ரமளான் 2022 உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?

ரமளான் 2022 தொடர் கட்டுரைகள் 

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரையை கீழே படிக்கவும்:

முந்தைய உவமை உழவனின் கதையாக தொடங்கி, பிறகு விதையின் கதையாக மாறி கடைசியாக மண்ணின் கதையாக முடிவடைந்தது. இப்போது இந்த இரண்டாவது உவமையில், நாம் பார்க்கப்போவது ஒரு மேய்ப்பனின் கதையாக தொடங்கி, பிறகு,  அது காணாமல் போன ஒரு ஆட்டின் கதையாக மாறி கடைசியாக நம்முடைய கதையாக‌முடியப்போகிறது.

சரி, வாருங்கள் காணாமல் போன ஆட்டை தேடுவோம்...

லூக்கா 15:1-7

1 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர். 3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.( Easy-to-Read Version (ERV-TA))

1) யார் அந்த காணாமல் போன ஆடு? 

மேற்கண்ட உவமையில் இயேசு, காணாமல் போன ஆட்டை யாரோடு ஒப்பிடுகின்றார் தெரியுமா? எந்த ஒரு மனிதன் இறைவனின் வழியில் நடக்காமல், தீய வழியில் நடந்து, பாதை மாறிச் செல்கின்றானோ அவன் தான் 'அந்த காணாமல் போன ஆடு'.

அந்த மேய்ப்பனுக்கு 100 ஆடுகள் இருந்தன, அவைகளில் 99 ஆடுகள் மேய்ப்பனின் சொற்படி கேட்டன, ஆனால் ஒரே ஒரு ஆடு, தன் வழியில் சென்றுவிட்டது, வழிதவறிவிட்டது, அநீதி செய்துவிட்டது, மேய்ப்பனின் எல்லைக்கு வெளியே சென்றுவிட்டது. மேய்ப்பனை விட்டு தூரமாகச் சென்றுவிட்டால், ஓநாய்கள் மற்றும் இதர காட்டு மிருகங்கள் மூலமாக தனக்கு ஆபத்து வருமே என்று அந்த ஆட்டுக்குத் தெரியவில்லை, அது தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்துவிட்டது. 

அந்த ஆட்டைப்போன்று தான் நாமும் இருக்கிறோம். இறைவனின் வழியைவிட்டு தூரமாகச் சென்றுவிட்டோம், நாம் விரும்பியபடி தீய வழியில் வாழ்கிறோம், முக்கியமாக நாம் வாழும் வாழ்க்கை ஒரு தீய வாழ்க்கை என்று அறியாமல் வாழ்கிறோம். இப்படி வழிதவறி அறியாமையில் சென்றுவிட்ட ஆட்டைத் தேடி நம் மேய்ப்பன் வருவானா? நம்மை தேடி கண்டுபிடிப்பானா? மறுபடியும் தம் சொந்த மந்தையில் கொண்டுச் சென்றுச் சேர்ப்பானா?

2) யார் அந்த மேய்ப்பன்? அவன் என்ன செய்தான்?

போனால் போகட்டும்! வரம்பு மீறி, அநீதி செய்து தன்னைவிட்டு வெளியே சென்றுவிட்ட ஆடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்று அந்த மேய்ப்பன் நினைக்கவில்லை. அவன், மற்ற 99 ஆடுகளை ஒரு இடத்தில் விட்டுவிட்டு, அந்த காணாமல் போன ஆட்டை கண்டுபிடிக்கும் வரைக்கும் தேடிக்கொண்டே இருந்தான், காடு மேடு, பள்ளத்தாக்கு, புதர்கள் முட்கள் என்று அனைத்து தடைகளையும் தாண்டி, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அதனை கண்டுபிடித்தான், மீட்டுக்கொண்டான், அந்த ஆட்டின் மீட்பர் ஆகிவிட்டான். ஒருவேளை அந்த ஆடு ஒரு ஓநாயின் வாயில் மாட்டிக்கொண்டு தப்பிக்கமுடியாமல் இருக்கும் நேரத்தில் சென்று, அந்த ஓநாயை துரத்திவிட்டு, அந்த ஆட்டை மீட்டு இருந்திருப்பான். இந்த சண்டையில் அவன் உயிர்த்துறக்கவும் தயாராக இருக்கிறான்.

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பான் என்கின்றான் [1], நான் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தேன் [2] என்று தம்மைப் பற்றி கூறுகின்றான். இந்த மேய்ப்பனுடைய நோக்கமெல்லாம், அந்த காணாமல் போன ஆடு கூட மீதமுள்ள 99 ஆடுகளோடு சேர்ந்து தன் பாதுகாப்பிற்குள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்பது தான்.

இது எதை காட்டுகிறது? அவன் நல்ல மேய்ப்பான், அவன் கூலிக்காக அந்த ஆடுகளை மேய்க்கவில்லை, அவைகளை நேசிக்கிறான், தன் உயிர் போகும் நிலை ஏற்பட்டாலும் சரி, அந்த ஆட்டை மீட்கவேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறான்.

இது தான் முந்தைய வேதத்தில் இயேசு கூறிய உவமை.

3) அல்லாஹ் என்ற மேய்ப்பன், காணாமல் போன ஆடுகளைப் பற்றி என்ன சொல்கின்றான்?

குர்‍ஆனின்படி சொல்லவேண்டுமென்றால், அந்த ஒரு ஆடு தான் "காஃபிர்", "பாவி", "அநியாயம் செய்பவன்" மற்றும் “வரம்பு மீறுபவன்” ஆவான்.  இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை,

ஸூரா 2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

ஸூரா 3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.

ஸூரா  3:140. . . . அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.

ஸூரா  4:36. . . . நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

ஸூரா  4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

ஸூரா  5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

மேலும் பார்க்க‌ ஸூரா 7:55, 16:23, 22:38 & 57:23.

அல்லாஹ்வின் படி, முதலாவது நீ என் கூட்டத்திற்கு வெளியே செல்லக்கூடாது, அநியாயம் செய்யக்கூடாது, வரம்பு மீறக்கூடாது, நீ அந்த 99 ஆடுகளின் கூட்டத்தில் இருக்கவேண்டும். என் கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும். முதலாவது நீ எனக்கு கீழ்படி அதன் பிறகு நான் நேசிப்பேன். நீ என்னைவிட்டு தூரமாக வழிகேட்டில் சென்று விட்டால், உன்னை தேடிக்கொண்டு வரமாட்டேன். உன்னை அந்த வழிகேட்டிலேயே விட்டுவிடுவேன்.

நான் வழிதவறிவிட்டேன், நீதிமான்களின் கூட்டத்திலிருந்து என் அறியாமையினால் தூரமாக சென்றுவிட்டேன், தொலைந்துவிட்டேன். என்னைத் தேடி வரமாட்டாயா? என்று அந்த ஆடு கேட்டால், "அல்லாஹ்வின் பதில் என்ன?"

என்னால் உன்னைத் தேடி வரமுடியாது, நீ என்னைத் தேடி வரவேண்டும், அப்போது தான் உன்னை என் கூட்டத்திற்குள் சேர்த்துக்கொள்வேன், உன்னை நேசிப்பேன் என்பதாகும்.

மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.[3]

  • ஸூரா 2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
  • ஸூரா 7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது; ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

முடிவுரை: ஆடுகளின் பரிதாப‌ நிலையிலிருந்து அவைகளை காப்பவன் யார்?

நாம் ஏதோ ஒரு வகையில் தவறுகள் செய்கிறோம், இறைவனை விட்டு தூரமாகச் செல்கிறோம். நீதிமானாக வாழ முயலுகிறோம், ஆனால் இப்லீஷ் என்ற சைத்தான் நம் மனதில் குழப்பங்கள் உண்டாக்கி, நம்மை இறைவனை விட்டு தூரமாக எடுத்துச் சென்றுவிடுகிறான்.  நாம் திரும்பி இறைவனிடம் வருவதற்கு அனேக முறை நாம் முயலுகிறோம், ஆனால் முடிவதில்லை. அந்த காணாமல் போன ஆட்டைபோன்று வரமுடியாத மலை உச்சியில், முட்களின் மத்தியில், ஓநாய்களின் வாய்களில்,  மந்திர சூனியங்களில், விடமுடியாத பாவ பழக்கங்களில் மாட்டிக்கொண்டு, ஒரு மீட்பர் வந்து நம்மை மீட்டுக்கொள்வானா!  என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறோம்.

அந்த காணாமல் போன ஆட்டைப்போன்று நாம் இருப்போமென்றால், இதோ நல்ல மேய்ப்பன் நமக்காக வந்திருக்கிறார், அவர் உங்களுக்காக என்ன செய்கிறார் என்பதை கீழ்கண்ட வசனங்களில் படித்துப்பாருங்கள்.

யோவான் 10:1-16

1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.

4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

6. இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.

7. ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.

13. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.

14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

வாசகர்கள் சிந்திக்க சில கேள்விகள்:

1) நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக என்ன செய்வான்?

2) கூலிக்காக வேலை செய்கிறவன், ஓநாய் வந்து ஆடுகளை சிதரடிக்கும் போது என்ன செய்வான்?

3) நானே வாசல் என்று அந்த மேய்ப்பன் சொன்னதின் அர்த்தமென்ன?

4) ஆடுகள் தன் மேய்ப்பானின் சத்தத்தை எப்படி அறியும்?

5) இந்த மேற்கண்ட வசனங்களுக்கும் (யோவான் 10:1-16), மற்றும் காணாமல் போன ஆடு பற்றிய உவமைக்கும் (லூக்கா 15:1-7) என்ன ஒற்றுமை இருக்கின்றது?

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 3rd April 2022

அடிக்குறிப்புக்கள்:

[1] யோவான் 10:11

[2]  மத்தேயு 18:11

[3] யோவான் 10:12-13


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்