ரமளான் 2022 - உவமை 12: அவர்கள் மூஸாவிற்கும் நபிமார்களுக்கும் செவிகொடாவிட்டால்... இப்ராஹீம் மடியில் லாசருவும், பாதாளத்தில் இக்பாலும்
(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)
(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)
ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:
- உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
- உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
- உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
- உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
- உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
- உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
- உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
- உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
- உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?
- உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?
- உவமை 11: புத்தியுள்ள 5 கன்னிகைகள் உவமையின்படி இயேசு 5 பேரை திருமணம் புரிந்தாரா? தம்பியின் கேள்வி உமரின் பதில்
உமரின் தம்பி சௌதியிலிருந்து அழைத்து, தன் நண்பன் ‘இமாம்’ முஹம்மத் இக்பால், உமரோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார் என்று கூறினார், உமரும் ஒப்புக்கொண்டார். சௌதியில் ஒரு மசூதியில் இமாமாக வேலைப் பார்க்கும், முஹம்மது இக்பால் என்பவரோடு இந்த கட்டுரையில் உமர் உரையாடுகிறார். இயேசு கூறிய இன்னொரு முக்கியமான உவமையிலிருந்து இமாம் இக்பால் அவர்கள் பல கேள்விகளை கேட்கிறார், அவைகளுக்கு என்ன பதில் தரப்படுகின்றது என்பதை பார்ப்போம்.
அவர்கள் மூஸாவிற்கும் நபிமார்களுக்கும் செவிகொடாவிட்டால்...
(உமரும், அவரது தம்பியும், இமாம் முஹம்மத் இக்பாலும் வாட்ஸப் மீடிங்கில் பேசுகிறார்கள்)
தம்பி: ஹலோ, அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்களுக்கு ஏற்கனவே சொன்னேன் அல்லவா? உங்களோடு பேச இக்பால் அவர்கள் நம்மோடு இணைந்திருக்கிறார்.
உமர்: ஹலோ தம்பி, மற்றும் இமாம் இக்பால் உங்கள் இருவருக்கும் ஸலாம்.
எம். இக்பால்: வ அலைக்கும் ஸலாம், உமர் அண்ணே! எப்படி இருக்கீங்க? உங்கள் வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.
உமர்: கர்த்தரின் கிருபையால் நலமாக இருக்கிறோம். நீங்க எப்படி இருக்கீங்க!
எம். இக்பால்: அல்லாஹ்வின் அருளால் மிகவும் நலமாக இருக்கிறேன்.
உங்களிடம் பேசவேண்டுமென்று ரொம்ப நாட்களாக காத்திருந்தேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ரமளான் மாதத்தில் உங்கள் பிளாக்கை படித்தேன், உங்க தம்பியிடம் நீங்கள் பேசியதும் அவர் என்னிடம் சொன்னார். எனவே, எப்படியாவது பேசிவிடலாம் என்று வந்தேன்.
உமர்: உங்களிடம் பேசுவதில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. சரி சொல்லுங்கள், என்னிடம் என்ன கேள்விகளை கேட்கப்போகிறீர்கள்?
எம். இக்பால்: நீங்கள் இயேசு கூறிய உவமைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இஸ்லாமை விமர்சிப்பதாக எனக்குத் தெரிகிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் தெரிந்துக்கொள்ளலாமா? நம் இரு மார்க்கங்களில் உள்ள ஒற்றுமைகளை எடுத்து பேசாமல், ஏன் வித்தியாசங்களை பேசுகிறீர்கள்?
உமர்: இதில் மறைமுகமான நோக்கம் எதுவுமே இல்லை. உங்களுக்குத் தெரியாததா என்ன? என் தம்பி, கிறிஸ்தவம் என்ற மெய்யான மார்க்கத்தைவிட்டுவிட்டு, இஸ்லாமை தழுவிவிட்டான். தொலைந்துவிட்ட ஆட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கவேண்டுமல்லவா?
எம். இக்பால்: பாருங்கள், இன்னும் நாம் பேசவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளே மெய்யான மார்க்கம் கிறிஸ்தவம் என்றும், இஸ்லாம் மெய்யான மார்க்கமில்லையென்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இது உங்களுக்கே சரியாக தெரிகின்றதா?
உமர்: நீங்க மட்டும் ஏன் என்னிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்று நீங்கள் நம்புவதினாலும், என் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவேண்டுமென்பதற்காகவும், மேலும் இஸ்லாமிய தாவா ஊழியத்தை என்னிடம் செய்து, முடிந்த அளவிற்கு என்னையும் முஸ்லிமாக மாற்றத்தானே நீங்களும் விரும்புகிறீர்கள்?
நாம் இருவரும் ஒரே நோக்கத்தையுடையவர்கள் தான்! நேரடியாக விஷயத்துக்கு வாங்க.
எம். இக்பால்: சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசி, பிறகு மையக்கருத்துக்கு வரலாம் என்று நினைத்தேன், நீங்கள் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க.
சரி, நேரடியாக நானே விஷயத்தை போட்டு உடைக்கிறேன். இன்று இயேசு கூறிய "லாசரு மற்றும் செல்வந்தன்" உவமையை சிறிது பார்ப்போமா?
உமர்: ஓ... ஆராயலாமே! தம்பி நீயும் இருக்கிறாயா? அல்லது தூங்கிவிட்டாயா?
தம்பி: இரு கண்களையும், காதுகளையும் திறந்துவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருக்கிறேன், பேசுங்கள்.
எம். இக்பால்: நாம் லூக்கா 16:19-31 வரையுள்ள வசனங்களை படிப்போமா?
உமர்: தாராளமாக படிக்கலாம். நீங்கள் ஏற்கனவே இவ்வசனங்களை படித்துவிட்டு, தயாராக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரி தானே!
எம். இக்பால்: ஆமாம், நானும் உங்கள் தம்பியும் இதற்கு முன்பாக ஒன்றாக சேர்ந்து படித்தோம்.
உமர்: ஓ.. ஏற்கனவே படித்து தயாராக இருக்கிறீர்களா! அப்படியென்றால் நாம் இப்போது இன்னொரு முறை படிக்கத்தேவையில்லை. நான் அந்த உவமையில் சிறிது மாற்றம் செய்து சொல்கிறேன், அதன் பிறகு நாம் அதைப் பற்றி பேசுவோமா?
தம்பி: வேண்டாம்.. வேண்டாம்... நீங்கள் உவமையில் எதையும் மாற்றாதீர்கள், இக்பால் இதனை ஒப்புக்கொள்ளாதே! என் அண்ணன் வஞ்சிக்கிறவர், அவர் பேச்சை கேட்காதே!....
உமர்: தம்பி, இக்பால் ஒரு இமாம், குர்ஆனை நன்கு கற்றுயிருக்கிறார், அவருக்கு பயமில்லை என்று நான் நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் இக்பால்...
எம். இக்பால்: நான் எதற்கும் பயந்தவனில்லை… நீங்க எப்படி மாற்றிச் சொன்னாலும் சரி, என்னிடம் யாரும் வாலாட்டமுடியாது...
உமர்: தட்ஸ் த ஸ்பிரிட்...
அந்த உவமையில் வரும் செல்வந்தன் என்ற இடத்தில் "இக்பால்" உங்களை கற்பனைச் செய்துக்கொள்வோம், மற்ற விவரங்கள் அப்படியே இருக்கட்டும் சரியா?
எம். இக்பால்: சூப்பர், இது தான் சரியான போட்டி, எனக்கும் இது தான் வேண்டும்..
நான் தான் அந்த செல்வந்தன் என்று நீங்கள் சொன்னதால், அவன் பேசிய கடைசி வரிகளையே என் கேள்விகளாக முன்வைக்கிறேன்.
என் கேள்வி இந்த கடைசி 2 வசனங்களிலிருந்து தான்: லூக்கா 16:30-31
16:30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
16:31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.
"லாசரு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்துச் சென்றால், தன் சகோதரர்கள்" நம்புவார்கள் என்று இக்பால் (அதாவது அந்த செல்வந்தன்) கூறினான், ஆனால் அதற்கு இப்ராஹீம் என்ன பதில் கொடுத்தார்?
"மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் தேவையில்லை, அவர்களிடம் இருக்கும் வேதமே அவர்களுக்கு போதுமானது" என்று இப்ராஹீம் கூறுகின்றார்.
ஆக, இரட்சிக்கப்படுவதற்கு மரித்தோரிலிருந்து இயேசு எழுந்திருக்கவேண்டிய அவசியமில்லை, வேதம் மட்டும் இருந்தால் போதும் என்று இப்ராஹீமே சொல்கிறார் என்று புரிகிறதல்லவா?
விசுவாசத் தந்தை என்று அழைக்கப்படும் இப்ராஹீம் அவர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் கேட்கவேண்டுமா? இல்லையா?
இதற்கு பதில் சொல்லுங்கள்.
உமர்:அருமையான முயற்சி.
முதலாவதாக, ஆபிரகாம் "இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி இங்கு குறிப்பிடவில்லை" என்பதை இக்பால் நீங்கள் கவனிக்கவேண்டும்.
மேலும், இயேசு தம்முடைய சில உவமைகளில் "தம் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் போன்ற விவரங்களை" குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த உவமையில் யூதர்களின் பொய்யான நம்பிக்கையைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கும்படி இதனைச் சொன்னார்.
1) அக்கால யூதர்கள், "உலகப்பிரகாரமான செழிப்பான வாழ்க்கை ஒரு யூதனுக்கு கிடைத்து விட்டால், அது தேவன் அங்கீகரித்த வாழ்க்கை" என்று நம்பிக்கொண்டு இருந்தார்கள். இது நூறு சதவிகிதம் உண்மையல்ல என்பதைக் காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். செழிப்போடு கூட 'கருணையும், நன்மை செய்யும் குணமும் தேவை' அப்போது தான் பரலோக ராஜ்ஜியம் செல்லமுடியும் என்பதை எடுத்துக் காட்ட இயேசு இந்த உவமையை கூறினார்.
2) அடுத்ததாக, யூதர்களிடம் இருந்த தேவைக்கும் அதிகபடியான விசுவாசம் என்னவென்றால் "ஆபிரகாம் எங்கள் பிதா, எனவே, நாங்கள் வழிமாறிப்போக வாய்ப்பு இல்லை, தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிச்சயம் நிறைவேறும், எங்களை யாருமே அசைக்கமுடியாது' என்ற பொய்யான விசுவாசமாகும்.
இந்த இரண்டையும் இயேசு மேற்கண்ட உவமையில் தகர்த்துப்போட்டார்.
இந்த உவமையில் ஐந்து முறை ஆபிரகாமின் பெயர் வருகிறது, அந்த செல்வந்தனும் "தகப்பனாகிய ஆபிரகாமே" என்று இரண்டு முறையும், “தகப்பனே” என்று ஒரு முறையும் அழைக்கிறான் (வசனங்கள்:24,27 & 30), ஆபிரகாமும் அவனைப் பார்த்து "மகனே" என்று அந்த செல்வந்தனை அழைக்கிறார் (வசனம் 25). ஆனால், ஒருமுறையும் கூட லாசரு அந்த செல்வந்தனை பார்த்ததாக குறிப்பு இல்லை (அது தேவையும் இல்லை), மற்றும் லாசரு ஒன்றுமே பேசவில்லை.
செல்வந்தனும் யூதன் தான், லாசருவும் யூதன் தான். இருவரும் ஆபிரகாமுக்கு பிள்ளைகள் தான், யார் பூமியில் வாழும் போது, நன்மை செய்து, மற்றவர்கள் மீது கருணை காட்டுகிறார்களோ, அவர்கள் தான் "ஆபிரகாமோடு உட்காரமுடியும்", பரலோக ராஜ்ஜியம் செல்லமுடியும் என்பதை விளக்க இயேசு இந்த உவமையைச் சொன்னார்.
ஆக, இமாம் இக்பால் அவர்களே, இயேசுவின் உயர்த்தெழுதல் பற்றிய கேள்வியே இந்த உவமையில் வரவில்லை, அதைப் பற்றி இயேசு இதனை கூறவில்லை என்பது தான் உண்மை.
எம். இக்பால்: நீங்கள் சொல்வது உண்மையானால், அந்த செல்வந்தன் 30வது வசனத்தில் "தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள்" என்று ஏன் சொன்னான்? ஒரு அற்புதம் நடந்தால், முக்கியமாக மரித்த பிறகு ஒருவன் உயிரோடு எழுந்திருந்து, இப்படியெல்லாம் உரையாடல் நடந்தது என்றுச் சொன்னால், மக்கள் நம்புவார்கள் அல்லவா?
ஏன் ஒருவன் உயிர்த்தெழுந்து போனாலும் மக்கள் நம்பமாட்டார்கள் என்று ஆபிரகாம் கூறினார்?
உமர்: "அற்புதங்கள், அடையாளங்கள்" தற்காலிகமான அத்தாட்சிகள் ஆகும், அவைகள் நீண்ட கால அத்தாட்சிகள் அல்ல.
எம். இக்பால்: புரியவில்லை, சிறிது விவரமாக விளக்குங்கள்.
உமர்: இதோ சொல்கிறேன். "அற்புதங்கள் தற்காலிகமானவைகள்" ஏனென்றால், அவைகளை கண்களால் கண்டு நம்புகிற சந்ததிக்கு (மக்களுக்கு) மட்டுமே அவைகள் அற்புதங்களாகத் தோன்றும், அவர்கள் அதனை நம்புவார்கள், ஆனால், அடுத்தடுத்த சந்ததி வரும் போது, தங்கள் தகப்பன் அல்லது பெரியவர்கள் சொன்ன விவரங்களை "அற்புதங்களாக ஏற்க மறுப்பார்கள்". இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டால், மக்கள் நடந்துமுடிந்த அற்புதங்களால் கவரப்படுவது அசாத்தியமே! அவர்களுக்கு அந்த நேரத்தில், அற்புதங்களை விட "உண்மையும், யதார்த்தமும், நடைமுறை சாத்தியங்களும் மற்றும் சிறந்த கோட்பாடுகளும் தான் நம்பிக்கையைத் தரும்”.
இதனால் தான் ஆபிரகாம் சொன்னார் "அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான்".
எம். இக்பால்: இன்னும் தெளிவாக எனக்கு புரியவில்லை, புரிவது போல இருக்கிறது, ஆனால் தெளிவாக புரியவில்லை.
உமர்: ஒன்றும் பிரச்சனையில்லை, ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.
இந்த உவமையின் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்காக, அந்த செல்வந்தன், அதாவது "இக்பால் அவர்கள்" சொன்ன ஆலோசனையைக் கேட்டு, ஆபிரகாம் "அந்த லாசருவை இறைவனின் உதவியோடு மறுபடியும் உயிர்பெறச் செய்து, அனுப்பியிருந்தால், என்ன நடந்திருக்கும்" என்று பார்ப்போம்.
எம். இக்பால்: இந்த எடுத்துக்காட்டு நன்றாக இருக்கும், சொல்லுங்கள்.
உமர்: கற்பனை செய்துக்கொள்ளுங்கள், லாசரு மரித்துவிட்டார், அவரை ஒரு கல்லறையில் அடக்கம் செய்துவிட்டார்கள். சில வாரங்கள் அல்லது மாதங்கள் கடந்து அந்த செல்வந்தனும் மரித்துவிட்டான், அவனையும் அடக்கம் செய்துவிட்டார்கள்.
ஒரு பேச்சுக்காக, இவ்விருவருடைய குகை கல்லறையும், அக்கம் பக்கம் இருப்பதாக கருதிக்கொள்வோம்.
செல்வந்தனை கல்லறையில் வைத்துவிட்டு, அவருடைய ஐந்து சகோதரர்களும் அவர்களது குடும்பம் மற்றும் மக்கள் அனைவரும் அங்கேயே நின்று ஒரு மணி நேரமாக அழுதுக்கொண்டும், அஞ்சலி செலித்திக்கொண்டும் இருக்கும் போது, திடீரென்று பக்கத்தில் இருக்கும் "லாசருவின் கல்லறையிலிருந்து அவன் உயிரோடு எழுந்து வருகிறான்" என்று வைத்துக்கொள்வோம்.
அந்த சூழல் எப்படி இருக்கும்? மக்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? பயமாகவும் இருக்கும் அல்லவா?
எம். இக்பால்: எஸ், கரெக்ட். நிச்சயமாக மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதைத் தானே "நான்" சாரி, அந்த செல்வந்தன் ஆலோசனையாக கூறினான்.
இந்த உயிரோடு எழுந்த லாசரு எதைச் சொன்னாலும், மக்கள் நிச்சயம் நம்புவார்கள் அல்லவா?
உமர்: எஸ், நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இன்னும் கதை இருக்கிறது.
நாம் கதைக்குச் செல்வோம்...
லாசரு உயிரோடு வந்தவுடன், மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அவர் வந்து, அந்த ஐந்து சகோதரர்களுடனும், மற்ற மக்களுடனும் 'நடந்த உரையாடலையும், இந்த உலகில் நற்செயல்கள் செய்தால் தான்" பரதீசு என்ற சொர்க்கம் கிடைக்கும் என்றும் சொன்னால், அந்த மக்கள் நம்புவார்கள். மேலும், அவன் சொன்னதின்படி தீய செயல்களை விட்டுவிட்டு, நற்செயல்களை செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இந்த அற்புதம் தற்காலிகமானது.
எம். இக்பால்:அது எப்படி? மக்கள் மனந்திரும்பினார்களே! அந்த செல்வந்தனின் சகோதரர்களும் திருந்தி வாழ்ந்தார்களே!
உமர்: ஆமாம், அவர்கள் மனந்திரும்பினார்கள், ஆனால், அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் அனைவரும் மரித்துவிடுவார்கள். அடுத்த சந்ததி வரும், இந்த நிகழ்ச்சியை பார்க்காத மக்கள், பிள்ளைகள் வரும் போது, இந்த அற்புதம் அவர்களுக்கு பயன்படுமா?
ஒரு தோராயமாக கணக்கு போட்டாலும், அடுத்த சந்ததியில் "தங்கள் பெற்றோர்கள் கண்ட அற்புதங்களை" நம்பியவர்கள் 50% என்று எடுத்துக்கொண்டாலும், அடுத்த 50 ஆண்டுகள் கழித்து, அந்த அற்புதத்தை நம்புகிறவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
அடுத்த 150 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது, நம் கொள்ளுத்தாத்தா காலத்தில் இப்படி நம் ஊரில் நடந்தது என்றுச் சொன்னால், யாருமே நம்பமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கண்களால் பார்க்கவில்லையே!
இன்று கூட நம் குடும்பங்களில் சில கதைகளைச் சொல்லும் போது, நாம் நம்புவதில்லை, ஏனென்றால், நம் காலத்தின் சூழ்நிலையின் படி நாம் வளர்க்கப்படுவதாலும், நாம் பார்க்காததாலும், நாம் நம்புவதில்லை.
இதனால் தான் "அற்புதங்கள்" அனைத்தும் தற்காலத்திற்கு பயன்படும், அதனை காண்கின்ற சந்ததிக்கு பயன்படும், அடுத்தடுத்த சந்ததிக்கு பயன்படாது. எனவே தான், ஆபிரகாம் "அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு" என்றார். தௌராத்திலும் மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களிலும் இறைவன் செய்த அற்புதங்கள் அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளன (பார்வோனிடத்தில் மோசே செய்த அற்புதம், செங்கடல் பிளக்கப்பட்டது, இன்னும் பல அற்புதங்கள்). அவைகளை படித்து, "அவைகள் உண்மையாகவே நடந்தவைகள்" என்றும், "இறைவன் அவைகளைச் செய்தான்" என்றும் நம்பவேண்டும்.
அந்த ஐந்து சகோதரர்களுக்கு பழைய ஏற்பாடு உண்டு, அவைகளை அவர்கள் நம்பி வாழாவிட்டால், இன்று ஒரு அற்புதம் செய்தாலும், அவர்களுக்கு அது பயன்படும், ஆனால், அது நிரந்தர தீர்வு ஆகாது. இதனால் தான் "ஆபிரகாம் அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும்" என்று கூறினார்.
தம்பி: அண்ணே, இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளதல்லவா, அதாவது "லாசரு உயிரோடு எழுந்தது மற்றும் பேசியது, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆச்சரியம் உண்டாக்கினாலும், தன் சகோதரன் பாதாளத்தில் துக்கப்படுகிறான், ஆனால், இந்த பிச்சைக்காரன் லாசரு, ஆபிரகாமின் மடியிலா" என்ற கோபமும் அவர்களுக்கு உண்டாகி அவனை தாக்க முயலுவதற்கு வாய்ப்பு இருக்கிறதல்லவா?
உமர்: ஆம், இப்படியும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், இயேசு யூதர்களின் கண்களுக்கு முன்பாக மிகபெரிய அற்புதங்கள் செய்தாலும், அதனை கண்களால் கண்டும், அனேகர் அவரை நம்பவில்லையே!
மேலும் எகிப்திலிருந்து வெளியே வந்த இஸ்ரவேலர்கள் அனேக அற்புதங்களை கண்டபிறகும், பல முறை சந்தேகம் கொண்டு, மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
எம். இக்பால்: சரி, உமர் அவர்களே! இதுவரை சொன்ன விவரங்கள் எனக்கு புரிந்தது. அற்புதங்கள் தற்காலிகமானவை என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள், சில வேளைகளில் அவைகளினால் எந்த பயனுமில்லை என்றும் சொல்கிறீர்கள். இதனை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், உங்களுடைய சில விமர்சனங்களை நான் படித்த போது "எங்கள் இறைத்தூதர் ஒரு அற்புதமும் செய்யவில்லை, அதனால் அவர் நபி/தீர்க்கதரிசி இல்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களே", இது நியாயமா?
ஒரு பக்கம் "அற்புதங்கள் தேவையில்லை, அவைகள் பயன்படாது, அவைகள் தற்காலிகமானவை" என்று சொல்கிறீர்கள், இன்னொரு பக்கம் "முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமும் செய்யவில்லை எனவே அவர் நபியில்லை" என்றுச் சொல்கிறீர்கள். இது என்ன நிலைப்பாடு?
ஏன் இரண்டு வகையாக பேசுகிறீர்கள், விமர்சிக்கிறீர்கள்? இறைத்தூதர் முஹம்மதுவிடம் வந்தால் ஒரு நிலைப்பாடு, கிறிஸ்தவ கோட்பாடு என்று வந்தால் இன்னொரு நிலைப்பாடா?
இதற்கு பதில் சொல்லுங்கள்.
தம்பி: சரியான பாயிண்டை பிடித்துவிட்டீர்கள் இக்பால். நெத்தியடி கேள்வி, பதில் சொல்லுங்க அண்ணே!
உமர்: நான் என் வார்த்தைகளை மாற்றி சொல்லவில்லை. என் நிலைப்பாடு ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது, நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துக்கொள்ள்வில்லை.
அற்புதங்களினால் தற்காலிக பலன்கள் தான் கிடைக்கும், அவைகள் நிரந்தரமானவைகள் அல்ல என்பது உண்மை. அதே போன்று ஒருவர் தன்னை நபி என்றுச் சொல்லிக்கொண்டால், தன்னுடைய நபித்துவத்தை நிருபிக்க அவருக்கு அற்புதங்கள் வேண்டும், அப்படி அவர் அற்புதங்கள் செய்யவில்லையென்றால், எதை வைத்துக்கொண்டு அவரை நம்பி மக்கள் வருவார்கள்?
இந்த லாசரு உவமையில், யாரும் தம்முடைய நபித்துவத்தை நிருப்பிக்கும் நிர்பந்தத்தில் இல்லை, ஆனால், முஹம்மதுவின் விஷயத்தில் "அவரை நபி என்று ஏற்றுக்கொள்ள குறைந்தபட்ச தேவையாக அற்புதங்கள்" தேவை என்றுச் சொல்கிறேன்.
உங்கள் இருவரிடம் ஒரு கேள்வி: நாளைக்கு உங்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ் அனுப்பிய அடுத்த நபி நான் தான், என்னை நம்பி என் பின்னால் வாருங்கள், இல்லையேல், அல்லாஹ் உங்களை நரகத்தில் தள்ளுவான் என்றுச் சொல்கின்றான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் சொல்வதை அப்படியே நம்புவீர்களா?
எம். இக்பால்: அது எப்படி நம்பமுடியும்? அனேக கள்ள நபிகள் உலகில் இருக்கிறார்கள் அல்லது வருவார்கள்,எனவே அவரிடம் அத்தாட்சி என்ன என்று கேட்பேன்.
உமர்: அவர் உடனே "14 அத்தியாயங்கள் அடங்கிய ஒரு சிறிய புத்தகம் காட்டி, இது தான் அத்தாட்சி, இதன் பெயர் கர்ஆன்", இது தான் வேதம், இதை நீங்கள் நம்பவேண்டும், இது உயர்ந்த இலக்கண நடையில் எழுதப்பட்டுள்ளது, எனக்கு அல்லாஹ் வஹீ மூலம் கொடுத்தது என்றுச் சொல்கிறார். இதற்கு உங்கள் பதில்?
எம். இக்பால்: சிரிக்கிறார்... போடா பைத்தியம், ஒரு புத்தகத்தைக் காட்டி நபி என்றுச் சொன்னால், எப்படி நம்புவோம் என்று கேட்பேன்.
உமர்: இதைத் தானே முஹம்மதுவும் செய்தார்.
நீங்கள் அவரைப் பார்த்து, "பைத்தியம்" என்று சொன்னது போலவே, மக்கா மக்களும், அன்றைய யூதர்களும் முஹம்மதுவை பைத்தியம் பிடித்தவர் என்றும், பிசாசு பிடித்தவர் என்றும் சொன்னார்கள்.
இமாம் முஹம்மத் இக்பால் அவர்களே, உங்களுக்கும் அன்றைய மக்காவினருக்கும்/யூதர்களுக்கும் என்ன வித்தியாசம்?
எம். இக்பால்: புரிந்தது! நான் அவரிடம், "புத்தகமெல்லாம் நபித்துவத்துக்கு அடையாளம் ஆகமுடியாது", உங்களை அல்லாஹ் தான் அனுப்பினான், நபியாக நியமித்தான் என்பதற்கு சான்றுகளை காட்டுங்கள் என்று கேட்பேன்.
உமர்: உடனே அவர், "காபிரியேல் தூதன் என்னை சந்தித்தான், இது தான் சான்று" ஆனால், என்னைத் தவிர வேறு யாருமே அவரை பார்க்கமுடியாது என்று அவர் பதில் அளித்தால்?
எம். இக்பால்: இல்லை, இல்லை, குறைந்தபட்சம் ஒரு அற்புதமாவது செய்துக் காட்டி, உங்கள் நபித்துவத்தை நிருபித்துக்கொள்ளுங்கள் என்று கேட்பேன்...
உமர்: அப்படி வாங்க வழிக்கு!
இதைத் தானே, அன்றைய மக்களும் யூதர்களும் முஹம்மதுவிடம் கேட்டார்கள்! ஒரே ஒரு அற்புதம் செய்துக்காட்டி, உன் நபித்துவத்தை நிருபித்துக்கொள் என்று கேட்கும் போது, அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லையே!
எப்படி அவரை நபி என்று நம்புவது? உலகில் பைத்தியங்கள் நிறைய சுற்றுகின்றன? சைத்தானும் தன் பங்கிற்கு அனேகரை நபி என்றுச் சொல்லி, மக்களை நம்பவைத்துக்கொண்டு இருக்கிறான்.
நல்ல உண்மையான நபி மற்றும் கள்ள நபி என்பதை எதை அவைத்து அடையாளம் கண்டுக்கொள்வது?
இதற்கு யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் அனேக வழிமுறைகள் உள்ளன. முதலாவது அடிப்படை சான்று "அற்புதம் செய்வதாகும், அதன் பிறகு அவருடைய கனிகள், செயல்கள் மூலம் அவரை கண்டுக்கொள்ளலாம்".
எனவே, முஹம்மது போல அரசியலையும், ஆன்மீகத்தையும் சேர்த்து, நபித்துவம் கற்பிக்கும் நபர்களுக்கு அற்புதங்கள் தேவைப்படுகின்றன.
இப்போது உங்களுக்கு புரிந்ததா? இக்பால்
எம். இக்பால்: ம்ம்.. புரிவது போல தெரிகிறது... நாம் இந்த சந்திப்பை முடித்துக்கொள்வோமா?
தம்பி: ஆமாம், முடித்துக்கொள்ளலாம்
உமர்: இருங்க இக்பால், என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது, அதையும் பார்த்துவிட்டு, நாம் முடித்துக்கொள்ளலாம்.
இஸ்லாமில் இப்ராஹீமுக்கு உயர்ந்த இடம் உள்ளது, மேலும் குர்ஆனில் நான் தேடும்போது கிட்டத்தட்ட 69 இடங்களில் இப்ராஹீம் என்ற பெயர் வருகிறது மற்றும் பக்ரீத் பண்டிகை என்பது இவரது தியாகத்தின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட இப்ராஹீம் நபி சொல்லும் ஆலோசனையை முஸ்லிம்களாகிய நீங்கள் கேட்பீர்களா?
எம். இக்பால்: இந்த கேள்விக்கே இடமில்லை, இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் நண்பர், எனவே அவர் சொல்வதை நிச்சயம் நாம் கேட்போம்.
உமர்: அப்படியானால், அவர் 29வது வசனத்தில் சொல்வதை கவனியுங்கள்:
லூக்கா 16:29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
முஸ்லிம்களாகிய நீங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களை படிக்கும்படி அவர் ஆலோசனை சொல்கிறார்:
- நீங்கள் மோசேயின் தவ்ராத்தை படிப்பீர்களா?
- மற்ற தீர்க்கதரிசன புத்தகங்களை படிப்பீர்களா?
மரித்த பிறகு நாம் வாழப்போகும் வாழ்க்கை, அந்த லாசருவைப்போன்று மகிழ்ச்சியாக, சொர்க்கத்தில் வாழவேண்டுமென்றால், இப்ராஹீம் சொல்லும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
எம். இக்பால்: இந்த உவமையில் அவர் வெறும் மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் என்று மட்டுமே சொல்கிறார், மற்ற புத்தகங்களைச் சொல்லவில்லையே!
உமர்: பழைய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களை மூன்றாக பிரித்துள்ளார்கள், தோரா, நெவிம் மற்றும் கெதுவின்.
இப்ராஹீம் சொன்னவைகளை அப்படியே மேலோட்டமாக எடுத்துகொண்டாலே 26 புத்தகங்கள் வருகின்றன:
- தௌராத்தில் (தோரா) ஐந்து (5) மோசேயின் புத்தகங்கள் வருகின்றன.
- நெவிம் என்றால் நபிகள்/தீர்க்கதரிசிகள் என்று பொருள், இந்த பிரிவில், பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள் வருகின்றன. யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல் 1 & 2, ராஜாக்கள் 1 & 2, ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் இதர 12 சிறிய தீர்க்கதரிசன புத்தகங்கள் வருகின்றன, மொத்தம் 21 புத்தகங்கள் வருகின்றன.
இப்ராஹீம் நபி சொன்னதை ஆழமாக ஆய்வு செய்தால், பழைய ஏற்பாட்டின் "கெதுவின்(எழுத்துக்கள்)" என்ற பிரிவில் உள்ள இதர புத்தகங்களாகிய சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி போன்ற மீதமுள்ள புத்தகங்களும் அடங்கும், ஏனென்றால், இவைகளை கூட நபிகள் தானே எழுதினார்கள். தாவீதுக்கு ஜபூர் என்ற சங்கீதம் என்ற வேதத்தை கொடுத்ததாக குர்ஆன் கூட ஒப்புக்கொள்கிறதே. தாவீது கூட நபி தானே!
நீதிமொழிகளை எழுதிய சாலொமோன் கூட நபி தானே!
ஆக, இப்ராஹீம் நபி சொன்ன ஆலோசனையை முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும் என்று நமக்கு புரிகின்றதல்லவா?
எம். இக்பால்: உமரண்ணே! சும்மா சொல்லக்கூடாது, நீங்க சூப்பரா குழப்புகிறீர்கள்
உமர்: தம்பி இக்பால், நான் குழப்பவில்லை. உங்களுக்கு புரிகின்றது, ஆனால் அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனதில்லை.
முதலில் நீங்கள், லாசரு உவமையில் இல்லாத ஒன்றை, இப்ராஹீம் சொல்லாத ஒன்றை சொன்னீர்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலை இப்ராஹீம் மறுப்பதாகச் சொன்னீர்கள், அதற்கு பதில் கொடுத்தேன்.
இரண்டாவதாக, அந்த செல்வந்தன் சொன்ன "ஒருவர் உயிர்த்தெழுந்து சொன்னால், மக்கள் நம்புவார்கள்" என்ற கருத்துக்கு இப்ராஹீம் கொடுத்த பதிலை விமர்சித்தீர்கள், அதற்கும் பதிலைக் கண்டோம்.
மூன்றாவதாக, முஹம்மதுவின் நபித்துவத்திற்கு சான்றாக அற்புதங்களை ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலைச் சொன்னேன்.
உங்கள் இருவருக்கும் லாசருவின் உவமை இப்போது தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எம். இக்பால்: உங்களிடம் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது...
உமர்: என்னிடம் ஒன்றுமில்லை...பைபிளில் சத்தியம் உள்ளது, அது தான் பேசுகின்றது...
தம்பி: போதும் போதும்...நண்பா இக்பால்... அடுத்த முறை இன்னொரு முக்கியமான விவரங்களோடு களத்தில் இறங்குவோம்...இதோடு நம் மீடிங்கை முடித்துக்கொள்வோம்.
அண்ணா, உங்களுக்கு ரமலான் ஈத் முபாரக்.
உமர்: உங்கள் இருவருக்கும் ரமலான் ஈத் முபாரக். உங்கள் இருவரோடு பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
. . .முற்றிற்று. . .
அடிக்குறிப்புக்கள்:
இதுவரை லாசரு மற்றும் செல்வந்தன் உவமையை படிக்காதவர்கள், இங்கு அதனை படிக்கலாம்.
[1] லூக்கா 16:19-31
19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.
இன்னொரு உவமையோடு சந்திப்போம்...
தேதி: 3rd May 2022