முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்ஆனா?
ஒருவேளை, நான் நாளை காலை எழுந்தவுடன்:
“எனக்கு ஒரு தேவதூதன் காணப்பட்டான், ஒரு புத்தகத்தை எழுதும்படி சொன்னான், அந்த புத்தகத்தின் வசனங்களை தானே இறைவனிடமிருந்து கொண்டு வருவதாகச் சொன்னான். அது பரிசுத்த புத்தகமாகும். அது முழு உலகத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட கடைசி வேதம் ஆகும்”
என்று அந்த தேவதூதன் சொன்னான் என்று நான் ஒரு அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்? நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா?
நீங்கள் என்னை பார்த்து சிரிப்பீர்கள்! நான் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று பட்டம் கட்டி விடுவீர்கள். ஒருவேளை, நான் பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தால், நான் சொல்வதை நம்பும்படியாக ஏதாவது சான்றுகளை காட்டும்படி என்னிடம் கேட்பீர்கள். அதாவது "நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன்" என்பதற்கு சான்றுகளை கேட்பீர்கள்.
"இப்படி சான்றுகளை கேட்கக் கூடாது, நான் ஒரு தேவதூதனை சந்தித்தேன் என்று சொல்லும்போது, அதனை நீங்கள் நம்பவேண்டும்" என்று நான் சொன்னால், என்னை ஒரு பைத்தியக்காரன் என்று முடிவு செய்துவிடுவீர்கள் அல்லவா?
ஒரு பேச்சுக்காக நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் நான் எழுதிய புத்தகத்தைப் படித்து பார்ப்பீர்கள். அதனை படிக்கும்போது முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனுக்கு முரண்படும் அனேக விவரங்கள் அதில் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
“என்னுடைய இந்த புத்தகத்தை மட்டுமே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் நேர் வழி, இது தான் வேதம், உங்களின் முந்தைய வேதமாகிய குர்ஆனை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் இது தான் வேதம்” என்று உங்களிடம் நான் சொன்னால், நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் அல்லவா? ஏனென்றால் என்னுடைய புத்தகத்தில் சொன்ன விவரங்களுக்கு சான்றுகளை நான் காட்டினால் தான் என் கருத்துக்கள் உண்மையானவைகளாக கருதப்படும்.
உடனே நான், என் புத்தகத்தில் சொன்னவைகள் தான் உண்மையானவைகள். என் புத்தகத்தில் சொல்லப்பட்ட விவரங்கள் குர்ஆனுடன் முரண்படுகிறது என்றால், குர்ஆன் மாற்றப்பட்டுவிட்டது என்று பொருள், அதை முஸ்லிம்கள் மாற்றிவிட்டார்கள் அதனால் தான் அது என் புத்தகத்திற்கு மாறுபடுகிறது என்று நான் சொன்னால், இதை ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்? நிச்சயமாக ஏற்கமாட்டீர்கள்! மேலும் இது ஒரு மடமையான கருத்து என்பீர்கள் அல்லவா! அறிவுடையோர் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்வீர்கள் தானே!
அதாவது, நான் ஒரு புதிய வேதத்தைக் கொண்டு வந்தால், குர்ஆனுக்கு முரணாக சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் சரியான சான்றுகளை நான் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, குர்ஆனை நான் குற்றப்படுத்தக்கூடாது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் கொண்டு வந்த புத்தகம் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு இதற்கு முன்பாக வந்த குர்ஆன் மாற்றப்பட்டது என்று சொல்வது முட்டாள்தனமாகும்.
கடைசியாக வந்த என்னுடைய புத்தகத்தின் கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, குர்ஆனை நியாயம் தீர்க்கக் கூடாது. இதற்கு பதிலாக, என்னுடைய புதிய புத்தகத்தை, இதற்கு முன்பு வந்த குர்ஆனின் கருத்துக்களின் அடிப்படையில் தான் நியாயம் தீர்க்க வேண்டும். ஒருவேளை, குர்ஆனுக்கு பின்பு வந்த என்னுடைய புத்தகமானது, குர்ஆனுக்கு முரண்படுமானால், என்னுடைய புத்தகம்தான் தவறானதாக கருதப்பட வேண்டுமே தவிர, குர்ஆன் தவறானது என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் முதலாவது குர்ஆன் வந்தது அதன் பிறகுதான் நான் ஒரு புதிய புத்தகத்தை அறிமுகம் செய்தேன். ஆகையால் குர்ஆனை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், என்னுடைய புது வேதத்தை குர்ஆனைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்.
சான்றுகளை யார் கொண்டு வர வேண்டும்? (The Burden Of Proof)
கிறிஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில், குர்ஆன் எழுதப்பட்டது. மக்கா என்னும் பாலைவன நகரில் ஒரு மனிதர், தன்னை ஒரு தேவதூதன் சந்தித்தான் குர்ஆன் வசனங்களை இறக்கினான் என்று சொன்னார். இப்படி நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால் "ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான், என்பதற்கு சான்று என்ன? இதனை யார் சரி பார்ப்பது? முஹம்மதுவை ஒரு தூதன் சந்தித்தான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது"? ஒரு தூதன் முஹம்மதுவை சந்தித்தான் என்பதற்கு முஹம்மதுவை தவிர வேறு யாருமே கண்கண்ட சாட்சி இல்லையே! உண்மையாகவே, அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நடந்ததா? என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இது மட்டுமல்ல, தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டவில்லை. உதாரணத்திற்கு முந்தைய தீர்க்கதரிசிகளாகிய மோசேயும், எலியாவும் இன்னும் இதர தீர்க்கதரிசிகளும் செய்து காட்டியது போல அற்புதங்களை முஹம்மது செய்து காட்டவில்லை.
முஹம்மது எந்த ஒரு அற்புதத்தையும் செய்து காட்டாமலேயே, குர்ஆன் என்ற ஒரு புத்தகத்தை இறைவேதம் என்று சொல்லி அறிமுகம் செய்தார். அந்த குர்ஆனில் முந்தைய வேதங்களாகிய தோரா ஜபூர் மற்றும் இன்ஜிலுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன. அதாவது பைபிளுக்கு முரணான அநேக கருத்துக்கள் குர்ஆனில் உள்ளன. பைபிள் எழுதப்பட்ட காலக்கட்டம், கி. மு. 1400 லிருந்து கி.பி. 95 வரைக்கும் ஆகும். மேலும் முஹம்மதுவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பரிசுத்த பைபிள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அக்காலத்தில் இருந்த அநேக நாடுகளில், பரவலாக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருந்தது. இருந்தபோதிலும் ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்ஆனை வைத்துக் கொண்டு, முஸ்லிம்கள் பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக முஸ்லிம்கள், குர்ஆன் சொல்வது தான் உண்மை என்று சான்றுகளை சேகரித்து கொடுத்திருக்கலாம். இது மட்டுமல்ல, முஹம்மது கூட முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டுவிட்டன என்று சொல்லவில்லை, முந்தைய வேதங்களில் உள்ளவைகள் தொலைந்து விட்டன என்றும் அவர் சொல்லவில்லை, அதற்கு பதிலாக குர்ஆனில் பல இடங்களில் முந்தைய வேதங்களை புகழ்ந்து தான் வசனங்கள் காணப்படுகின்றன. முந்தைய வேதங்கள் நேர்வழி என்றும், வெளிச்சம் என்றும் இறைவனின் சத்தியம் என்றும் குர்-ஆன் சொல்கிறது.
இதுவரை கண்ட விவரங்களின் படி, குர்ஆனைக் கொண்டு நீங்கள் பைபிளை சரி பார்க்க முடியாது அல்லது நியாயம் தீர்க்க முடியாது. அதற்கு பதிலாக, பைபிளைக் கொண்டு தான் நீங்கள் குர்ஆனின் நம்பகத்தன்மையையும் தெய்வீகத்தன்மையையும் சோதித்துப் பார்க்க வேண்டும். குர்ஆனின் நம்பகத்தன்மையை சரி பார்க்க, பைபிள் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் வந்தது. ஆகையால் சான்றுகளைக் கொண்டு வர வேண்டியது இஸ்லாமின் மீது விழுந்த கடமையாகும், முஸ்லிம்களின் மீது விழுந்த கடமையாகும். அது கிறிஸ்தவர்களின் மீது விழுந்த கடமை அல்ல. பைபிள் தான் குர்ஆனை பரிசோதிக்கிறது. குர்ஆன் உண்மையான வேதமா இல்லையா என்பதை பைபிளின் போதனைகள், கோட்பாடுகள் தான் முடிவு செய்யும். பைபிளும் மற்றும் குர்ஆனும் ஒன்றையொன்று முரண்படுமானால், முந்தைய வேதமாகிய பைபிளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கடைசியாக குர்ஆன் வந்த படியினாலே, தன்னுடைய கருத்துக்களுக்கு சரியான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டு வந்து தன்னுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ளவேண்டியது குர்ஆனின் கடமையாகும். அப்படி குர்ஆன் கொண்டுவரவில்லையென்றால், அது ஒரு பொய்யான புத்தகம் என்று முடிவு செய்யப்படவேண்டும்.
மூலம்: http://www.faithbrowser.com/bible-or-quran/