உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

முந்தைய ஐந்தாவது கட்டுரையில் இயேசு கூறிய "கெட்டகுமாரன் (லூக்கா 15:11-33)" என்ற உவமையைப் பற்றி பார்த்தோம். அதனை படித்த என் தம்பி, உடனே எனக்கு மொபைளில் அழைத்து, சரமாரியாக கேள்விகளைக் கேட்டான். அவைகளுக்கு சரிக்கு சமமாக நானும் பதில் அளித்தேன்.  இந்த உவமை "இஸ்லாமில் சொல்லப்பட்ட மன்னிப்பை பிரதிபலிக்கிறது, கிறிஸ்தவத்தில் உள்ள மன்னிப்பை அல்ல" என்று அவன் வாதித்தான்.  வாருங்கள், அந்த உரையாடலை கவனிப்போம். 

உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி

(உமருக்கும் தம்பிக்கும் நடந்த உரையாடல்)

உமரின் மொபைளுக்கு அவரது தம்பி, சௌதியிலிருந்து அழைத்தான்.

தம்பி: ஹலோ, அண்ணே, பிரைஸ் த லாட் (Praise the Lord)

உமர்: பிரைஸ் த லாட் தம்பி. என்ன ஆச்சரியம்! எப்போது போன் செய்தாலும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவாய், இன்று என்ன ஆச்சரியமாக, பிரைஸ் த லாட் என்று கூறுகிறாய். அண்ணனுக்கு சமாதானம் (ஸலாம்) கூறமாட்டாயா? [சிரித்துக்கொண்டே உமர் கேட்டான்]

தம்பி: இன்றைக்கு உங்களுக்கு சமாதானம் இல்லை, "கெட்ட குமாரன்" உவமையைச் சொல்லி நீங்கள் என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டீர்கள்.

உமர்: அப்படியா! பாருடா இந்த உமருக்கு வந்த சோதனை! சரி சொல்லு பார்க்கலாம்.

தம்பி: கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு அல்லது பாவமன்னிப்பு பற்றிய சுருக்கத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உமர்: நீ ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாய் போல் தெரிகிறது. நீயே அதையும் சொல்லிவிடு

தம்பி: சரி, இதோ ஒரு சிறிய சுருக்கத்தைக் கொடுக்கிறேன்.

  • ஆதாமின் மீறுதலினால், ஒட்டு மொத்த மனித இனம் பாவ சுபாவத்தில் விழுந்துவிட்டது.
  • இதனால், இறைவனோடு மனிதன் கொண்ட உறவு முறிந்துவிட்டது.
  • இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவமன்னிப்பு இல்லை.
  • இயேசு இரத்தம் சிந்தி, மனித இனத்திற்கு பாவமன்னிப்பை வாங்கி கொடுத்தார்
  • இறைவனுக்கும் மனிதனுக்கு இடையே உறவு மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது.

உமர்: சூப்பர் தம்பி, நீ என் தம்பி என்று நான் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்!

தம்பி: புகழ்ந்தது போதும்! இப்போது இருக்கு பாருங்க உங்களுக்கு பெரிய அதிர்ச்சி!

நன்றாக கவனியுங்க, அண்ணே! 

நீங்க சொன்ன உவமையில் "பிதா, எந்த ஒரு இரத்தம் சிந்துதல் அல்லது பலி கொடுக்கப்படாமல், மனந்திரும்பி மன்னிப்பு கேட்ட மகனை ஏற்றுக்கொள்கிறார், இந்த உவமையில் இயேசுவும் இல்லை, அவரது இரத்தம் சிந்துதலும் இல்லை. மொத்தத்தில் இயேசு எங்குமே வரவில்லை, அவருக்கு எந்த ஒரு பங்கும் இந்த உவமையில் இல்லை. பிதா தான் இந்த உவமையில் முக்கிய பங்கு வகிக்கிறார். இது எதைக் காட்டுகிறது? இஸ்லாமிய முறையிலான பாவமன்னிப்பை காட்டுகிறது. இது நிச்சயமாக கிறிஸ்தவ முறையிலான பாவமன்னிப்பு அல்ல".

எனவே இயேசு சொன்ன 'கெட்ட குமாரன்' உவமையில், இஸ்லாமிய இறையியல் சொல்லுகின்ற மன்னிப்புத் தான் வெளிப்படுகிறது என்று சொல்லமுடியும், இதற்கு உங்கள் பதில் என்ன? வசமாக மாட்டிக்கொண்டீர்களா?

உமர்: தம்பி, நீ நன்றாக சிந்தித்திருக்கின்றாய்! ஆனால், முக்கியமான பின்னணியை கோட்டை விட்டுவிட்டாயே! 

தம்பி:  பேச்சை திசை திருப்பாதீங்க! நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்களைத் தாங்க.

உமர்: நிச்சயமாக பதில்களைப் பார்க்கலாம், நான் திசை திருப்பவில்லை.

உன் கேள்விகளுக்கான என் பதிலை மூன்று பகுதிகளாக பிரித்து நான் கொடுக்கப்போகின்றேன்.

  1. இந்த உவமையில் இருப்பது யார்? பிதாவா? அல்லது இயேசுவா?
  2. இந்த உவமையின் முக்கிய நோக்கம் என்ன? எதற்காக இயேசு இந்த உவமையை கூறினார்.
  3. இந்த உவமையில் 'இயேசுவின் சிலுவை மரணம் அல்லது இரத்தம் சிந்துதல் மூலமாக கிடைக்கும் பாவமன்னிப்பு பற்றியா சொல்லப்பட்டுள்ளது'?

தம்பி: இது என்ன புது கூத்தாக இருக்கிறதே! நான் என்ன சொல்கிறேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

உமர்: தம்பி, வேதவசனங்களை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அவைகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கவேண்டுமே ஒழிய, நீ அதனை எப்படி புரிந்துக்கொள்கிறாய் அல்லது என்ன வியாக்கீனம் (விளக்கம்) தருகிறாய் என்று பார்க்கக்கூடாது.

உனக்கு புரியும் வகையிலேயே நான் விளக்கம் தருகிறேன். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், நீ கேட்கலாம்.

முதலாவதாக "இந்த உவமையில் இருப்பது யார்? பிதாவா? அல்லது இயேசுவா?" என்பதை கவனிப்போம்.

தம்பி: இதில் என்ன உங்களுக்குச் சந்தேகம், நீங்கள் தான் பல முறை "தகப்பன் தகப்பன்" என்று நேற்றைய கட்டுரையில் சொன்னீர்களே!

உமர்:  அந்த உவமையில் ஒரு தகப்பனும் இரண்டு மகன்களும் வருகிறார்கள். ஆனால் அந்த தகப்பன் "பைபிளின் பிதாவாகிய தேவன் அல்ல", இயேசுவின் உவமையின் படி, அவர் இயேசுக் கிறிஸ்து ஆவார்.

தம்பி: எப்படி நீங்கள் இதனை முடிவு செய்தீர்கள்?

உமர்: லூக்கா 15ம் அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களை படித்துப் பார்.

15:1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். 

15:2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.

15:3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

இயேசு பாவிகளோடும், வரி வசூல் செய்கின்றவர்களோடும் (ஆயக்காரர்கள்) சேர்ந்து உண்கிறார், அவர்களை தன்னிடமாய் சேர்த்துக்கொள்கிறார். 

உடனே யூதர்கள் அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் :"இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்".  இந்த குற்றச்சாட்டுக்குத் தான் இயேசு மூன்று உவமைகளை தொடர்ச்சியாகச் சொல்கிறார். இந்த உரையாடலில் இயேசுவும், யூத மத தலைவர்களும் மற்றும் பாவிகள், ஆயக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற, சமுதாயத்தில் தீயவர்கள் என்று யூதர்களால் முத்திரை குத்தப்பட்ட மக்களும் தான் இருக்கிறார்கள்.

முதலாவது "காணாமல் போன ஆட்டின் உவமையில்", அந்த ஆட்டைத் தேடிச்சென்ற மேய்ப்பன் இயேசு ஆவார். இரண்டாவதாக "காணாமல் போன காசு உவமையில்", அந்த காசை தேடின அந்தப் பெண் இயேசு ஆவார், அதே போன்று, மூன்றாவதாக, "கெட்ட குமாரன் உவமையில்" அந்த தகப்பன் இயேசு ஆவார்.

ஆக, இந்த மூன்று உவமைகளிலும் வரும், மேய்ப்பன், அந்தப் பெண் மற்றும் தகப்பன், இந்த மூவரும் இயேசு ஆவார். இதனை யூதர்களிடம் சொல்லும் போது, இயேசு "பிதாவாகிய தேவனை" இங்கு குறிப்பிடவில்லை, தம்மையே குறிப்பிட்டார்.  

அந்த வழிதப்பித் திரிந்த ஆட்டைப்போன்றும், காணாமல் போன காசைப்போன்றும், கெட்ட குமாரன் போன்றும், இந்த "ஆயக்காரர்களூம் மற்ற மக்களும் இருக்கிறார்கள்", இவர்களை நான் மன்னித்து சேர்த்துக்கொண்டேன், அதாவது நான் தேடி கண்டுபிடித்து சேர்த்துக்கொண்டேன் என்று இயேசு கூறினார்.

எனவே, இந்த உவமையில் "பிதாவாகிய தேவன் இல்லை, இயேசு மட்டுமே மேய்ப்பனாக, காசை தேடிய பெண்ணாக மற்றும் பிதாவாக" இருக்கிறார். உன்னுடைய விளக்கமும், புரிந்துக்கொள்ளுதலும் தவறு தம்பி.

இன்னொரு இடத்தில் இயேசு "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் “ (லூக்கா 19:10)" என்றுச் சொல்கிறார்.

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், இயேசு குமாரனாக இருக்கும் போது எப்படி தம்மை "தகப்பனாக வெளிக்காட்டமுடியும்"?

உமர்: அடப்பாவமே, இந்த சிறிய விவரம் கூடவா உனக்கு புரியவில்லை. இயேசு குமாரன் என்பதும், தேவனுடைய வார்த்தை என்பதும் உண்மை தான். இதற்காக அவர் உலக மக்களுக்கு தகப்பன் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா? இயேசு ஒரு உவமையில் தம்மை தகப்பனாக எடுத்துக்காட்டக்கூடாதா?

இறையியலின் படி, திரியேக தேவனில் அவர் குமாரன் மற்றும் தேவ வார்த்தையாக இருக்கிறார், இது வேறு, அதே போன்று அவர் உலக மக்களுக்கு தகப்பனாகவும், நண்பனாகவும், சகோதரனாகவும் இருந்து உதவி செய்கிறார், ஆறுதல் படுத்துகிறார் இதனை யார் மறுக்கமுடியும்!

நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு கூறுகின்றார், அவரிடம் சென்று "நீர் குமாரன் தானே எப்படி மேய்ப்பன்" என்று கேட்கமுடியாது, அது வேறு இது வேறு.

நான் என் மகனிடம் ஒரு குறிப்பிட்ட கடினமான பிரச்சனையின் போது அவனிடம் "என்னை ஒரு நண்பனாக‌ நினைத்து, உன் பிரச்சனைகளைச் சொல், நான் நிச்சயம் தீர்த்துவைப்பேன்" என்று சொல்லமுடியாதா என்ன?

இயேசுவிற்கு பழைய ஏற்பாட்டில் என்ன பெயர், பட்டப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்று உனக்குத்தெரியுமா? அது "நித்திய பிதா" என்பதாகும்.

ஏசாயா 9:6 

9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

தம்பி: சரி சரி, இந்த உவமையில் வரும் தகப்பன் இயேசு என்று ஒப்புக்கொள்கிறேன், அடுத்த கேள்விக்குப் போங்கள்.

உமர்:அடுத்த கேள்வி, "இந்த உவமையின் முக்கிய நோக்கமென்ன" என்பதைக் காண்போம். எந்த ஒரு உவமையிலும், முழு கிறிஸ்தவ இறையியலின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும் காணமுடியாது என்பதை நான் முன்னமே உனக்குச் சொல்லியுள்ளேன்.

யூதர்கள் எந்த குற்றச்சாட்டை இயேசு மீது வைத்தார்களோ, அதற்கு இயேசு பதில் கொடுத்தார். மேலும் தாம் ஏன் பாவிகளையும், ஆயக்காரர்களையும் சேர்த்துக்கொள்கிறார் என்பதற்கு உவமைகளாக பதில் கொடுத்தார். 

ஒரு ஆட்டையும் விட்டுக்கொடுக்காமல் தேடும் மேய்ப்பன் நான் எனவே என்னிடம் வருகின்ற மக்களை நான் புறம்பே தள்ளமாட்டேன், எனக்கு தீமை செய்து என்னைவிட்டு சென்றுவிட்டாலும், மனந்திரும்பி வந்தால்,அப்படிப்பட்ட மக்களை நான் சேர்த்துக்கொள்வேன் என்பதைக் காட்ட அந்த மூன்று உவமைகளை இயேசு கூறினாரே தவிர, கிறிஸ்தவத்தின் அனைத்து கோட்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய உவமையைச் சொல்லவில்லை.

தம்பி: சரி இருக்கட்டும், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பை எப்படி இந்த உவமையில் பார்க்கமுடிகின்றது என்பதை விளக்குங்கள் பார்க்கலாம்.

உமர்: இது மூன்றாவது கேள்வியாகும். நான் மேலே சொன்ன இரண்டாவது பதிலின் படி, இந்த உவமை என்பது "கிறிஸ்தவத்தின் ஒட்டு மொத்த இரட்சிப்பின் செய்தியோ, அல்லது உவமையோ அல்ல", இது வெறும், இயேசு எப்படி இழந்துப்போனதை, காணாமல் போனதை தேட வந்தார் என்பதை மட்டுமே சொல்லும், ஒரு குட்டி உவமையாகும்.

ஒவ்வொரு உவமைக்கும் ஒரு நோக்கம் இருக்கும், அந்த நோக்கத்தை மட்டுமே அங்கு பார்க்கவேண்டுமே ஒழிய, "ஒட்டுமொத்த பைபிளின் அடிப்படை சத்தியங்களை அந்த ஒரே உவமையில் எதிர்ப்பார்க்கக்கூடாது".

ஆக, அந்த உவமையில் வரும் ஒரு தகப்பனைப்போன்று இயேசு மக்களை நேசிக்கிறார் என்பதைக் காட்டவே அந்த உவமை சொல்லப்பட்டுள்ளது.

நம் பாவங்களை கழுவவே இயேசு மரித்தார் என்பதை புரிந்துக்கொள்ள, மேற்கண்ட உவமையில் நமக்கு பதில் கிடைக்காது, இதனை வேறு இடங்களில் இயேசு கூறிய வார்த்தைகளை கவனிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு மத்தேயு 26:26-28வரையுள்ள வசனங்களை படிக்கவேண்டும் தம்பி, முக்கியமாக 28ம் வசனத்தை கவனிக்கவும்.

மத்தேயு 26:26-28

26:26. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

26:27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

26:28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

மேலும் பார்க்க:  மத்தேயு 20:28. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.

இன்னும் பழைய ஏற்பாட்டிலிருந்து பார்க்கவேண்டுமென்றால், கீழ்கண்ட ஏசாயா வசனங்களை பார்க்கவேண்டும் தம்பி:

ஏசாயா 53:6-12

53:6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

53:7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

53:8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

53:9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

53:10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

53:11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

53:12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

தம்பி: போதும்.. போதும் அண்ணே! வசனங்களை மழை போல கொட்டிக்கொண்டு இருக்காதீங்க...

உமர்:  கெட்ட குமாரன் உவமையில் வரும் அந்த நல்ல அன்பான தகப்பன் இயேசு ஆவார் என்றும், மேலும், இந்த உவமையில் வரும் மன்னிப்பு, இயேசுவின் அன்பைக் காட்டும் மன்னிப்பு என்றும் இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா?

மேலும், இந்த உவமையில் சொல்லப்பட்ட மன்னிப்பு "உலக இரட்சிப்புக்காக சொல்லப்பட்ட இரத்தம் சிந்துதலினால் கிடைக்கும் மன்னிப்பு அல்ல" என்பது இதன் மூலம் நாம் அறியலாம். 

தம்பி: என்னவோ போங்க, எது சொன்னாலும் எதோ ஒருவகையில் கௌண்டர் அட்டாக் செய்து, சின்னப் பையனா ஏமாற்றி விடுகிறீர்கள்!

உமர்: நீ சின்னப் பையனா? உன்னை ஏமாற்றுகிறேனா நான்?  நீ பைபிள் வசனங்களை பின்னணியை விட்டுவிட்டு, தவறாக புரிந்துக்கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கும் போது, நான் அதனை சரி செய்கிறேன். என்னவோ நான் ஏமாற்றுவது போல சொல்கிறாய்!

தம்பி: சரி, சரி, வருகிறேன், அடுத்த முறை சந்திப்போம், அஸ்ஸலாமு அலைக்கும்!

உமர்: ஆரம்பத்தில் என்னவோ, "உங்களுக்கு சமாதானம்" இல்லை, வெறும் பிரைஸ் த லாட் (Praise the Lord) மட்டும் தான் என்று சொன்னாய்! இப்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்றுச் சொல்கிறாய்! 

தம்பி: இருக்கட்டும் இருக்கட்டும், வாழ்ந்துவிட்டுப் போங்க... என்ன செய்யறது! அண்ணனாகிவிட்டீர்கள்! உங்களுக்கு ஸலாம் சொல்லாவிட்டால் எப்படி..... குட் நைட்  [சிரிக்கிறான் தம்பி]... 

உமர்: குட் நைட் தம்பி, வஅலைக்கும் ஸலாம்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 14th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்