ரமளான் நாள் 26
இன்னும் விடுதலையாகாத மனிதன் யார்? அடிமையாக இருக்கும் மனிதன் யார்?
['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]
அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
இன்று ஆகஸ்ட் 15, அதாவது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாள். கடந்த 66 ஆண்டுகளாக நாம் சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்தின் விலை என்னவென்று உனக்குத் தெரியுமா? குறைந்தபட்சம் சுதந்திரத்தின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா தம்பி.
நான் மேலை நாட்டு மக்களை பார்க்கும் போது, அவர்கள் அளவுக்கு அதிகமாக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக காண்கிறேன். அதே நேரத்தில் இஸ்லாமியர்களை காணும் போது, "சுதந்திரத்தின் வாசனையை கூட இவர்கள் சுவாசிக்காதவர்கள்" என்று எண்ணத்தோன்றுகிறது. அதாவது முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அவர்கள் இன்னும் அடிமைகளாகவே இருப்பதாக காண்கிறேன். மேலை நாட்டவர்கள் சுதந்திரத்தை அளவுக்கு அதிகமாக தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இஸ்லாமியர்களுக்கோ, அதன் வாசனையும் இன்னும் காட்டப்படவில்லை. என்னடா அண்ணன் குழப்புகிறானே என்று பார்க்கிறாயா? உனக்கு நான் தெளிவாக விளக்குகிறேன், சுந்திரமாக படித்துக்கொள்.
உனக்கு மூன்று வகையான சுதந்திரம்பற்றி நான் கூறப்போகிறேன். இதில் மூன்றாவதாக சொல்லப்போகும் சுதந்திரம் தான் உன்னை அதிகமாக சிந்திக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.
1) நாட்டு சுதந்திரம்
2) மத சுதந்திரம்
3) ஆன்மீக சுதந்திரம் (அ) உள்ளான சுதந்திரம்
1) நாட்டு சுதந்திரம்:
முதலாவதாக, நாட்டு சுதந்திரம் பற்றி பார்ப்போம், நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. நம்மை நாமே ஆட்சி செய்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். சிலர் "அரசியல் வாதிகளிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறோமே, எங்கே சுதந்திரம் கிடைத்தது" என்று வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள், உண்மை தான், ஆனால், மற்ற நாட்டுக்காரனிடமிருந்து விடுதலை கிடைத்ததே, இதுவே மிகப்பெரிய சுதந்திரம். ஆக, இந்தியாவில் வாழும் அனைவருக்கும், மத பாகுபாடு இன்றி நாட்டு சுதந்திரம் கிடைத்துள்ளது.
2) மத சுதந்திரம் (முஸ்லிம் ஒரு அடிமையாவான்):
கிறிஸ்தவனுக்கும், இந்துவிற்கும் மத சுதந்திரம் உண்டு, ஆனால் ஒரு முஸ்லிமுக்கு மத சுதந்திரம் இல்லை. இந்திய மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்று அரசியல் சாசனம் சொல்கிறது இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முஸ்லிமுக்கு தன் மதத்தை விட்டு வெளியே வந்து தனக்கு பிடித்தமான மார்க்கத்தை பின்பற்ற அனுமதியில்லை. அரசு அனுமதித்தாலும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், மக்கள் அனுமதிப்பதில்லை.
எனவே, முஸ்லிம் மத சுதந்திரம் கிடைக்காத ஒரு அடிமையாக இருக்கிறான். பேச்சுக்காக அப்படியெல்லம் ஒன்றுமில்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறினாலும், உண்மையில் இஸ்லாமிலிருந்து வெளியே வரும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள், துன்பங்கள், பயமுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் கொஞ்ச மல்ல. இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களை கொலை செய்யும் சட்டமும் உண்டு. இதனை அவ்வப்போது செய்தித்தாள்களில் நாம் காணலாம். எனவே, ஒரு முஸ்லீமுக்கு மத சுந்திரம் இல்லை என்பது எழுதப்படாத சட்டமாகும். எனவே, தம்பி, நீயும் ஒரு அடிமை என்பதை மனதில் வைத்துக்கொள். நீ இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதை புரிந்துக்கொள்.
3) ஆன்மீக சுதந்திரம் (அ) உள்ளான சுதந்திரம்:
தம்பி, உலகத்தில் இருக்கும் இஸ்லாமியர்களை காணும் போது, அவர்கள் ஆன்மீக சுதந்திரம் அல்லது உள்ளான சுதந்திரம் அடையாமல் இருப்பதை காணமுடிகிறது. அது என்ன உள்ளான சுதந்திரம் என்று கேட்கிறாயா? மேற்கொண்டு படி உனக்கு புரியும்
3.1) இஸ்லாமை விமர்சிப்பவனை கொலை செய்ய துடிக்கும் அடிமைத்தனம்:
இன்று உலக அளவில் நாம் காணும் போது, எந்த நாட்டிலாவது யாராவது இஸ்லாமை விமர்சித்து விட்டால் உடனே உலக இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். தங்கள் மார்க்கம் பற்றி விமர்சித்தால் அதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது தவறானது அல்ல. ஆனால், அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், "விமர்சிப்பவர்கள் சாகவேண்டும்" என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆக எந்த ஒரு முஸ்லிமானவது "தன் மார்க்கத்தை விமர்சிப்பவன் சாகவேண்டும்" என்று குரோதம் கொண்டு சொல்கிறானோ, அவன் இன்னும் அடிமைத் தனத்தில் இருப்பவன் என்று அர்த்தமாகும். அதாவது அவன் இன்னும் உள்ளான சுதந்திரம் அடையவில்லை, அல்லது ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை. அவன் குரோதம் அல்லது மதவெறி என்ற பாவத்தில் அல்லது அடிமைத் தனத்தில் சிக்கியுள்ளான். அவன் இன்னும் விடுதலை அடையவில்லை.
3.2) வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்க வேண்டும் என்ற அடிமைத் தனம்:
ஒரு மனிதன் தன் மார்க்கத்தை காரணமில்லாமல் விமர்சிக்கும் போது, அவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, அவன் மன்னிப்பு கேட்கும் படி செய்துவிட்டு கடந்துச் சென்றுவிட்டால், ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், முஸ்லிம்களின் நிலை இந்த வகையில் இருப்பதில்லை. அவர்கள் பழி வாங்க துடிக்கிறார்கள், விமர்சித்தவன் சாகவேண்டும் என்று வெளிப்படையாக பானர்கள் எழுதி உலகிற்கு தங்கள் வெறுப்பை காட்டிக்கொள்கிறார்கள். இது நமக்கு எதைக் காட்டுகிறது? அவர்கள் இன்னும் "வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பு" போன்றவைகளுக்கு இன்னும் அடிமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஆனால், இதே இஸ்லாமியர்கள் சொற்பொழிவு ஆற்றும் போது பார்த்தால், வெறுப்புணர்ச்சி, குரோதம், மற்றும் பழிவாங்குதல் என்பது சாத்தானின் செயல்களாகும், இவைகளை நாம் செய்யக்கூடாது என்றுச் சொல்வார்கள், எழுதுவார்கள். ஆனால், உண்மையில் தங்கள் மார்க்கத்தை யாராவது விமர்சித்தால், இவர்கள் தங்கள் சொல்லுக்கு நேர் எதிராக காணப்படுவார்கள். ஏன் இப்படி நடந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் கவனித்தால், அவர்கள் இன்னும் விடுதலை அடையவில்லை அதாவது அவர்களின் உள்ளான மனுஷன் இன்னும் விடுதலை அடையவில்லை என்பது தெளிவாக புரியும். அவர்கள் இன்னும் புதிய மனுஷனாக மாறவில்லை, புதிய சிருஷ்டியாக மாறவில்லை என்பது புலனாகும்.
3.3) கிறிஸ்தவர்களின் உள்ளான மனுஷனின் விடுதலை:
இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல, கிறிஸ்தவர்களுக்கும் நடக்கிறது, அதாவது கிறிஸ்தவத்தை அனேகர் விமர்சிக்கின்றனர், புத்தகம் எழுதுகின்றனர், மேடைகளில் பேசுகின்றனர், மட்டுமல்ல படங்களும் எடுக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவ உலகம் இதனை எப்படி எதிர்க்கொள்கிறது?
அ) உலக கிறிஸ்தவ மக்கள், தங்கள் எதிர்ப்பை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி செய்தித்தாள்களில் மறுப்பு எழுதுகின்றனர். விமர்சிப்பவர்களின் அறியாமையை உலகிற்கு எடுத்துக்காட்டி அவர்களின் வாயை அமைதியான முறையில் அடைக்கின்றனர்.
ஆ) மறுப்பு புத்தகங்களாக எழுதி வெளியிடுகின்றனர்.
இ) தங்கள் எதிர்ப்பை ஊர்வலமாக வந்து வெளிப்படுத்துகின்றனர்.
ஈ) இன்னும் ஒரு படி மேலே சென்று, விமர்சிப்பவரோடு விவாதம் புரிந்து, உண்மையை உலகிற்கு காட்டுகின்றனர்.
ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும், "கிறிஸ்தவத்தை விமர்சிப்பவர், கொலை செய்யப்படவேண்டும், சாகவேண்டும், கொடுமைப் படுத்தப்படவேண்டும்" என்று கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை, ஏனென்றால் கிறிஸ்தவர்கள் உள்ளான விடுதலை உடையவர்கள், அதாவது அவர்கள் "வெறுப்புணர்ச்சி, குரோதம், பழிவாங்கும் எண்ணம்" என்ற தீய குணங்களை வென்றவர்கள்.
• தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவை விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று விரும்பமாட்டார்கள்.
• தங்கள் பைபிளை விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று பெரிய பலகைகளில் எழுதிக்கொண்டு, அவைகளை காட்டிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள்.
• இயேசுவின் சீடர்கள் பற்றி தப்பு தப்பாக விமர்சிப்பவர்கள், கேலி செய்பவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்று எந்த ஒரு கிறிஸ்தவனும் பத்வா (சட்டம்) கொடுக்கமாட்டான்.
• 1999ம் ஆண்டு தன் வாகனத்தில் தூங்கிக்கொண்டு இருந்த கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டேயின்ஸ் என்ற மிஷனரியையும், அவரது இரண்டு மகன்களையும் இந்துத்துவ நண்பர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டனர். இந்த கிறிஸ்தவ ஊழியரின் மனைவி கிளாடி ஸ்டெயின்ஸ், தன் கணவரையும், பிள்ளைகள் இருவரையும் கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்தார். இப்படிப்பட்ட மன்னிக்கும் குணம் எப்படி இவருக்கு வந்தது? இதற்கு பதில், "அவர் உண்மையாகவே விடுதலை அடைந்தவராக இருப்பதினால், இவ்வித செயலில் ஈடுபட்டவர்களையும் மன்னித்துவிட்டார்".
கிறிஸ்தவன் முழுவதுமாக விடுதலை அடைந்தவன், ஆனால், ஒரு முஸ்லிம் இன்னும் அடிமைத் தனத்தில் இருப்பவன், எனவே தான் இஸ்லாமை விமர்சிப்பவர்கள் சாகவேண்டும் என்று பத்வா கொடுத்துக்கொண்டும், சபித்துக்கொண்டும் இருக்கின்றான்.
தம்பி, நீ விடுதலை அடைந்துள்ளாயா? அதாவது உன்னுடைய உள்ளான மனுஷன் விடுதலை அடைந்துள்ளானா? இதனை எப்படி நான் அறிவேன் என்று நீ என்னிடம் கேட்கலாம். அதற்கு பதில் இது தான், அதாவது யாராவது குர்-ஆனை எரித்துவிட்டார் என்றும், முஹம்மது பற்றி கேலியாக பேசிவிட்டார் என்றும் நீ கேள்விப்படும் போது உன் மனதில் அப்போது தோன்றும் எண்ணம் எவ்வாக இருக்கிறது? "இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் சாகவேண்டும்" என்று உன் உள்ளம் சொல்கிறதா? அல்லது "அவன் மன்னிப்பு கேட்டால் போதும் என்று சொல்கிறதா?". அவன் சாகத்தான் வேண்டும் என்று உன் உள்ளம் சொன்னால், "நீ இன்னும் விடுதலை அடையவில்லை என்று அர்த்தம், சாத்தானுடைய குணம் உன்னில் காணப்படுகிறது என்று அர்த்தம், இறைவனின் குணமாகிய மன்னிக்கும் சுபாவம் உன்னிடம் இல்லை என்று அர்த்தம், மொத்தத்தில் நீ பாவத்திற்கு அடிமை என்று அர்த்தம்".
ஆனால், இதே நிலை கிறிஸ்தவனுக்கு நேர்ந்தால், அவன் உள்ளமும் துடிக்கும், துக்கம் அடையும், இஸ்லாமியர்களுக்கு செய்வது போலவே சாத்தான் அவன் உள்ளத்தில் அப்படிப்பட்டவனை சபிக்கச் சொல்லுவான், சாகவேண்டும் என்று சொல்லச்சொல்லுவான். ஆனால், வேதத்தை அந்த கிறிஸ்தவன் படிப்பதினாலும், பரிசுத்த ஆவியானவர் அவன் உள்ளத்தில் இருப்பதினாலும், கிறிஸ்துவின் அன்பு அவன் உள்ளத்தில் ஊற்றப்பட்டு இருப்பதினாலும், அவன் எல்லா தீய எண்ணங்களை ஜெயித்து, விமர்சிப்பவன் மனந்திரும்ப வேண்டும் என்று ஜெபிப்பான், நிச்சயமாக அவன் சாகவேண்டும் என்று கருதமாட்டான்.
உங்கள் எதிர்களை நேசியுங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற வார்த்தைகள் அவன் உள்ளத்தில் பதிந்து இருப்பதினால், அவன் ஜெபத்தில் தன் உள்ள குமுறல்களை கொட்டிவிட்டு, மன நிம்மதி அடைவான், கடைசியாக, யுத்தம் கர்த்தருடையது, நாம் ஒன்றும் செய்யக்கூடாது என்பதை நினைத்து, அவனை மன்னித்துவிடுவான். இப்படியெல்லாம் ஏன் கிறிஸ்தவன் செய்கிறான் என்று பார்த்தால், அவன் ஒரு புதிய மனிதனாக இருக்கிறான், புதிய சிருஷ்டியாக இருக்கிறான், அவனது உள்ளான மனுஷன் விடுதலையாகி இருப்பதினால் கிறிஸ்தவன் எல்லாவற்றையும் தேவனது சந்நிதியில் சொல்லிவிட்டு, விடுதலையோடு வாழுகின்றான்.
இந்த விடுதலை ஒரு முஸ்லிமுக்கு கிடைப்பதில்லை, எனவே தன் வேதனையை கோபமாக குரோதமாக வெளிக்காட்டி, பழிவாங்க துடிக்கிறான்.
தம்பி, இப்போது எனக்குச் சொல், நீ இந்த மேற்கண்ட சூழ்நிலையில் அகப்படும் போது என்ன நினைக்கிறாய்? பழிவாங்க துடிக்கிறாயா? விமர்சிப்பவன் சாகவேண்டும் என்று துடிக்கிறாயா? அல்லது மன்னித்து விடுகிறாயா? வெறும் வார்த்தைகளில் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றுச் சொல்வதல்ல, அதனை செயலில் காட்ட முஸ்லிம்களுக்கு பொறுமையுள்ளதா? இந்த பொறுமையை குர்-ஆன் கற்றுக்கொடுத்துள்ளதா? முஹம்மது கற்றுக்கொடுத்துள்ளாரா?" முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.
தம்பி இதோடு நான் முடிக்கிறேன், குமாரன் உன்னை விடுதலையாக்கினால் நீ உண்மையாகவே விடுதலை ஆவாய். கர்த்தருடைய ஆவி எங்கே இருக்குமோ, அங்கே விடுதலை இருக்கும். நீ சத்தியத்தை அறியும் போது, அந்த சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.
தம்பி, நான் விடுதலையோடு இருக்கிறேன், நீ விடுதலையோடு இருக்கிறாயா? உன் உள்ளான மனுஷன் விடுதலையோடு இருக்கின்றானா? உன் இஸ்லாமிய நண்பர்கள் விடுதலையோடு இருக்கிறார்களா?
இந்திய சுதந்திர நாளாகிய இன்று, நீ உள்ளான மனுஷனில் விடுதலை அடைய நான் வேண்டிக்கொள்கிறேன்.
விடுதலை நாயகன் இயேசுக் கிறிஸ்து உனக்கு விடுதலையை அளிப்பாராக.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.