தேவாலயத்திலும் பெரியவர் யார்?
Greater Than The Temple?
இயேசு அளித்த மிகவும் துணிச்சலான அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான கூற்றுகளில் ஒன்று, இது தான்:
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:6)
உண்மையில் இயேசு என்ன சொல்ல வருகின்றார்?
இஸ்ரேலியர்களுக்கு அந்த ஆலயம் தங்கள் வாழ்க்கையின் மையமாக இருந்தது. இஸ்ரேலர்கள் அந்த ஆலயத்தின் மகிமையோடு வேறு எதையும் ஒப்பிடமாட்டார்கள், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த ஆலயம் இருந்தது.
பாவமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் ஒரு பரிசுத்த இடமாக ஆலயம் இருக்கிறது, அந்த ஆலயத்தில் தான் ஆபிரகாமின், ஈசாக்கின், மற்றும் யாக்கோபின் தேவன் வாசம் செய்கின்றார் என்று இஸ்ரேலர்கள் அடையாளப்படுத்தினார்கள். தேவனுடைய பிரசன்னம் மக்களோடு இருப்பதை அந்த ஆலயம் பிரதிபலித்தது. அந்த ஆலயத்தின் வழிபாடும், பலிகளும் தேவனுக்காக ஏறெடுக்கப்பட்டன.
என். டி. ரைட் என்ற வேதபண்டிதர், "இயேசு மற்றும் தேவனின் வெற்றி" என்ற புத்தகத்தில் அந்த ஆலயம் பற்றி கீழ்கண்டவிதமாக கூறுகின்றார்.
"தேவாலயம் என்ற ஒன்று, இப்பூமியின் மையமாக மட்டுமல்ல, இப்பிரபஞ்சத்தின் மையமாகவும், யெகோவா தேவன் வாசம் செய்யும் இடமாகவும் உள்ளது. வானமும் பூமியும் சந்திக்கும் இடம் தான் அந்த ஆலயம்."
இஸ்ரேலர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணத்த காலத்திலிருந்தே, அவர்களின் மத்தியிலே தேவன் வாசம் செய்ய விரும்பினார். அந்த மக்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், பாவமுள்ளவர்களாகவும் இருந்த போதும், அவர் அவர்களை விட்டுவிடாமல், அவர்களோடு வாழ விரும்பினார். ஏன்? ஏனென்றால் அவர் அவர்களை நேசித்தார்.
ஆசரிப்பு கூடாரம் மற்றும் உடன்படிக்கை பெட்டியை உண்டாக்கும் படி தேவன் மோசேக்கு கட்டளை கொடுத்தார். இந்த கூடாரம் வனாந்திரத்தில் பரிசுத்தமில்லாத மக்களின் மத்தியில் அமைக்கப்பட்டது.
“And they are to make a sanctuary for Me, so that I may dwell among them.” Exodus 25:8
அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. (யாத்திராகமம் 25:8)
அதன் பிறகு, சாலொமோனின் காலத்தில், எருசலேமில் பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட்டது. அது தேவனுடைய வீடாக கருதப்பட்டது:
. . .என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல். . .( I இராஜாக்கள் 8:29)
“…’My Name shall be there’…” (1 Kings 8:29)
தேவனுடைய பரிசுத்த பிரசன்னம் அங்கு இருந்தது. அந்த தேவாலயத்தில் சர்வ வல்லவரான தேவனை மக்கள் தொழுதுக்கொண்டார்கள். தேவாலயத்தை விட பெரியவர் யாராக இருக்கமுடியும்? அந்த ஆலயத்தில் யாரை மக்கள் தொழுதுக்கொள்கிறார்களோ, அவர் தானே அந்த ஆலயத்தைவிட பெரியவராக இருக்கமுடியும்?
எந்த ஒரு தீர்க்கதரிசியானாலும் சரி, ஆசாரியனானாலும் சரி, அரசனானாலும் சரி, ஒரு போதும் 'நான் இந்த தேவாலயத்தைவிட பெரியவன்' என்று சொன்னதில்லை, அவ்வளவு ஏன்! கற்பனைகூட செய்ததில்லை. இப்படி யாராவது சொல்லியிருந்தால், அது 'தேவகுற்றம்/தேவதூஷணம்' ஆகும். தேவன் மட்டும் தான் தேவாலயத்தைவிட பெரியவராக இருக்கமுடியும்.
இயேசு தாம் தேவாலயத்தை விட பெரியவர் என்று சொன்னது, தம்முடைய தெய்வீகத்தின் வெளிப்பாட்டை ஆணித்தரமாக கூறும் சாட்சி ஆகும். இயேசு தாம் தேவாலயத்தின் இறைவன் என்று மட்டும் சொல்லவில்லை, தாம் மக்களின் தொழுகைக்கும் மையமாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
இயேசு என்ன சொன்னார் என்பதை அக்காலத்து யூதமத குருக்கள் நன்றாக தவறில்லாமல் புரிந்துக் கொண்டார்கள். இயேசுவின் இந்த கூற்றைக் கேட்டு, அவர்கள் திகைத்துப்போனார்கள். இவர் தேவதூஷணம் செய்துள்ளார் என்று தங்கள் மனதில் எண்ணிக்கொண்டார்கள். இயேசுவின் கூற்றில் சந்தேகத்திற்கு எந்த ஒரு இடமும் இல்லை, அந்த மதகுருக்கள் புரிந்துக்கொள்வதில் தவறு செய்யவில்லை.
சில வசனங்களுக்கு பிறகு, மத்தேயு 12:14ல், “அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பிரமாண்டம் வரப்போவதற்கு அடையாளமாக 'தேவாலயம்' இருந்தது. ஆம், அந்த 'பிரமாண்டம்' வந்துவிட்டது!
அப்போஸ்தலர் யோவான் இதனை நன்கு அறிந்துக்கொண்டர், எனவே அந்த பிரமாண்டம் என்னவென்று நமக்கு கூறிவிட்டார் "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவான் 1:14)
யோவான் "எஸ்கெனொசன் (ἐσκήνωσεν - eskenosen; translated as “dwelt” in this verse)" என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதே வார்த்தை தான் ஆசரிப்பு கூடாரம் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் ஆச்சரியம்.
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே ஆசாரிப்பு கூடாரமாக (tabernacle) இருந்தார்" என்று சொல்லவேண்டும்.
மோசேயின் ஆசரிப்பு கூடாரமோ அல்லது சாலொமோன் கட்டிய ஆலயமோ, மனிதர்கள் மத்தியிலே தேவன் வாசம் செய்ய கட்டப்பட்ட கண்களால் பார்க்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இவ்விரண்டை மனிதர்கள் தங்கள் கைகளால் உண்டாக்கினார்கள், மற்றும் தேவன் அதில் வாசம் செய்தார்.
அவர் (கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். (கொலோசெயர் 1:15)
கிறிஸ்து தேவனுடைய 'மனித ஆசரிப்பு கூடாரமாக' இருந்தார். அவருடைய சரீரத்தில் தேவன் வாசம் செய்தார்.
கட்டிடங்கள் அழியக்கூடியது, இப்படி கட்டங்களை அழித்துவிட்டால், அதில் வாசம் செய்த தேவனுடைய பிரச்சனத்தையும் அழிந்துவிடும் என்று அர்த்தமில்லை. தேவன் நித்தியமாக உள்ளார், அவரை அழிக்கமுடியாது.
இயேசு பூமியில் வாசம் செய்த போது, அவரது சரீரம் மற்ற மனிதர்களின் சரீரம் போன்று தான் காணப்பட்டது. நம்முடைய கண்களுக்குத் தெரியாத அவருடை நித்திய சுபாவமானது (அவரது வார்த்தைகள்) நிரந்தரமான ஒன்றாகவே இருந்தது. அவரது தெய்வீகம் மனிதர்களின் தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கவோ, வரையறைக்கவோ முடியாத ஒன்றாகும். எப்படி எருசலேமின் தேவாலயம் இடிக்கப்பட்டதோ, அதே போன்று இயேசுவின் சரீரம் சிலுவையில் அறையப்பட்டது, கொல்லப்பட்டது. எருசலேமின் ஆலயம் அழிக்கப்பட்ட பிறகும் தேவன் இருந்தார் அல்லவா? அதே போன்று இயேசுவின் சரீரத்தை கொன்றாலும், அவர் நிரந்தரமானவராக இருந்தார்.
உண்மையில், இயேசு தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார் மற்றும் அவருடைய உடல் தான் ஆலயம் என்றும் கூறினார்.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22. அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22)
இயேசு சிலுவையில் மரிக்கும் போது ஒரு வினோதமான நிகழ்வு நடந்தது. இதைப் பற்றி அப்போஸ்தலர் மத்தேயு கீழ்கண்டவாறு எழுதினார்:
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, . . . (மத்தேயு 27:51)
இதன் அர்த்தமும் முக்கியத்துவமும் என்ன?
எருசலேம் ஆலயத்தில் ஒரு மிகப் பெரிய திரைச்சீலை இருந்தது, இது "மகா பரிசுத்த இடம்" என்று அழைக்கப்படும் பகுதியைப் பிரிக்க வைக்கப்பட்டது, அங்கு தேவன் வாசம் செய்தார், அல்லது அவரது பிரசன்னம் இருக்கும் இடம்.
"அந்த திரைச்சீலை தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிரிவினையின் தெளிவான வெளிப்பாடாகும். அந்த சீலை குறிப்பிடத்தக்க வகையில், மேலிருந்து கீழாக கிழிந்தது, இதனை செய்தவர் தேவன் தான்” (பைபிள் விரிவுரையாளர் குசிக் - Guzik)
ஆலயத்தில் பரிசுத்த தேவனை அணுக பாவமுள்ள மனிதனுக்கு கிடைத்த ஒரே வழி "பலியிடுவது தான்". அப்போதும் கூட எந்த மனிதனும் (பிரதான ஆசாரியரைத் தவிர) அருகில் வரமுடியாது. இது ஒருபுறம் இருக்க, திரைக்கு அப்பால் கூட செல்லமுடியாது. திரைச்சீலை கிழிக்கப்படுவது, இறுதி மற்றும் நித்திய பலியின் மூலம் தேவனுக்கு வழி இப்போது திறக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவே தான் அந்த திரையை தேவனே கிழித்துப்போட்டார்.
...என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)
தேவாலயத்தை விட பெரியவர் இதை நமக்காக சாதித்துக் காட்டினார். கோயிலை விட பெரியவர் மட்டுமே இதை நமக்காக செய்ய முடியும். ஆசாரிகளோ, பூசாரிகளோ, ஆலயத்தில் பலியிடப்படும் பலிகளோ அல்ல.
அப்போஸ்தலன் யோவானுக்கு எதிர்கால புதிய வானம், புதிய பூமி வெளிப்படுத்தப்பட்டது. இதுமட்டுமல்ல, கீழ்கண்ட விவரங்களை அவர் காண்கிறார்:
“அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.” (வெளி 21:22)
தேவாலயம் தேவையில்லையா?
தேவாலயம் என்றால் தேவனுடைய பிரசன்னம் இருக்கும் என்று தான் பொருள். எதிர் காலத்தில், தேவனே நம்முடன் இருக்கும் போது, ஏன் நமக்கு ஆலயம் தேவையாக இருக்கும்?
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆலயம் ஒரு சின்னமாக மட்டுமே இருந்தது, இயேசு தான் அதன் உண்மை பொருள்; அவர் நிஜமாக உள்ளார், ஆலயம் வெறும் நிழல் மட்டுமே. சேனைகளின் கர்த்தரின் ஆசரிப்பு கூடாரங்களைப் பற்றி நினைக்கும் போது ஒவ்வொரு எபிரேயனின் இருதயமும் மகிழ்ச்சியாக தாவினாலும், இந்த நாளில் ஒவ்வொரு யூதனின் ஆன்மா சீயோனிலிருந்து சென்றுவிட்ட மகிமைக்காக புலம்பினாலும், பரிசுத்த ஆலயம் என்பது எதிர்காலத்தில் வரவிருக்கும் நல்ல விஷயங்களின் அடையாளமாக இருந்தது, தேவனின் ஆசீர்வாதங்களின் முடிவு அல்ல. தேவாலயம் உலகின் நல்வாழ்வுக்கு அவசியமில்லை, ஆனால், அந்த ஆலயம் இல்லாமல் போனது, யூதரல்லாதவர்களுக்கு வெளிச்சத்தையும் ஜீவனையும் கொண்டு வந்துள்ளது. இப்போது உண்மையான மதத்திற்கு 'அந்த தேவாலயம்' தேவையில்லை. ஏனென்றால் யெகோவா தேவனை வணங்குபவர்கள் அவரை புனித ஆலயங்களில் வணங்குவதில்லை, ஆனால் அவரை ஆவியிலும் சத்தியத்திலும் வணங்குகிறார்கள், ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு தான் சத்தியமும், தேவாலயத்தின் சாராம்சமுமாவார். அவர் நம் வாழ்க்கைக்கு வெளிச்சமானவர், இன்றியமையாதவர். உலகத்தின் தாகத்தை நித்தியகாலமாக தணிப்பவர். அவர் பெயர் இம்மானுவேல், இதன் அர்த்தம் தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதாகும். ஆம், இயேசு தேவாலயத்தைவிட விட பெரியவர்! (சி. எஸ். ஸ்பர்ஜன்).
மூலம்: http://www.faithbrowser.com/greater-than-the-temple/