கேள்வி 6: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?
கேள்வி 6: நான் முஸ்லிமாக இருந்தபோது, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டதில்லை, அவைகள் எங்களுக்கு ஹராமாக இருந்தது. நான் இப்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளேன். விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவனாகிய எனக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?
பல ஆண்டுகள் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கும் இந்த சந்தேகம் உண்டு, எனவே புதிதாக கிறிஸ்தவரான உங்களுக்கு இந்த சந்தேகம் வருவது சகஜமே. இஸ்லாமிய பின்னணியிலிருந்து நீங்கள் வந்து இருப்பதினால் இக்கேள்விக்கான பதில் உங்களுக்கு நிச்சயம் தேவை.
அல்லாஹ்வின் மற்றும் விக்கிரகங்களின் பெயரில் அறுக்கப்பட்டவைகள்:
அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்பட்ட (ஹலால்) மாமிசத்தை கிறிஸ்தவர்கள் சாப்பிடலாமா? என்று கேள்வி கேட்டால், ”ஆம் சாப்பிடலாம்” என்று கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்கள். ஞாயிறு காலை பாய் கசாப்பு கடைக்குப் போய் வந்த பிறகு தான் சர்சுக்கே போகிறான் கிறிஸ்தவன். ஒரு ஹோட்டலில் நுழையும் போது, ‘இங்கு ஹலால் மாமிச உணவு மட்டுமே கிடைக்கும்’ என்ற வாசகம் இருந்தாலும், கிறிஸ்தவனுக்கு ’இதனை நாம் சாப்பிடலாமா?’ என்ற சந்தேகம் வருவதில்லை. ஆனால், விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு என்ற உடன் (அது சாம்பார் சாதம், வடை, பாயாசம் போன்ற சைவ உணவாக இருந்தாலும் சரி), ‘வேண்டாம், நான் சாப்பிடுவதில்லை’ என்றுச் சொல்லி மறுத்துவிடுகின்றான். இதன் மூலம் அறிவதென்ன? கிறிஸ்தவனுக்கு அல்லாஹ் என்றால் யார், விக்கிரகம் என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை என்று அர்த்தம்.
பைபிளின் படி ’அல்லாஹ் கூட ஒரு விக்கிரகமே’ ஆகும். அல்லாஹ்வை தொழுதுக்கொள்வதும் விக்கிர ஆராதனையே! நம் இந்திய கிறிஸ்தவனுக்கு ’இந்திய விக்கிரகமென்றால்’ அது ஒரு வகை, ’அரேபிய விக்கிரகமென்றால்’ அது வேறு வகை. உண்மையில், இவ்விரண்டும் ஒன்று தான். இரண்டும் விக்கிர ஆராதனையே![1].
இதன் படி பார்த்தால், அல்லாஹ்வின் பெயரில் அறுக்கப்பட்டதை ஒரு கிறிஸ்தவன் சாப்பிடமுடியுமென்றால், இந்திய விக்கிரகங்களின் பெயரில் அறுக்கப்பட்டதையும் அவனால் சாப்பிடமுடியும். ஹலால் மாமிசத்தை சாப்பிடுவதில் தவறில்லை என்றால், மாரியம்மனின் பெயரில் அறுக்கப்பட்டதையும் சாப்பிடுவதில் தவறில்லை. விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதைப் பற்றி இன்னும் சில அடிப்படை விவரங்களை பைபிளின் படி தெரிந்துக்கொள்வோம்.
புதிய ஏற்பாட்டில் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு பற்றி வரும் வசனங்களை நாம் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.
1) சபைக்குள் ஒற்றுமையை கொண்டுவர
அப்போஸ்தலர்கள் இருந்த காலத்தில், அந்நிய ஜனங்களின் பட்டணங்களில், அதாவது கிரேக்க மற்றும் ரோம பட்டணங்களில் அனேகர் மனந்திரும்பி சபையில் சேர்க்கப்பட்டார்கள். அதே போல, யூதர்களும் இரட்சிக்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள், அந்நிய ஜனங்களின் சபைகளுக்குச் சென்று, மோசேயின் கட்டளைகளை கிறிஸ்தவர்களும் பின் பற்றவேண்டும் என்று போதனை செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, கிறிஸ்தவர்களும் விருத்தசேதனம் செய்துக்கொள்ளவேண்டும், இதர நியாயப்பிரமாண கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்று சொன்னபோது. அந்த சபை, பர்னபாசையும், பவுலையும் எருசலேமுக்கு அனுப்பி, அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு போன்றவர்களின் ஆலோசனையைக் கேட்க அனுப்பினார்கள். இதனை அப்போஸ்தலர் நடபடிகள் 15வது அத்தியாயத்தின் முதல் வசனத்திலிருந்து படிக்கலாம்.
எருசலேமின் தலைமைச் சபை, கீழ்கண்ட விவரங்களை கிரேக்க ரோம சபைகளுக்கு எழுதி அனுப்பினார்கள்.
15:23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்:
15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, 15:25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, 15:26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது. 15:27 அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 15:28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
15:29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். (அப்போஸ்தலர் 15:23-29)
இவ்வசனங்களில் 28வது வசனத்தை கூர்ந்து படித்தால், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதற்கு விலகி இருங்கள் என்று சொல்லியிருப்பதைக் காணமுடியும்.
15:28 எவையெனில்,
விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும்,
இரத்தத்திற்கும்,
நெருக்குண்டு செத்ததிற்கும்,
வேசித்தனத்திற்கும்,
நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
ஆங்கிலத்தில்:
You are to abstain from food sacrificed to idols,
from blood,
from the meat of strangled animals and
from sexual immorality.
You will do well to avoid these things. Farewell. (Acts 15:29 – NIV)
இவ்வசனத்தின் படி, கிறிஸ்தவர்கள் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது என்று பொருள்படுகின்றதல்லவா? இதன் பின்னணியை நாம் இப்போது பார்ப்போம்.
கிரேக்க-ரோம பட்டணங்களில், கடைகளில் விற்கப்பட்ட மாமிசமானது, முதலாவது அவர்களின் தெய்வங்களுக்கு முன்பாக பூஜை செய்யப்பட்டு, அதன் பிறகு கடைகளில் விற்கப்பட்டது. யூத பின்னணியைக் கொண்ட கிறிஸ்தவர்கள், அந்நிய ஜனங்கள் அறுக்கும் மாமிசத்தை சாப்பிடமாட்டார்கள். அப்படிப்பட்ட பட்டணங்களில் கடைகளில் விற்கப்படும் மாமிசத்தை, விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவது, விக்கிர ஆராதனைக்கு சமம் என்றுச் சொல்லி, அவர்கள் சபையில் குழப்பத்தை உண்டாக்கினார்கள். ஆனால், யூத பின்னணியல்லாத கிறிஸ்தவர்கள் (கிரேக்கர்கள், ரோமர்கள், இதர ஜனங்கள்), நாங்கள் அவர்களின் பூஜைகளில் ஈடுபடவில்லையே, கடைகளில் விற்கப்படுபவற்றைத் தான் வாங்கி சாப்பிடுகிறோம் என்றுச் சொன்னார்கள். அந்நிய தெய்வங்களுக்கு பூஜை செய்து கடைகளில் விற்கப்படும் பொருட்களை முக்கியமாக மாமிச வகையான பொருட்களை சாப்பிடலாமா? இல்லையா? என்ற குழப்பம் சபையில் உண்டானது. இந்த சந்தேகம் தீர்க்கத்தான், அந்தியோகியா, சீரியா, சிலிசியா பட்டணத்து சபைகள், இருவரை தெரிவு செய்து, எருசலேமுக்கு அனுப்பினார்கள்.
இப்பிரச்சனையை ஆய்வு செய்து, இயேசுவின் சீடர் பேதுருவும், யாக்கோபும் மற்றவர்களும் ஒன்று கூடி மேற்கண்ட கடிதத்தை மேற்கண்ட பட்டண சபைகளுக்கு அனுப்புகிறார்கள்.
மேற்கண்ட கடிதத்தில், விக்கிரத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது என்றுச் சொல்வது எவைகளையென்றால், அந்நிய ஜனங்களின் விழாக்களில், மிருகங்களைக் கொன்று, சரியாக அவைகளின் இரத்தத்தை வடிக்காமல் பரிமாறப்படும் உணவைத்தான். மேலும், மிருகத்தை (உதாரணத்துக்கு, கோழியை) கத்தியால் அறுத்து, இரத்தத்தை வடிக்காமல், அதற்கு பதிலாக கழுத்தை நெருக்கி கோழியை சாகடித்து, அதன் மாமிசத்தை உண்பது. மேலும், அக்கால விக்கிர ஆராதனை விழாக்களில் பாலியல் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. அதாவது, விழாவில் பங்குபெரும் மக்கள், பல பெண்களோடு விபச்சாரம் செய்வதும் ஒரு பாகமாக இருந்தது.
ஆரோக்கியமற்ற முறையில் (கழுத்தை நெருக்கி) மிருகங்களைக் கொன்று, அவைகளின் இரத்தத்தை வடிக்காமல், கறியோடு இரத்தத்தையும் சேர்த்து, அரைகுறையாக சமையல் செய்து சாப்பிடுவது கூடாது என்றனர் அப்போஸ்தலர்கள். இப்படி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு. மேலும், விபச்சாரம் என்ற ஒரு தீய செயலும், இதோடு சம்மந்தப்பட்டு இருந்ததினால் இயேசுவின் சீடர்கள் இதனை தடுத்தார்கள். ஆக, மேற்கண்ட எருசலேமின் கடிதத்தின் பின்னணி இது தான்: அந்நிய ஜனங்கள் முதலாவது பூஜைகள் செய்து, அதன் பிறகு அப்பொருட்களை கடைகளில் விற்பார்கள். இதனை சாப்பிடுவதில் தவறில்லை, இப்படி சாப்பிடுவதினால், நாம் விக்கிர ஆராதனை செய்பவர்களாக ஆகமாட்டோம். ஆனால், திருவிழா, ஆராதனை என்ற ஆரோக்கியமற்ற உணவு + இரத்தம் வடிக்காத மாமிசம் + அதோடு கூட விபச்சாரம் போன்ற பழக்கம் அந்நிய ஜனங்களில் இருந்தபடியினால், இவைகளில் மட்டுமே பங்கு பெறவேண்டாம் என்று அவர்கள் எச்சரித்தார்கள்.
மேலும், இதனை சபையின் ஒற்றுமைக்காக தற்காலிக அமைதிக்காக எழுதி அனுப்பினார்களே தவிர, இதுவே நிரந்தர தீர்வாக சட்டமாக எழுதி அனுப்பவில்லை. ஏனென்றால், எந்த உணவாக இருந்தாலும் சரி, அது வாய்க்குள் போவதினால், அது நம்மை தீட்டுப்படுத்தாது என்று பேதுரு நன்கு அறிந்திருக்கிறார்.
பேதுருவும் ஒரு யூதனாக இருந்தபடியினால், சுத்தமான மருகங்களின் மாமிசத்தை மட்டும் (பழைய ஏற்பாட்டின்படி) சாப்பிடுவராக இருந்தார். ஆனால், கர்த்தர் அவருக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, இனி எதையும் அசுத்தம் என்றுச் சொல்லாதே என்ற கோட்பாட்டை கற்றுக்கொடுத்தார் (பார்க்க அப்போஸ்தலர் 11:7-9)
11:7 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். 11:8 அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். 11:9 இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. (அப்போஸ்தலர் 11:7-9)
இந்த தரிசனத்திற்கு பிறகு பேதுரு, அந்நிய ஜனங்களுக்கு சுவிசேஷம் சொல்வதை தொடங்கினார், மேலும், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதையும், உணவு விஷயத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு கட்டுப்பாட்டையும் விட்டுவிட்டார்.
எனவே, இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்ற பேதுரு, மேற்கண்ட கடிதத்தை எழுதியதின் நோக்கம், சபையில் யூத பின்னணி கிறிஸ்தவர்களுக்கும், இதர கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்காகும். அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளக்கூடாது, அந்நிய ஜனங்களின் ஆராதனைகளில் காணப்படும் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.
தற்காலத்தில் பார்த்தாலும் சரி, இந்துக்கள், முஸ்லிம்கள் தங்கள் கடைகளில் முதலாவது பூஜை செய்கிறார்கள், தங்கள் வியாபாரம் செழிக்க வேண்டுதல் செய்கிறார்கள், அதன் பிறகு கடையை திறந்து வியாபாரம் செய்கிறார்கள். இக்கடைகளில் விற்கப்படும் பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று யாராது சொல்லமுடியுமா? இது சாத்தியமா?
சுருக்கமாகச் சொன்னால், அப்போஸ்தலர் 15வது அத்தியாயத்தில் வரும் கடிதம், ‘அன்பின் வெளிப்பாடாக, சில விஷயங்களை விட்டுக்கொடுங்கள், மேலும் ஆரோக்கியமானதையே சாப்பிடுங்கள் என்றுச் சொல்கிறதே தவிர, யூதர்களின் கருத்துப்படி, மோசேயின் நியாயப்பிரமாணத்தை தலையில் வைத்துக்கொண்டு பாரப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள் என்றுச் சொல்கிறது.
2) பலவீனமான சகோதரனுக்கு இடறலாக இருக்காதே!
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடும் விவரம் பற்றி இன்னொரு தெளிவான விவரம் 1 கொரிந்தியர் 8:4-13வரை விவரிக்கப்பட்டுள்ளது. சில வசனங்களை இங்கு தருகிறேன்.
8:4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
8:8 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
8:9 ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
8:10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
8:11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
8:12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
8:13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். (1 கொரிந்தியர் 8:4,8-13)
இவ்வசனங்கள் சொல்லும் விவரங்கள்:
1) விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில் தவறில்ல, காரணம், ‘உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை’. இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு ஏன் நாம் தொங்கவேண்டும்?
2) உணவு நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது. அதாவது சில உணவுகளை நாம் உட்கொண்டால், கர்த்தர் கோபம் கொள்வார், சில உணவுகளை தவிர்த்தால் கர்த்தர் அதிகமாக நம்மை நேசிப்பார், என்பதெல்லாம் ஆதாரமற்ற கூற்றுக்கள். போஜனத்துக்கும் பக்திக்கும் சம்மந்தமில்லை. கிறிஸ்தவர்களில் எத்தனை பேருக்கு 8:8ம் வசனம் சரியாக புரிந்துள்ளது?
3) மேற்கண்ட இரண்டு விவரங்களை சரியாக புரிந்துக்கொண்டவர்கள் உண்மையிலேயே விடுதலையானவர்கள் (8:9). ஆனால் எச்சரிக்கை தேவை, நமக்கு இருக்கும் சுதந்திரம் மற்றவர்களுக்கு (பலவீனமானவர்களுக்கு) தடையாக இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளவேண்டும். இங்கு தான் இந்த உணவு விஷயம் யூ டர்ன் (U Turn) அடிக்கிறது.
4)ஒரு நபர் விக்கிரகங்களை வணங்கும் பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால். அவர் கிறிஸ்தவரான பிறகு, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவது சரியானது அல்ல என்று நினைத்து (கவனிக்கவும் நினைத்து), தன் மனசாட்சியில் முடிவு செய்து இருக்கலாம். இதனால், அவர் ஒரு போதும் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில்லை. ஆனால், சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று நமக்குத் தெரியும். இருந்த போதிலும், அந்த சகோதருக்காக நாம், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை அவருக்கு முன்பாக சாப்பிடக்கூடாது. பைபிள் அனுமதிக்கும் ஒன்றை, அந்த சகோதரரின் மனசாட்சிக்காக நம் உரிமையை விட்டுக் கொடுக்கிறோம். 10ம் வசனத்தை பாருங்கள்:
8:10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
நீங்கள் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதை அவர் கண்டால், ‘இது என்ன? நான் சாப்பிடக்கூடாது என்று நம்புகிறேன், ஆனால் இந்த சகோதரர் சாப்பிடுகிறாரே! என்று குழம்புவார்’. ஒருவேளை, அவரை நீங்கள் கட்டாயப்படுத்தி ’சாப்பிடுங்கள், இதில் தவறு இல்லை’ என்று சொல்லி, அவர் சாப்பிட்டால், அவர் முழு மனதோடு சாப்பிடாமல் சந்தேகத்தோடு சாப்பிடுவார். சாப்பிட்ட பிறகு, நான் செய்தது தவறாக இருக்குமோ என்று தன் மனசாட்சியில் வாதிக்கப்படுவார். எனவே, அவரது மனசாட்சியை தொந்தரவு செய்யாமல், இருக்கும்படியாக, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருவருக்காக இன்னொருவர் தம் உரிமையை விட்டுக்கொடுப்பது நல்லது. இதுதான் இவ்வசனங்களின் பொருள்.
5) அந்த சகோதரரின் மனது உங்களது செயலினால், புண்பட்டதினால், நீங்கள் பாவம் செய்வதற்கு சமமாகிறது. கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். அப்படிப்பட்ட உணவு சாப்பிட்டது பாவமல்ல, பலவீனமான சகோதரரின் நலனை கருத்தில் கொள்ளாமல், நாம் செயல்பட்டதினால், இது பாவமாகும்.
8:11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
8:12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
வேறுவகையாகச் சொல்வதென்றால், முதிர்ச்சி அடைந்த விசுவாசிகள், புதிய விசுவாசிகளின் மனசாட்சியை கவனித்து அன்பாக நடந்துக்கொள்ளுங்கள். அவர்கள் வேதத்தை முழுவதுமாக அறிந்து, உங்களைப்போல முதிர்ச்சி அடையும் வரை உங்களின் சில உரிமைகளை அச்சகோதருக்காக விட்டுக்கொடுக்கலாமே!
6) சைவ உணவை மட்டும் உண்பவரும், நீங்களும் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் அறையில் நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சமைப்பது அவருக்கு மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உண்மையாக, அவர் மீது உங்களுக்கு அன்பு இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருக்காக உங்கள் உரிமையை விட்டுக்கொடுப்பீர்கள், இனி அசைவம் சமைப்பதில்லை என்றுச் சொல்லி, அவர் மனது புண்படாமல் நடந்துக்கொள்வீர்கள். இதைத் தான் செய்யச்செல்லி பைபிள் நமக்கு போதிக்கிறது.
8:13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்த உணவையும் சாப்பிடலாம், நமக்கு உரிமை உள்ளது, ஆனால், மற்றவர்களின் நலனிலும், அல்லது மனசாட்சியையும் பார்த்து நடந்துக்கொள்வது நல்லது. உனக்கு இருக்கும் சுதந்திரத்தைவிட, உன் சகோதரனின் பலவீனம் உனக்கு முக்கியம். அவனை உன் செயலினால் (அற்பமான உணவு விஷயத்தினால்) துக்கப்படுத்தாதே!
3) நல்ல சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்துக் காட்ட
பைபிளில் இன்னொரு நிகழ்ச்சியும், இந்த விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு பற்றி வருகிறது (பார்க்க 1 கொரிந்தியர் 10:25-32).
10:25 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. 10:26 பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
10:27 அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
10:29 உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
கடையில் விற்கப்படுகின்ற எல்லாவற்றையும் வாங்கி சாப்பிடுங்கள், ஹலாலா ஹராமா என்று கேள்வி கேட்கவேண்டியதில்லை, ஏன்? உலகமும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. கடைக்காரன் சாமிக்கு பூஜை செய்தானோ, அல்லது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுத்தானே, அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம், உணவை வாங்கி சாப்பிடுங்கள். இதனால் உங்கள் பக்திக்கு ஒரு பங்கமும் வராது (வயிற்றுக்கு வந்தால் வரலாம், அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்தது).
உங்கள் நண்பர் ஒருவர் (அவர் கிறிஸ்தவரல்ல), உங்களை மாரியம்மன் திருவிழாவிற்கு அழைத்து, அவர் வீட்டில் விருந்து கொடுத்தால், உங்களுக்கு முன் வைக்கும் உணவு பற்றி கேள்வி கேட்காமல் சாப்பிடுங்கள். அதை எங்கே வாங்கினீர்கள், ஹலாலா என்று கேள்வி கேட்கவேண்டாம். ஆனால், இன்னொருவர் உங்கள் பக்கத்தில் இருந்துக்கொண்டு (அவர் கிறிஸ்தவராகவும் இருக்கலாம், அல்லது அவிசுவாசியாகவும் இருக்கலாம்), இந்த உணவு விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டது என்றுச் சொன்னால், அப்படி சொன்னவருக்காக நீங்கள் சாப்பிடவேண்டாம். ஏனென்றால், அவர் கொஞ்சம் பலவீனமானவர், அவர் முதிர்ச்சி அடைந்த விசுவாசியல்ல, அவர் இன்னும் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற சுதந்திரத்தை பயன்படுத்தி, ’அவரது மனதை நோகடிக்கவேண்டாம்’. எனவே அவருடைய மனசாட்சிக்காக சாப்பிடாதீர்கள் (உங்கள் மனசாட்சி தெளிவாகச் சொல்கிறது, இதனை சாப்பிடலாம் என்று).
சுருக்கமாகச் சொன்னால், எந்த உணவும் தீட்டுள்ளது அல்ல. ஆனால், நம்மில் ஒவ்வொருவரும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன் (1 கொரிந்தியர் 10:24)
பைபிள் தன் கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறது. உணவு விஷயத்தில் பல உதாரணங்களைக் கொண்டுள்ளது. எந்த ஒரு பாஸ்டரும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் என்று இமாம்களைப் போல ஃபத்வா இடமுடியாது.
4) வேசித்தனமும், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவும்
கடைசியாக, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை இயேசுவின் ஊழியர்கள் சாப்பிடும்படி, யெசபேல் என்ற பெண் அவர்களுக்கு போதித்து வழிதவற செய்துவிட்டாள் என்று இயேசு குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட பெண்ணை நீ சபையில் ஏன் வைத்திருக்கிறாய் என்று தியத்தீரா சபையை கண்டிக்கிறார் (பார்க்க வெளிப்படுத்தின விசேஷம் 2:20):
ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.(வெளிப்படுத்தின விசேஷம் 2:20)
நன்றாக மேற்கண்ட வசனத்தை கவனிக்கவும், இங்கு வெறும் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவை மட்டும் சொல்லவில்லை, அதோடு கூட, வேசித்தனமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது அக்கால விக்கிர ஆராதனைகளில், திருவிழாக்களில் சிற்றின்ப செயல்கள், வேசித்தனங்கள் சேர்ந்தே நடத்தப்பட்டன, அதன் பிறகு விருந்து பரிமாறப்பட்டது. இதையே இயேசு கண்டிக்கிறார்.
விக்கிரகங்களின் திருவிழாக்களில் இப்படி ஆபாசமான செயல்கள் கூட இருக்குமா என்று சிலர் சந்தேகிக்கலாம். சமுதாயம் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட மூட பழக்கங்கள் இருந்தன, இதனை அறிய கீழ்கண்ட கட்டுரையை சொடுக்கி படிக்கவும்:
1) Sacred prostitution - en.wikipedia.org/wiki/Sacred_prostitution
Sacred prostitution, temple prostitution, cult prostitution,[1] and religious prostitution are general terms for a sexual ritual consisting of sexual intercourse or other sexual activity performed in the context of religious worship, perhaps as a form of fertility rite or divine marriage (hieros gamos). Some scholars prefer the term sacred sex to sacred prostitution in cases where payment for services was not involved.
இந்தியாவிலும் தேவதாசி என்ற முறை இருந்தது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. இந்த தேவதாசி முறையை தவறாக விபச்சாரத்திற்கு பயன்படுத்தியதால் நிறுத்தப்பட்டது (மூலம்: en.wikipedia.org/wiki/Devadasi)
இதுவரை பார்த்த விவரங்களின் படி, விக்கிரகம் என்பது உலகில் ஒன்றுமில்லை, அதற்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவராக, தன் சக சகோதரரின் பலவீனமான மனசாட்சியை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று பைபிள் கட்டளையிடுகிறது.
5) இன்று விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை (அ) பூஜை செய்யப்பட்டதை சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களின் கவனத்துக்கு
இதுவரை பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஒரு கிறிஸ்தவன் உணவு விஷயத்தில் விடுதலையாக்கப்பட்டுள்ளான். அவன் ஹலால் உணவையும் உண்ணலாம், விக்கிரகங்களுக்கு பூஜை செய்யப்பட்டதையும் உண்ணலாம் என்று விளக்கினேன். இவ்வளவு விவரங்கள் சொல்லியும், சிலர் ‘நான் சாப்பிடமாட்டேன்’ என்று அடம்பிடித்தால், கீழ்கண்ட விவரங்களை படித்து, உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.
இப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இன்று நாம் இந்தியாவில் எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், ஒரு விக்கிரகத்துக்கு பூஜை செய்யப்படாமல் அது நம்முடைய கையில் வருவதில்லை. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை உடையவர்கள் 100% உண்மையாளர்களாக வாழ முயற்சி செய்தால், அவர்கள் எதையும் சாப்பிடமுடியாமல் போய்விடும், அவர்கள் பட்டிணியாக இருக்கவேண்டியது தான். உதாரணத்திற்கு, கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:
அ) ஒரு நிலத்தில் நெல்லை பயிரிடும் போது, ஒரு விவசாயி, தன் சாமிக்கு பூஜை செய்தே பயிரிடுகின்றான்.
ஆ) அந்த பயிர் வளரும் போதும், அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று தன் சாமியிடம் வேண்டிக்கொள்கிறான்.
இ) அறுவடை செய்யும் போதும், தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்கின்றான்.
ஈ) நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கும் நபரும் தன் அலுவலகத்தில் தன் சாமியிடம் வேண்டிக்கொண்டே தன் தொழிலை ஆரம்பிக்கின்றான்.
உ) வருடத்திற்கு ஒரு முறை ஆயூதப்பூஜை செய்யப்பட்ட ஆயுதங்களினால் அந்த நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கின்றான்.
ஊ) அரிசியை வாங்கி விற்பவனும் தன் வியாபாரத்தை தொடங்கும் போதும், தன் சாமியை வேண்டிக்கொண்டு, பூஜை செய்து ஆரம்பிக்கிறான்.
எ) அந்த அரிசியை வாங்கி ஹோட்டல் நடத்துபவன் தன் சாமியிடம் வேண்டிக்கொண்டு உணவை தயாரிக்கிறான், வியாபாரம் செய்கின்றான்.
இப்படி ஒரு உணவுப்பொருள் பயிரிடுவது முதற்கொண்டு அறுவடையாகி, நம்மிடம் உணவாக வரும் வரை அதன் மீது பல தெய்ங்களின் வணக்கங்கள் நடைப்பெறுகின்றன.
இப்போது நம் கேள்வி என்னவென்றால், இதர தெய்வங்கள் பெயர்கள் சொல்லப்பட்ட உணவுப்பொருட்கள், கிறிஸ்தவர்களுடைய வாயில் செல்லக்கூடாது என்று சொல்பவர்கள், முக்கியமாக இந்தியாவில், பாகிஸ்தானில் பட்டிணி கிடந்து சாகவேண்டியது தான்.
உணவு விஷயத்தில் அடம்பிடித்தால்,
- அடையார் ஆனந்தபவனில் விற்கப்படும் அருமையான இனிப்பை நம்மால் சாப்பிடமுடியுமா?
- ஹோட்டல் சரவண பவனில் விற்கப்படும் சாம்பார் இட்லிகள் மற்றும் இதர உணவுகளை நம்மால் சாப்பிடமுடியுமா?
- பாய் கடையில் விற்கப்படும் ஆம்பூர் பிரியாணியைத் தான் நாம் சாப்பிடமுடியுமா?
சொந்தமாக அரிசியை வாங்கி வந்து நம் வீட்டிலும் உணவை தயாரித்து சாப்பிடக்கூடாது, ஏனென்றால், அந்த அரிசியை பயிரிட்டவன் ஒரு கிறிஸ்தவன் தான் என்று எப்படி நம்மால் கூறமுடியும்? இது நடைமுறைக்கு ஏற்காத ஒன்று. அதனால் தான் பைபிள் தெளிவாகச் சொல்கிறது, உலகமும் அதன் நிறைவும் (உணவுப்பொருட்களும்) கர்த்தருடையது. அதனை சாப்பிடுவதினால் எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை.
முடிவுரை:
முஸ்லிம் பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், உணவு பற்றி கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டவைகளை மறந்துவிடுங்கள்.
உலகமும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது, எனவே, ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள், மற்ற எதையும் பார்க்காமல், மனசாட்சியை நோகடிக்காமல், தாராளமாக கடைகளில் விற்கப்படுகின்றவைகளை வாங்கி புசியுங்கள்.
தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்பும் அல்ல, எனவே அற்பமானவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நீதியையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் விட்டுவிடாதீர்கள் (ரோமர் 14:17).
அடிக்குறிப்புக்கள்:
[1] அல்லாஹ்வும் விக்கிரகமா? அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது கூட விக்கிர ஆராதனையா?
அல்லாஹ்வை தொழுதுக்கொள்வதும், விக்கிரகங்களை தொழுதுக்கொள்வதும் ஒன்றே தான். குர்-ஆனின் அல்லாஹ், பைபிளின் யெகோவா தேவன் அல்ல. மக்காவின் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களில் அல்லாஹ்வும் ஒருவர். முஹம்மது வருவதற்கு முன்பே அல்லாஹ்வை அரேபியர்கள் வணங்கிக்கொண்டு இருந்தனர். முஹம்மதுவின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்பதாகும்.
[2] இக்கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:
[3] ரமளான் கேள்வி பதில்கள் - 2: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்
நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது? | பொருளடக்கம் | கேள்வி 7: |