தேசப்பிதா மஹாத்மா காந்திக்கு என்ன நடந்தது? அல்லாஹ்விடம் கேட்டுப்பார்த்தால் என்ன பதில் கிடைக்கும்?

மகாத்மா காந்தி 1948இல் படுகொலை செய்யப்பட்டார், இந்த வரலாற்று விவரத்தை நாம் அனைவரும் அறிவோம். நாதுராம் கோட்சே என்ற இந்து தீவிரவாதியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது ஒரு வரலாற்று உண்மை, இன்றிலிருந்து 10 அல்லது 50 அல்லது 500 ஆண்டுகளானாலும் சரி, இந்த வரலாறு மாறாது, அப்படியே இருக்கும். 

இப்போது நாம் ஒரு கற்பனை செய்துப்பார்ப்போம். இன்றிலிருந்து 500 ஆண்டுகள் கழித்து, அதாவது கி.பி. 2548ஆம் ஆண்டில், சீனாவில் ஒருவர் “காந்தி சுட்டுக் கொல்லப்படவில்லை என்று அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்”. அதாவது காந்தி அவர்கள் அன்று (1948) கொல்லப்படவில்லை, அவர் தப்பித்துக்கொண்டார். அவரது இடத்தில், அவரைப்போன்று தோற்றமுள்ள‌ வேறு ஒரு நபர் சுட்டுக்கொள்ளப்பட்டார்.  

இப்படிப்பட்ட செய்தியை யாராவது சொன்னால், எப்படி இருக்கும்?

இங்கு இன்னொரு முக்கியமான விவரத்தையும் பார்ப்போம். நாம் மேலே சொன்ன அந்த சீனமனிதர்  இந்தியாவில் ஒருபோதும் கால் வைத்ததில்லை, மேலும் அவர் எந்த ஒரு இந்திய  மொழியையும் பேசமாட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதுமட்டுட்மல்ல, அவர் காந்தியையோ அல்லது அவரது சந்ததியினரையோ, அவரது  நாட்டுக்காரரையோ ஒருபோதும் சந்தித்ததில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்படி இருந்தபோதிலும், அவர் ஆணித்தரமாகவும் பிடிவாதமாகவும் காந்தியடிகள் கொல்லப்படவில்லை என்று கூறுகிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 

இந்த சீனப்பிரஜை  600 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியை, நடக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறார். அவர் சொல்வதை நாம் நம்புவோமா?

ஆதாரம் என்ன?

  • அவரது கூற்றுக்களுக்கான ஆதாரம் என்ன என்று அவரிடம் கேட்டால், 'எனக்கு ஒரு சக்தி/கடவுள் அறிவித்தது’ என்று அவர் கூறுகிறார்.
  • நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டால், 'நான் சொல்வதற்கு வேறு சான்றுகளை தரமுடியாது, நான் சொல்கிறேன் அல்லவா, இதுவே சான்று என்றுச் சொல்கிறார்.
  • அவர் சொல்வதை உறுதிப்படுத்த ‘யாராவது கண்கண்ட சாட்சிகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், 'சாட்சியாக யாருமில்லை' என்று பதில் சொல்கிறார்.
  • அந்த "சக்தியுடன் (கடவுளுடன்)" அவர் சந்தித்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகாகவாவது சாட்சி இருக்கிறார்களா? என்று அவரிடம் கேட்டால், தன்னைத் தவிர வேறு எவராலும் அந்த கடவுளிடம் பேசவோ, அவர் சொல்வதை கேட்கவோ முடியாது என்று அவர் பதில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட பதில்களைச் சொல்லும் அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

அவர் ஏதோ ஒரு இருண்ட குகையில் இருந்திருக்கும் போது, அந்த சக்தி அவரோடு பேசியிருக்கலாம். அதனால் தான் அவரைத் தவிர வேறு யாராலும் அந்த அதீத சக்தியை பார்க்கமுடியவில்லை போலும். சரி போகட்டும்,அவர் சொல்வதை உண்மையென்று நாமும் நம்புவோம் (ஒரு பேச்சுக்காக).

அவருக்குத் தெரிந்த ஒரே மொழி சைன மொழி மாண்டரின் ஆகும். இந்த மொழியில் அவர் கூறுகின்றார்:

"இன்னும், “நிச்சயமாக நாங்கள் காந்தியை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை.  ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை."

அந்த சீனக்காரரின், மேற்கண்ட மாண்டரின் மொழி வார்த்தைகளை படிக்கும் போது, பல  கேள்விகள் நமக்கு எழுகின்றன! அவரது கூற்றில் பல பிரச்சனைகள் இருப்பதாக தெரிகின்றது.

அவரிடம் கீழ்கண்ட கேள்விகளை நாம் கேட்கவிரும்புவோம்:

  • காந்திக்கு பதிலாக கொல்லப்பட வந்த அந்த நபர் யார்? மேற்கண்ட வரிகளில் இதற்கு பதில் இல்லை. அந்த சீனக்காரரிடம் பதில் இல்லை.
  • காந்தியடிகளுக்கு பதிலாக‌ அவன் (மாயமாக) எப்படி வந்தான்? 
  • காந்தியடிகளுக்கு பதிலாக‌ அவன் எப்போது வந்தான்? 
  • காந்தியின் இருப்பிடத்தில் அவன் ஏன் வந்தான்? பதில் இல்லை.
  • 'தான் காந்தி இல்லை' என்று அங்கிருந்தவர்களுக்கு  அவன் ஏன் சொல்லவில்லை? 
  • அவனுடைய முகம் மற்றும் உடலமைப்பு காந்தியைப் போல ஏன் மாறியது? பதில் இல்லை.
  • இந்த நபரின் குடும்பத்தார், இவர் காணாமல் போய்விட்டார் என்று காவல் நிலையத்தில் முறையிட்டார்களா?
  • காந்தியை நன்கு அறிந்திருந்தவர்களும், அவரது உறவினர்களும், கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது  'இவர் காந்தி இல்லை என்று ஏன் அடையாளம் கண்டுக்கொள்ளாமல் போய்விட்டார்கள்'?
  • அவர் கொலை செய்யப்பட்ட பிறகு கூட, அவரது உடலை சவ அடக்கத்திற்காக தயார்படுத்தும் போது, 'அவர் காந்தியில்லை, என்று ஏன் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை'? 
  • அந்த கொலையில் உயிர் தப்பிய காந்தி, துக்கத்தில் இருந்த‌ தம்முடைய  குடும்பத்திற்கும், மற்றவர்களுக்கும்,  'நான் கொலை செய்யப்படாமல், சுகமாக உள்ளேன்' என்று ஏன் சொல்லவில்லை? 
  • முக்கியமாக, காந்தியின் குடும்பத்தார்கள் 'காந்தி அவர்கள் மரித்துவிட்டார்கள் என்று நம்பினார்களா?'
  • காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட 1948ம் ஆண்டுக்கு அடுத்தடுத்த  ஆண்டுகளிலாவது, கொல்லப்பட்டது காந்தியடிகள் அல்ல, வேறு ஒருவர் தான் கொல்லப்பட்டார் என்று ஏதாவது சான்றுகள் கிடைத்ததா?
  • காந்தியடிகள் கொல்லப்படவில்லை என்ற உண்மை ஏன் 600 ஆண்டுகளாக யாருக்குமே தெரியாமல் இருந்தது.
  • ஏன் அந்த சீனக்காரரின் கடவுள், காந்தியடிகள் கொலை செய்யப்படவில்லை என்ற உண்மையை இரகசியமாக 600 ஆண்டுகள் வைத்திருந்தார்?
  • காந்தியின் கொலைக்கு பிறகு பல நூற்றாண்டுகளாக அதாவது 20ம் நூற்றாண்டிலிருந்து 26வது நூற்றாண்டுவரை மக்கள் அனைவரும் காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்ற 'பொய்யை' நம்பிக்கொண்டு இருந்தார்கள்? இதற்கு காரணம் அந்த  கடவுள் சொல்வாரா?
  • கோடிக்கணக்கான மக்கள் ஏன் 600 ஆண்டுகள் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்? 
  • அந்த சீனக்காரரின் கடவுள் ஏன் இந்த கேவலமான விளையாட்டை 600 ஆண்டுகள் ஆடினார்?

மேற்கண்ட எந்த ஒரு கேள்விக்கும் அந்த சீனக்காரரிடம் பதில் இல்லை.

ஒரு குர்‍ஆன் வசனத்தை வாசிப்போம்:

4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர்களும், அவர்களின் உண்மை பெயர்களும்:

1) சீனக்காரர் = முஹம்மது, இஸ்லாமிய நபி

2) சீனக்காரரின் கடவுள் = அல்லாஹ், முஹம்மதுவின் கடவுள்

3) காந்தியடிகள் = இயேசுக் கிறிஸ்து

4) காந்தியின் இடத்தில் மரித்தவர் = இது யார் என்று முஹம்மதுவிற்குத் தெரியாது, அல்லாஹ்வும் சொல்லவில்லை. ஏனென்றால் இது பொய்யாகும்.

காந்தியடிகள் கொலை செய்யப்பட்டு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்து, “காந்தியடிகள் பற்றிய வரலாற்றிற்கு முரணான கருத்தைச் சொன்ன”, அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதே நிலை தான் இஸ்லாமை தோற்றுவித்த முஹம்மதுவின் நிலையுமாகும். 

மூலம்: http://www.faithbrowser.com/what-happened-to-gandhi/


ஃபெயித் ப்ரவுசர்(Faith Browser) கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்