2019 ரமளான் 6 - இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் 6: முஹம்மது என்னும் முஸ்லிம்களின் விக்கிரகம்

இயேசுவின் ஹலால், முஹம்மதுவின் ஹராம் ‍ தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்.

இயேசுவின் வெளித்தோற்றமும் கிறிஸ்தவர்களும்:

ஒரு கிறிஸ்தவனிடம் 'உங்கள் இயேசு என்ன உயரம்?' என்று கேட்டுப்பாருங்கள், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.

  • இயேசு என்ன கலர்? என்று கேட்டால், "எனக்கு தெரியாது" என்று பதில் வரும்.
  • இயேசுவின் கண்கள் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசுவின் முகம் எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசு மீசை வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசு தாடி வைத்திருந்தாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசுவின் பேச்சு எப்படி இருக்கும்? எனக்குத் தெரியாது.
  • இயேசு பொதுவாக எப்படி பேசுவார், சத்தம் உயர்த்தி பேசுவாரா? தாழ்த்திப் பேசுவாரா? எனக்குத் தெரியாது.
  • இயேசு எப்படி சாப்பிடுவார்? எனக்குத் தெரியாது.
  • இயேசு எப்படி தண்ணீர் குடிப்பார்? எனக்குத் தெரியாது

இயேசுவின் வெளித்தோற்றம் பற்றி எந்த கேள்வியைக் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்றுச் சொல்கிறீர்களே! கிறிஸ்தவர்களே! இயேசுவைப் பற்றி என்னத்தான் தெரியும் உங்களுக்கு!?

இயேசுவே வழியும், சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்றுத் தெரியும் என்று கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்கள்.

முஹம்மதுவின் வெளித்தோற்றமும் முஸ்லிம்களும்:

ஒரு முஸ்லிமிடம் 'உங்கள் முஹம்மது என்ன உயரம்?' என்று கேட்டுப்பாருங்கள், உடனே அதற்கு பதில் வரும்.

  • முஹம்மது என்ன கலர்? என்று கேட்டால்? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் கண்கள் எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் முகம் எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது மீசை வைத்திருந்தாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மது தாடி வைத்திருந்தாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மதுவின் பேச்சு எப்படி இருக்கும்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது பொதுவாக எப்படி பேசுவார், சத்தம் உயர்த்தி பேசுவாரா? தாழ்த்திப் பேசுவாரா? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்படி சாப்பிடுவார்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்படி தண்ணீர் குடிப்பார்? உடனே பதில் வரும்.
  • முஹம்மது எப்போது வலதுகை பயன்படுத்துவார், எப்போது இடதுகை பயன்படுத்துவார்? என்று கேள்வி கேட்டால், உடனே பதில் வரும்.

இப்படி, முஹம்மதுவின் புறத்தோற்றம் மற்றும் அவருடைய அசைவுகள் அனைத்தையும் (நன்கு இஸ்லாமை அறிந்த) முஸ்லிம்கள் அறிவார்கள். அவர்கள் மிகவும் பெருமையாக, 'எங்கள் இறைத்தூதரின் ஒவ்வொரு அங்க அடையாளமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு நாங்கள் அவரின் உண்மை உருவத்தை வரைய‌ முடியும். இப்படிப்பட்ட விவரங்களை சரித்திரத்தில் வேறு எந்த நபர் பற்றியும் பதிவு செய்யப்படவில்லை.' என்றும் சொல்லுவார்கள்.

இயேசுவை நேசித்த  சீடர்கள் ஏன் அவருடைய அங்க அடையாளங்களை உலகிற்கு சொல்லாமல் சென்றுவிட்டார்கள்?


இயேசுவை தங்கள் உயிரினும் மேலாக நேசித்த சீடர்கள் ஏன் அவருடைய அங்க அடையாளங்களை, அவருடைய வெளிப்புற செயல்களைப் பற்றி நமக்குச் சொல்லவில்லை? யாராவது இப்படி செய்வார்களா? நான்கு நற்செய்தி நூல்களை எழுதியவர்களில் ஒருவர் கூடவா? இயேசுவின் வெளிப்புற தோற்றம் பற்றி எழுதவில்லை! ஆச்சரியமாக இருக்கிறது? இயேசுவிற்கு பிறகு அவருடைய‌ தாய் மரியாள், அனேக ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்கள். அவர்களிடம் இயேசுவின் குழந்தை மற்றும் இளமைப் பருவம் பற்றி பல கேள்விகளை சீடர்கள் கேட்டு பல சுவாரசியமான  விவரங்களை அறிந்துக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனாலும், எந்த ஒரு சுவிசேஷத்திலும் அவருடைய‌ குழந்தை பருவத்தின் விவரங்களை எழுதவில்லை. ஏன் இப்படி தங்களுக்கு தெரிந்திருந்த செய்திகளையும் சீடர்கள் எழுதவில்லை?

இயேசுவின் நற்செய்தி முக்கியத்துவம் பெறவேண்டுமே ஒழிய, அவரின் அங்க அடையாளங்கள் அல்ல:

மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களுக்கு என்ன வேண்டும்? இயேசுவின் நற்செய்தியா? போதனையா? அல்லது  அவரின் அங்க அடையாளங்களா? பரிசுத்த ஆவியானவர் சீடர்களைக் கொண்டும், அவர்களின் சீடர்களைக் கொண்டும் புதிய ஏற்பாட்டை எழுதும் போது, இயேசுவின் உலக சரீரத்தைப் ப‌ற்றிய அங்க அடையாளங்களை எழுத விரும்பவில்லை, அதனை அவர் தடுத்துவிட்டார்.

எந்த மனிதனானாலும் சரி, தான் உயிரினும் மேலாக நேசிக்கும் குருவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது, அவரது அங்க அடையாளங்கள், அவரது பழக்கங்கள் போன்றவற்றைப் பற்றி நிச்சயம் எழுதுவார். ஆனால், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில், பல்லாயிரக்கணக்கான வசனங்களில் ஒரு இடத்திலும் அவரது தோல் கலர், உயரம், முகம் போன்ற எந்த அடையாளத்தையும் எழுதவில்லை. இது தான் புதிய ஏற்பாடு வேதம் என்பதற்கு இன்னொரு நிரூபனம். இயேசு தன்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதவேண்டும் என்று விரும்பவில்லை, அவைகள் உலக மக்களுக்குத் தேவையும் இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்ததால், அதனை தடுத்துப்போட்டார்.

இயேசு தன் வெளிப்புற தோற்றத்தை மக்கள் அணுவணுவாக பின்பற்றாம‌ல், தான் காட்டிய வழியில் நடக்கவும், தான் போதித்த சத்தியத்தை பின்பற்றவும், அதன் மூலம் தான் கொடுக்கும் ஜீவனை பெறவுமே இயேசு விரும்பினார்.

முஹம்மது முஸ்லிம்களுக்கு ஒரு விக்கிரம் ஆகிவிட்டார்:

ஒருவரின் போதனைகளை பின்பற்றாமல் அவரை அணுவணுவாக பின்பற்றுவது பைபிளின் படி, விக்கிரகம் ஆகும்.  தற்காலத்தில் ஒரு நடிகனைப் பார்த்து ரசிகன் இப்படித்தான் செய்கிறான். ஒரு மனிதனை தன் இறைவனோடு இணையவும், கீழ்படியவும் தடுக்கும் செயலாக விக்கிர வழிபாடு உள்ளது. விக்கிரகம் என்பது ஒரு சிலையாக இருக்கவேண்டிய அவசியவில்லை, அது ஒரு மனிதனாகவும் இருக்கலாம், அவ்வளவு ஏன், தான் பின்பற்றும் வழிகாட்டியாகவும் இருக்கலாம். இப்படித்தான் முஹம்மது முஸ்லிம்களுக்கு ஒரு விக்கிரமாக ஆகியிருக்கிறார்.

ஒரு முஸ்லிம் முஹம்மதுவைப் போல மீசையை, தாடியை வைத்துக்கொள்வது விக்கிரக வணக்கமே! உலகைப் படைத்த இறைவனுக்கு கீழ்படிவதை விட்டுவிட்டு, அவனின் நபியின் வெளிப்புற தோற்றத்தை காப்பி அடிப்பது விக்கிரகமே. முஹம்மது போல உட்காருவது, உணவு உண்பது, தண்ணீர் குடிப்பது, உடை உடுத்துவது, போன்றவையெல்லாம் விக்கிரகமே!

இயேசு கிறிஸ்தவர்களுக்கு இறைவன் ஆகிவிட்டார்:

எனக்கு கிறிஸ்தவத்தில் பிடித்த ஒரு முக்கியமான விஷயம், "கிறிஸ்தவர்க‌ள்,  தன் வெளிப்புற தோற்றத்தை பின்பற்றாமல், தன் போதனைகளை பின்பற்ற இயேசு கட்டளை கொடுத்ததாகும்".(புதிய ஏற்பாட்டில் இயேசு எங்கே  இப்படி கட்டளையிட்டார்? என்று வாசகர்கள் கேட்கலாம். நீங்கள் புதிய ஏற்பாட்டை படியுங்கள், அதில் எங்கேயாவது "முஹம்மதுவைப் பற்றி இஸ்லாம் பதிவு செய்து இருப்பது போன்று",  இயேசுவின் வெளிப்புற தோற்றம் பற்றிய விவரங்கள் உள்ளனவா என்று பாருங்கள்.)

எது முக்கியம்? நம் வழிகாட்டியின் வெளிப்புறத்தோற்றமா? அல்லது அவர் சொன்ன செய்தியா?

இயேசுவின் படி அதாவது புதிய ஏற்பாட்டின் படி, ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை அப்படியே அணுவணுவாக பின்பற்றுவது ஹராம் ஆகும். அந்த நபர் முஹம்மதுவாக இருந்தாலும் சரி, இயேசுவாகவே இருந்தாலும் சரி, அவரின் வார்த்தைகளை பின்பற்றவேண்டுமே ஒழிய, அவரின் வெளிப்புறத்தை  காப்பி அடிக்கக்கூடாது.

இயேசுவின் படி முஸ்லிம்களுக்கு விக்கிரகமாக முஹம்மது இருக்கிறார்.

இயேசுவின் பரலோகத் தோற்றத்தின் சாயல்:

புதிய ஏற்பாட்டை படித்தவர்கள் மேற்கண்ட விவரங்களை படிக்கும் போது, மனதில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சின்ன வெற்றிடம் தோன்றி அது கேள்வியாக மாறுவதை என்னால் உணரமுடிகின்றது.

"புதிய ஏற்பாட்டில், ஏதோ ஒரு இடத்தில் இயேசுவின் முகம், உடைகள், கண்கள், கால்கள் பற்றிய விவரங்கள் இருக்கவேண்டுமே!" என்று கேள்வி எழும். அவர்களுக்காக இந்த பத்தி எழுதப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டில் கீழ்கண்ட இரண்டு இடங்களில் இயேசுவின் வெளிப்புறத்தோற்றம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

மத்தேயு 17:1-9  (மேலும் பார்க்க‌: மாற்கு 9:2–8, லூக்கா 9:28–36)
17:2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

இந்த இடத்தில் இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்தது என்றும், அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக இருந்தது என்றுச் சொல்லப்பட்ட விவரம் அவருடைய பூமிக்குரிய வெளித்தோற்றமல்ல, அது அவருடைய மறுரூப வெளித்தோற்றம், அவருடைய தெய்வீக வெளித்தோற்றமாகும். அவர் 3.5 ஆண்டுகள் சீடர்களோடு இருந்த போது, ஒவ்வொரு நாளும் அவருடைய முகம் சூரியனைப்போல பிரகாசிக்கவில்லை, அவருடைய உடைகளும் அப்படி வெண்மையாக இருக்கவில்லை. எனவே, இதனை நாம் இக்கட்டுரையின் கருப்பொருளுக்காக எடுத்துக்கொள்ளமுடியாது.

அடுத்தபடியாக, வெளிப்படுத்தின விசேஷத்திலும், இயேசுவின் முகம், கண், கால், உடைகள், தலைமுடி என்று பல விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெளிப்படுத்தின விசேஷம் 1:13-15

13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். 14 அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; 15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

இதுவும் மேலே சொல்லப்பட்டது போன்று, இயேசுவின் பூமிக்குரிய வெளித்தோற்றமல்ல, அவருடைய தெய்வீகத்தோற்றத்தின் வெளிப்பாடு ஆகும். எனவே, இதனை நாம் இக்கட்டுரையின் கருப்பொருளுக்காக எடுத்துக்கொள்ளமுடியாது.

முடிவுரை:

ஒரு மார்க்கத்தின் முக்கியமான வழிகாட்டியின் வழியை பின்பற்றவேண்டும், அவரின் தோற்றத்தையல்ல. இதனால் பல தீய விளைவுகள் உண்டாகும். இயேசு கிறிஸ்தவர்களின் வழியாக உள்ளார். இயேசுவை பின்பற்றுவதினால் கிறிஸ்தவர்களின் மனம் மாறுகின்றது, உடைகள் மாறுவதில்லை, மீசையோ, தாடியோ மாறுவதில்லை. முஸ்லிம்களோ, முஹம்மதுவை அணுவணுவாக பின்பற்றுகிறோம் என்று பெருமைபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த பெருமையே அவர்களுக்கு விக்கிரமாக உள்ளது, மெய்யான இறைவனுக்கு இணை வைப்பதாக உள்ளது. பைபிளில் வரும் தேவமனிதர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் செய்தி தான் எங்களுக்குத் தேவை, அவர்களின் வெளிப்புற தோற்றமில்லை. ஆம், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இயேசுவை பிரதிபலிக்க விரும்புகிறோம், ஆனால் உடையில் அல்ல, உள்ளத்தில் பிரதிபலிக்க விரும்புகிறோம். இயேசுவின் மலைப்பிரங்கத்தில் பிரதிபலிக்க விரும்புகிறோம், இயேசுவின் பிரதான கட்டளைகளை பின்பற்றுவதில் பிரதிபலிக்க விரும்புகிறோம்.

இயேசுவை பின்பற்றுவது ஹலால், முஹம்மதுவை பின்பற்றுவது ஹராம்.

தேதி: 13th May 2019


2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க‌
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்