துள்ளார். அவர்கள் கூடுமானவரை கிறிஸ்தவர்களையும் ஏமாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார். புதிய ஏற்பாடு அனேக இடங்களில் இப்படிப்பட்ட கள்ளத் தீர்க்கதரிசிகள் வருவார்கள், அவர்களை விசுவாசிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறது.  

முதலாவதாக, பைபிள் "முஹம்மதுவை" கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைக்கிறது:  

முதலாவது புதிய ஏற்பாடு முஹம்மதுவை "கள்ளத் தீர்க்கதரிசி" அல்லது "பொய் தீர்க்கதரிசி" என்று பட்டம் சூட்டுகிறது என்பதை எல்லா கிறிஸ்தவர்களும் மனதில் வைக்கவேண்டும்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15) 

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். (2 கொரிந்தியர் 11:13-15)

இரண்டாவதாக, பைபிள் அவரை "பொய்யர்" என்று கூறுகிறது: 

பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்று வேதம் கூறுகிறது. முஹம்மது "பிதாவையும் குமாரனையும் மறுதலித்தார்", ஆகையால், இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், பைபிள் முஹம்மதுவை "பொய்யன்" என்ற பெயரையும் சூட்டுகிறது. 

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.  ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.  நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.  உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன் . (1 யோவான் 2: 22-26)

மூன்றாவதாக, பைபிள் அவரை "சபிக்கப்பட்டவன்" என்று அழைக்கிறது 

கீழ்கண்ட வசனங்களின் படி, பைபிள் கூறும் நற்செய்தியை அல்லாமல் "வேறு ஒரு நற்செய்தியை", "வேறு ஒரு இயேசுவை" மனிதர்களுக்கு போதிக்கிறவன், அவன் மனிதனாக இருந்தாலும் சரி, வானத்திலிருந்து வருகின்ற தூதனாக இருந்தாலும், "அவன் சபிக்கப்பட்டவன்" என்று பைபிள் கூறுகிறது. 

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;  வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் . கலாத்தியர் 1:6-9.

ஆக, புதிய ஏற்பாட்டின் படி முஹம்மது "ஒரு பொய்யர்", "கள்ள தீர்க்கதரிசி" மற்றும் "சபிக்கப்பட்டவர்" ஆவார். இஸ்லாமியர்களின் மனம் புண்படும் என்று நாம் இவைகளை மறைத்துவைத்தால், சாத்தான் நம்மை வஞ்சிக்க நாமே அவனுக்கு வழி வகுத்து கொடுக்கிறவர்களாக கர்த்தரின் பார்வையில் காணப்படுவோம். 

முஸ்லிம்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, நம்முடைய வேதம் கூறுவதை நாம் நம்பவேண்டாமா? "இயேசு தேவகுமாரன் இல்லை" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், கிறிஸ்தவர்கள் துக்கப்படுவார்களே என்று அவர்கள் நினைத்து, நம்மிடம் "இயேசு இறைவன் தான்" என்று கூறுகிறார்களா என்ன? இல்லையல்லவா? அதே போலத்தான், சத்தியம் சத்தியமே. அதனை சொல்வது நம்முடைய கடமை. 

அடுத்த கேள்விக்கு போவோம்.

கேள்வி 4: என் பெயர் எஸ்தர். எனக்கு ஒரு இஸ்லாமிய தோழி இருக்கிறாள், அவள் என்னிடம் "முஸ்லிம்களாகிய நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம், அதே போல நீங்கள் ஏன் முஹம்மதுவை மதிப்பதில்லை, கவுரப்படுத்துவதில்லை" என்று கேட்கிறாள்? இதற்கு நான் எப்படி பதில் கூறுவது?

சகோதரர் ஜான்சன்: உங்கள் தோழியிடம், "மதிப்பு, மரியாதை, கவுரவம்" என்றால் என்ன? என்று கேளுங்கள். 

இயேசுவை அவர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொல்வது "மிகப் பெரிய வஞ்சகமாகும்". "ஒருவரை நாங்கள் மதிக்கிறோம்" என்பது எப்படி வஞ்சகமாகும்? என்ற கேள்வி முஸ்லிம்களுக்கு எழலாம், இதனை நான் இப்போது விளக்குகிறேன். 

இயேசுவிற்கு கவுரவம் எது? 

முதலாவதாக, ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றுச் சொன்னால், அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை மதிக்கவேண்டும். அதாவது, இயேசுவை இஸ்லாமியர்கள் மதிக்கிறார்கள் என்றுச் சொன்னால், "இயேசு இறைக்குமாரனாக இருக்கிறார், அந்த ஸ்தானத்தில் அவரை மதித்தால்" அது உண்மையாக கவுரமாகும். இயேசு தேவகுமாரன் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகள் பொய் என்றுச் சொல்லி குற்றப்படுத்திவிட்டு, கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக, "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்று இஸ்லாமியர்கள் கூறுவது எப்படி உண்மையான கவுரமாகும்? இது வஞ்சகம் அல்லவா? 

முஹம்மதுவிற்கு கவுரவம் எது? 

இன்னொரு உதாரணத்தை இஸ்லாமிய நிலையிலிருந்து பார்ப்போம். அதாவது, கிறிஸ்தவர்களாகிய நாம் கீழ்கண்டவாறு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், இதனை இஸ்லாமியர்கள் எப்படி காண்பார்கள்? " எங்கள் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எவ்வளவாக மதிக்கிறார்கள் பார்த்தீர்களா?" என்று சந்தோஷப்படுவார்களா? அல்லது வஞ்சகம் என்பார்களா? 

1) கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உங்கள் முஹம்மதுவை உங்களைவிட அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

2) முஹம்மது ஒரு நல்ல மனிதர், நேர்மையானவர்.

3) முஹம்மது ஒரு இறைத்தூதர் அல்ல, அவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமே.

4) முஹம்மதுவை ஜிப்ராயீல் தூதர் சந்திக்கவில்லை.

5) முஹம்மதுவிற்கு இறைவனிடமிருந்து தூதுகள் வரவில்லை.

6) முஹம்மதுவிற்கு குர்‍ஆன் இறங்கியது என்று இஸ்லாமியர்கள் சொல்வது சுத்தப் பொய்யாகும், முஹம்மதுவிற்கு அப்படிப்பட்ட வெளிப்பாடு ஒன்றும் வரவில்லை.

7) முஹம்மதுவை நாங்கள் அதிகமாக மதிக்கிறோம், கவுரப்படுத்துகிறோம்.

மேற்கண்ட விதமாக கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பற்றி கூறி, பார்த்தீர்களா நாங்கள் எவ்வளவு அதிகமாக முஹம்மதுவை மதிக்கிறோம் என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா? 

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று நம்பி, அவருக்கு குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று நம்பி, பிறகு அவரை நாங்கள் மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் அது உண்மையான கவுரமாக இருக்குமே ஒழிய, முஹம்மதுவின் "நிலையை" அதாவது அவரது நபித்துவத்தை மறுத்துவிட்டு, குர்‍ஆனை மறுத்துவிட்டு, அவரை மதிக்கிறோம் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால், அது எப்படி மரியாதை செலுத்துவதாகும்? என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். 

இதே போலத்தான், இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்துவிட்டு, அவர் உண்மையாக யாராக இருந்தார் என்பதை மறுத்துவிட்டு, அவரது போதனைகளை உள்ளடக்கிய‌ பைபிளை குற்றம் கூறிவிட்டு, பலவீனமான கிறிஸ்தவர்களிடம் வந்து "நாங்கள் உங்கள் இயேசுவை மதிக்கிறோம்" என்றுச் சொல்வது எப்படி உண்மையான மரியாதையாக கருதப்படும்? 

கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை...எச்சரிக்கை... 

சாத்தனுடைய சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்தவர்களாக, இப்படிப்பட்ட இஸ்லாமிய வாதங்களை நம்பவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன். 

உங்களுடைய நித்தியம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

இனி எந்த இஸ்லாமியராவது , "நாங்கள் உங்கள் இயேசுவையும், அவரது தாயாகிய மரியாளையும், உங்களை விட அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று உங்களிடம் கூறினால். அதற்கு நீங்களும், "ஆமாம், நாங்களும் உங்கள் முஹம்மதுவை மதிக்கிறோம், அவர் ஒரு நல்ல மனிதர் ஆனால், இறைத்தூதர் அல்ல, அவருக்கு குர்‍ஆன் இறங்கவில்லை, ஆனாலும்,அவர் நல்ல மனிதர், நாங்கள் அவரை அதிகமாக கவுரப்படுத்துகிறோம்" என்று  சொல்லிப் பாருங்கள். மரியாதை என்றால் என்ன கவுரவம் என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். 

இயேசுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால்,  பைபிள் "அவரை" எப்படி அடையாளம் காட்டுகிறதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள். 

முஹம்மதுவை யாராவது கவுரப்படுத்த விரும்பினால், குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவரை எவ்விதம் அடையாளம் காட்டுகின்றதோ அதன் படி அவரை கவுரப்படுத்துங்கள். 

இவ்விருவருடைய மூல ஆதாரங்களை மறுதலித்துவிட்டு, தங்கள் சொந்த நூல்களின் படி அவரை கவுரப்படுத்த முயன்றால், அது "வஞ்சகமாகும்". இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன், "கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஹம்மதுவை "முஹம்மது நபி (Prophet Muhamamd)" என்ற நிலையில் மதிப்பதில்லை, முஹம்மதுவை "திரு. முஹம்மது (Mr. Muhamamd)" என்ற நிலையில் மதிக்கிறோம்" அவ்வளவே. 

முடிவுரை: 

இந்த பாகத்தில் "புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் (கேள்வி பதில்களாக) கண்டோம், அடுத்த பாகத்தில் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றி இன்னும் மேலதிக விவரங்களைக் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம்... „ 

தமிழ் கிறிஸ்தவ உலகமே... கடைசி காலங்களில் அனேக வஞ்சகர்கள் எழும்பி, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது... இஸ்லாமியர்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.... ஒருவேளை இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ போதகராக இருப்பீர்களானால், "உங்கள் மீது உங்கள் ஆடுகள் பற்றிய கணக்கு கேட்கப்படும் என்பதையும், ஆடுகளை மேய்ப்பதில், அவர்களை சரியான ஞானத்தில் நடத்துவதும் உங்கள் கடமை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்". இஸ்லாம் பற்றி உங்கள் சபை விசுவாசிகளுக்கு எச்சரிக்கையிடும் படி கேட்டுக்கொள்கிறேன். 

இன்னும் கேள்விகள் தொடரும்..

மூலம்: http://isakoran.blogspot.in/2011/10/2_16.html

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் தொடர் கட்டுரைகள்