2024 ரமளான் தியான கட்டுரைகள் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : நாள் 3: சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்?

2024 ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. 2024 ரமளான் தியான கட்டுரைகள் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : நாள் 1 (சங்கீதம் காட்டும் சத்திய வழி)
  2. 2024 ரமளான் நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்

இந்த தொடரில் சங்கீதம் 1ல் முஹம்மது பற்றிய செய்தி உள்ளது என்று கருதும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய பதிலை கொடுக்கப்போகிறோம்.

1) ஜபூரில் (சங்கீதம்) முஹம்மது பற்றிய முன்னறிவிப்பா?

கீழ்கண்ட தொடுப்பில், முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு ஒன்றாம் சங்கீதத்தில் உள்ளது என்று முஸ்லிம்களில் சிலர் சொல்லும் வாதத்திற்கு சில வரிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளது

அதாவது சங்கீதத்தின் முதல் மூன்று வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் நபர் (அல்லது பாக்கியவான்), முஹம்மது என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றார்கள். அவ்வசனங்களை இப்போது படிப்போம், அதன் பிறகு நம்முடைய பதிலை காண்போம்.

ஜபூர் சங்கீதம் 1:1-3 வசனங்கள்:

1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

சங்கீதம் 1ல் முஹம்மது பற்றிய கூறப்படவில்லை என்பதற்கு நான்கு காரணங்களை சுருக்கமாக காண்போம்

காரணம் 1: இவ்வசனங்கள் பொதுவான ஒரு நபரைப் பற்றிச் சொல்கின்றன, ஒரு குறிப்பிட்ட நபராகிய முஹம்மது பற்றியல்ல‌

மேற்கண்ட மூன்று வசனங்களை மறுபடியும் படித்துப் பாருங்கள். இவைகளில் வருவது, ஒரு பொதுவான நபர்கள் பற்றியது, அதாவது எவன் ஒருவன் இந்த நல்ல காரியங்களைச் செய்வானோ, அவன் பாக்கியவானாக இருப்பான் என்பதாகும்.

இவைகள் முஹம்மது என்ற தனிமனிதன் பற்றி சொன்னதல்ல. 

ஒரு எடுத்துக்காட்டுக்காக, குர்‍ஆன் 4:111ஐ படியுங்கள்:

  • குர்‍ஆன் 4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

குர்‍ஆனின் இவ்வசனம், ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்காது, அதற்கு பதிலாக தீய வழியில் யார் நடக்கிறார்களோ, அவர்களை இது குறிக்கும், இதே போன்று தான், சங்கிதம் 1ன் முதல் மூன்று வசனங்கள்.

ஆகையால், முஹம்மது பற்றி சங்கீதம் 1ல் எந்த குறிப்பும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

காரணம் 2: முஹம்மது தவ்ராத்தை படிக்கவில்லை & தியானிக்கவில்லை

இரண்டாம் வசனத்தில் "கர்த்தருடைய வேதத்தில்" என்று வருகிறது. இங்கு "வேதத்தில்" என்ற தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தை மூல எபிரேயத்தில் "தவ்ராத்" என்று உள்ளது.

  • சங்கீதம் 1:2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

குறிப்பாக, தவ்ராத் என்றுச் சொன்னால், அது மோசேவிற்கு இறக்கப்பட்ட வேதமாகும். இந்த தவ்ராத்தைப் பற்றி தான் குர்‍ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நாம் இரண்டாம் கட்டுரையில் பார்த்தோம்.

சரி நம் ஆய்விற்கு வருவோம், சங்கீதம் 1:2ன் படி "யார் பாக்கியவான்"? தவ்ராத்தை இரவும் பகலும் படித்து தியானம் செய்பவன் தான் பாக்கியவான் ஆவான்.

முஹம்மது ஒரு முறையாவது தவ்ராத்தை படித்துள்ளாரா? என்று ஆய்வு செய்து பார்த்தாலோ, அல்லது முஸ்லிம்களிடம் கேட்டாலோ என்ன பதில் வரும்?

"இல்லை, எங்கள் இறைத்தூதர் எழுத படிக்க தெரியாதவர், எனவே அவர் தவ்ராத்தை சுயமாக படிக்கவில்லை" என்றுச் சொல்வார்கள்.

ஆமாம், இதைத் தான் நாமும் சொல்கிறோம், சங்கீதம் 1:2 மிகவும் தெளிவாக "இரவு பகலும் தவ்ராத்தை" தியானம் செய்பவன் பாக்கியவான் என்றுச் சொல்கிறது. முஹம்மது நிச்சயமாக இதை செய்திருக்கமுடியாது, எனவே இங்கு வரும் நபர் முஹம்மது அல்ல, அது பொதுவாகச் சொல்லப்பட்ட ஒரு செய்தியாகும் என்பது நமக்கு இப்போது புலனாகும்.

முஹம்மது வாழ்ந்த காலத்தில் தவ்ராத்தை (பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை) பார்த்துள்ளார், இதற்கு ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன. சில வேளைகளில் யூதர்களை அழைத்து, தவ்ராத்திலிருந்து சில வசனங்களை படிக்கச் சொல்லி (எபிரேய மொழியில்) முஹம்மது கேட்டுள்ளார். ஆனால், முஹம்மது தனக்கென ஒரு தவ்ராத் பிரதியை வைத்துக்கொண்டு, அதனை தினமும் படித்தார் என்றோ, அல்லது தன் சஹாபாக்கள் ஒருவர் முலமாக படிக்கச் சொல்லி, தினமும் கேட்டு அறிந்தார் என்றோ சொல்லமுடியாது.

எனவே, முஹம்மது முதல் சங்கீதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது சான்றுகள் உள்ள உண்மையான கூற்றாகும்.

காரணம் 3: முஹம்மது யெகோவா தேவனை தொழவில்லை, அல்லாஹ்வை தொழுதார்

கடைசியாக, முஹம்மது யெகோவா தேவனை தொழவில்லை, அவர் அல்லாஹ் என்ற தெய்வத்தைத் தான் தொழுதார் என்பதை நாம் அறிவோம்.

சங்கீதம் 1:2ல் வரும் "கர்த்தருடைய வேதத்தில்" என்ற வார்த்தை, எபிரேய மூல மொழியில், "யெகோவாவின் தவ்ராத்தில்" என்று இருக்கிறது. இதனை தமிழாக்கம் செய்யும்போது, "பழைய ஏற்பாட்டில் எங்கேயெல்லாம் 'யெகொவா' என்று வருகிறதோ, அங்கேயெல்லாம் "கர்த்தர்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள், மேலும் தவ்ராத் என்ற வார்த்தையை "வேதம், சட்டம், நியாயப்பிரமாணம்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

  • சங்கீதம் 1:2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

முஹம்மதுவிற்கு யெகோவா தேவன் யார் என்று தெரியாது.

குர்‍ஆனில் ஒருமுறை கூட 'யெகோவா' என்ற பெயர் வராது.

முஹம்மது பேசியபோதும், சட்டங்களை கொடுக்கும் போதும், பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குறிப்பிடும் போதும், அவர் ஒரு போதும் "யெகோவா" என்ற பைபிளின் தேவனின் பெயரை குறிப்பிட்டதில்லை.

சில முஸ்லிம்கள் "அல்லாஹ்வும் யெகோவா தேவனும்" ஒருவரே என்றுச் சொல்வார்கள், ஆனால், இது பொய்யான கூற்றாகும். குர்‍ஆனின் இறைவனும், பைபிளின் இறைவனும் வெவ்வேறானவர்கள் என்பதை பல சான்றுகளுடன் கட்டுரைகளில் விளக்கியுள்ளோம்.

ஆகையால், யெகோவாவை அறியாதவர், அவருடைய தவ்ராத்தை எப்படி தியானித்து இருப்பார்? நிச்சயமாக இல்லை.  எனவே சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை, இதற்கு வாய்ப்பே இல்லை.

காரணம் 4: சங்கீதம் 1 எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய தீர்க்கதரிசனம் அல்ல

கடைசியாக, சங்கீதம் 1ல் வரும் வசனங்கள் தீர்க்கதரிசன வசனங்கள் அல்ல, அவைகள் பொதுவான கூற்றுக்கள் ஆகும். அவைகள் முஹம்மது பற்றிய தீர்க்கதரிசன வசனங்களே என்று சொல்லும் முஸ்லிம்களின் கூற்றில் எந்த ஒரு சான்றும் இல்லை.

தீர்க்கதரிசன (எதிர்கால முன்னறிவிப்பு) வசனங்கள் என்றால், அவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் படி இருக்கும், ஆனால், இந்த சங்கீதத்தில் அப்படிப்பட்ட எதிர்கால முன்னறிவிப்பு எதுவுமே இல்லை. 

ஆகையால், முஹம்மது முதல் சங்கீதத்தில்(ஜபூர்) இல்லை என்பது தான் உண்மையான கூற்று ஆகும்.

முடிவுரை:

மேற்கண்ட நான்கு காரணங்களை ஆய்வு செய்யும் போது, சங்கீதம் 1ல் முஹம்மது  பற்றிய முன்னறிப்பு இல்லை என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

சங்கீதம் 1, ஒரு பொதுவான விவரத்தைச் சொல்கிறது, அது எதிர்கால முன்னறிவிப்பு உள்ள வசனங்களைச் சொல்வதில்லை. மேலும், முஹம்மது தவ்ராத்தை படித்ததும் இல்லை, இரவும் பகலும் தியானித்ததும் இல்லை. இது மட்டுமல்ல, முஹம்மதுவிற்கு அல்லாஹ்வைத் தெரியுமே தவிர , யெகோவா தேவனைத் தெரியாது.

அடுத்த ஆய்வுக் கட்டுரையில், ஜபூர் காட்டும் சத்திய மார்க்கத்தை இன்னும் அறிந்துக்கொள்வோம்.

தேதி: 10th March 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்