பெருந்தன்மையோடு வழங்கும் இறைவன் யார்?

 (God the Most Generous)

ஆசிரியர் : ராபர்ட் ஸிவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

இந்த தளத்தில் நான் எழுதும் கட்டுரைகளில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு ஒரு சுவாரசியமான திரும்பு முனை வருவதை நீங்கள் காணமுடியும். இதே போல கடந்த காலங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத்தியில் நடைப்பெற்ற உரையாடல்களை படிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும். இஸ்லாமுக்கு அடுத்த சில ஆண்டுகளில் (இடைப்பட்ட காலங்களில்) நடைப்பெற்ற இவ்விதமான உரையாடல்கள் எழுத்துவடிவில் புத்தகங்களாக இருந்தது என்றாலும், அவைகளில் சில புத்தகங்களே நம்மிடம் இப்போது உள்ளது. இருந்தபோதிலும், நம்மிடம் இருக்கும் இந்த ஒரு சில புத்தகங்களில் மிகவும் சுவாரசியமான விஷயங்கள் பொதிந்துள்ளது.

கடந்த காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ அறிஞர்களில் (Christian Apologists) ஒருவர்  யஹ்யா பி. அதி (Yahya b. ‘Adi) என்பவராவார். இவர் பத்தாம் நூற்றாண்டில், அப்பாஸித் வம்சத்தார்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்தவராவார். இவரது காலத்துக்கு  முன்பு இருந்த அரேபிய கிறிஸ்தவ எழுத்தாளர்களும், இவரது காலத்தில் வாழ்ந்த அரேபிய கிறிஸ்தவ எழுத்தாளர்களும் அதிகமாக குர்-ஆன் மற்றும் பைபிள் மேற்கோள்களை தங்கள் ஆக்கங்களில் பயன்படுத்தினார்கள். யஹ்யா என்ற இந்த எழுத்தாளரோ, சில நேரங்களில் இன்னும் ஒரு படி மேலே சென்று, இஸ்லாமை தத்துவ ரீதியாக அணுகுவதற்கு முக்கியத்துவம் காட்டினார்.  இவருடைய எழுத்துக்களில், என்னை அதிகமாக ஆட்கொண்ட விஷயம் “இறைவன் மனிதனாக வருவதைப் பற்றி” இவர் எழுதியவைகள் தான். இவர் குர்-ஆன் மற்றும் பைபிளை அதிகமாக பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக, “அல்லாஹ்வின் 99 பெயர்கள்” பற்றியே அதிகமாக ஆய்வு செய்தார். மேலும் அல்லாஹ்வின் ஒவ்வொரு பெயரின் முக்கியத்துவம், மேலும் அதன் மூலம் இஸ்லாமுக்கு வரும் தத்துவ ரீதியான பிரச்சனைகள்/கேள்விகள் போன்றவைகள் மீது அதிகம் ஆய்வு செய்தார்.

இப்போது அல்லாஹ்வின் 99  பெயர்களில் ஒன்றாகிய “அல்லாஹ் பெருந்தன்மையுள்ளவன் (Allah the Most Generous)” என்ற பெயர் பற்றி ஆய்வு செய்வோம்[1].  இறைவன் பற்றி இப்படியாக நாம் கருதுவோம், அதாவது ”உலகத்திலேயே இறைவனைப் போல பெருந்தன்மையோடு வாரி வழங்குகின்றவன் வேறு யாருமில்லை” என்று கருதுவோம். அதாவது இறைவனைப் போல வாரி வழங்குபவர்கள் உலகில் இதுவரை யாரும் பிறந்ததில்லை,  இனி பிறக்கப் போவதுமில்லை என்று கருதுவோம் [இது உண்மையும் கூட என்று இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்கள்]. இப்படி நாம்  கருதுவதினால் உண்டாகும் தத்துவ ரீதியான முடிவுகளை இப்போது பார்ப்போம்.

இந்த பெரிய உலகில் இறைவன் மட்டும் தான் பெருந்தன்மையோடு வாரி வழங்குபவர் என்று நாம் கருதினால், வாரி வழங்குவதற்கான சக்தி அவனுக்கு இருக்கிறது என்று நம்புவதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் படைத்த மக்களுக்கு மிகவும் சிறப்பானவற்றை கொடுக்க விருப்பமுடையவராக அவர் இருக்கிறார் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும்.  அதிகமாக பெருந்தன்மையுடையவர் என்று சொல்லவேண்டுமென்றால், அப்படி செய்ய அவரால் முடியும் என்று நம்புவதோடு மட்டும் நின்றுவிடாமல், உண்மையாகவே அந்த ஆசீர்வாதங்களை பொழிய அவர் விருப்பம் கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால், ஒரு மிகப்பெரிய பணக்காரர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவருக்கு கொடுக்கக்கூடிய சக்தி உண்டு. ஆனால், அவர் ஒரு கஞ்சனாக இருந்தால் அவருக்கு அதிக செல்வம் இருந்தும் என்ன பயன்? கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லையே! ஆகவே, இறைவன் என்பவனுக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு சக்தியும் இருக்கவேண்டும், அதன் பிறகு பெருந்தன்மையோடு கொடுக்கவேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இருக்கவேண்டும், அப்போது தான் அவரை நாம் “பெருந்தன்மையுள்ள இறைவன்” என்று கூறுவோம்.

இறைவன் தன் படைப்பாகிய மனிதர்களுக்கு தன்னால் முடிந்த சிறப்பான பரிசுகளை அவர் தரவேண்டும். ஒரு இஸ்லாமிய தளம் இவ்விதமாக கூறுகிறது:

God would be “The One who is continually giving forth the grandest and most precious bounty”. 

”இறைவன் எப்போதும் மிகவும் சிறப்பான விலைமதிப்பற்றவற்றை கொடுத்துக்கொண்டே இருப்பான்” [2]

ஆகையால், இறைவனால் கொடுக்கப்படக்கூடிய சிறப்பான பரிசு எதுவாக இருக்கமுடியும்? உலகத்திலே மிகவும் சிறப்பான பரிசுகள் என்பது பணமோ பொருட்களோ அல்லது ஆன்மீக விதத்தில் சில ஆசீர்வாதங்களோ அல்ல. மனிதர்களுக்கு இந்த உலகத்திலே மிக மிக சிறப்பான பரிசு என்பது “அந்த இறைவன்” தான். இறைவனைத் தவிர வேறு எந்த பரிசும் இரண்டாம் நிலையில் தான் நிற்கும், இறைவன் மட்டுமே முதலாவதாக நிற்பான்.  படைத்தவன் தான் படைத்தவைகளைக் காட்டிலும் மேன்மையுள்ளவன், சிறப்பானவன்.  மேற்கண்ட அதே இஸ்லாமிய தளம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

God is “The One whose kind, noble and generous essence is most esteemed, valued and honored”.

”இறைவனுடைய அன்பும், நற்குணமும் பெருந்தன்மையும் தான் மிகவும் விரும்பப்படத்தக்கதும் மதிக்கத்தக்கதுமாகும்.”

இதுவரை கண்ட விவரங்களை, இப்போது வரிசைப்படுத்துவோம்:

1. இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவன்

2. இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவனாக  இருந்தால், அவன் மிகவும் பெருந்தன்மையாக கொடுப்பான்.

3. உலகத்தில் இருக்கும் பரிசுகளிலேயே சிறந்த பரிசு “இறைவன் மட்டுமே”

4. எனவே, ஒரு பெருந்தன்மையுள்ள் இறைவன் எதையும் கொடுக்காமல் விடமாட்டான், அவன் பெருந்தன்மையாக ”தன்னையே” பரிசாக கொடுத்துவிடுவான்

மனித வர்க்கத்திற்கு தன்னையே இறைவன் பெருந்தன்மையுடன் பரிசாக கொடுக்கிறான் என்றால் என்ன? இப்போது தான் நாம் இறைவன் மனிதனாக அவதரிப்பதைப்   பற்றிய உண்மை நிலைக்கு வருகிறோம். நாம் மேலே கண்ட வரிசைப் படுத்தப்பட்ட விவரங்களின் வெளிப்பாடு “இறைவனின் மனித அவதாரமாகும் (Incarnation)”[3].   ஒருவேளை இறைவன் தன்னைக் கொடுக்காமல், இதர முக்கியமானவைகளை மனிதர்களுக்கு கொடுத்தால், உண்மையாக அவரை நாம் “உலகத்திலேயே மிகவும் பெருந்தன்மையுள்ளவன்  இந்த இறைவன் தான்” என்று அழைக்கமுடியாது.  இப்படி நாம் கூறும் போது, உடனே இஸ்லாமியர்கள் “இறைவன் மனிதனாகவே வரமுடியாது” என்றுக் கூறி புறக்கணிப்பார்கள்.  இப்படி அவர்கள் சொல்வார்களானால்,  நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இதே விஷயம்  வேறு பாதைக்கு கொண்டுச் செல்லும், மேலும் பிரச்சனை முஸ்லிம்களுக்கே அதிகமாகும். அதாவது,  “இறைவன் மனிதனாக வரமுடியாது என்றுச் சொல்லும் போது,  அது அந்த இறைவனின் குறைபாட்டை காட்டுகின்றதல்லவா?” அல்லது “மனிதனாக வருவதற்கு தேவையான சக்தி அந்த இறைவனுக்கு இல்லை” என்று சொல்வது போல் ஆகிவிடுகின்றதல்லவா? ஆனால், உண்மையில் இறைவன் ”சர்வ வல்லவர்”, அவரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை, எல்லாம் அவரால் கூடும்.

ஒருவேளை, ”இறைவன் மனிதனாக வருவதற்கு அவரால் ஆகும், ஆனால், அப்படி வந்தால் “இறைவனுக்கு” அது(மனிதனாக வருவது) அவமானமாக கருதப்படுமல்லவா?” என்று  கேட்கலாம். இப்படி நாம் கூறுவோமென்றால், நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கின்ற “இறைவன் மிகவும் பெருந்தன்மையுள்ளவன்” என்ற கோட்பாடு அடிபட்டுவிடும். அதாவது, இப்படி அவர் வரவில்லையானால், தன்னையே கொடுக்கவில்லையானால் ”அவர் மிகவும் பெருந்தன்மையுள்ளவர் அல்ல” என்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டி வரும்.  இறைவன் ஒரு சில காரணங்கள் காட்டி, தன்னை கொடுக்காமல் புறக்கணித்தால், இதுவே அவர் “மிகவும் பெருந்தன்மையுள்ளவர்” அல்ல என்பதற்கு நிருபனமாகிவிடும். இறைவன் இப்படி மறுத்தால் அவன் உண்மையாகவே மற்றவர்களை விட “பெருந்தன்மையுள்ளவன்” என்ற பட்டத்திற்கு தகுதியானவன் அல்ல. ஏனென்றால், அவன் படைத்த படைப்பாகிய மனிதர்களே, தங்களை மற்றவர்களுக்காக தியாகம் செய்கிறார்கள், அவர்கள் காரணங்காட்டுவதில்லை. மனிதர்கள் மறுப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், அதையும் தாண்டி அவர்கள் மற்றவர்களுக்காக தங்களை தியாகமாக கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட இறைவனோடு ஒப்பிடும் போது, இவர்களே (மனிதர்களில் தியாகம் செய்பவர்கள்), அவரை விட மிகவும் பெருந்தன்மையுள்ளவர்கள் என்று கருதப்படுவார்கள்.

நாம் மேலே கண்ட அணுகுமுறையானது, அக்காலத்தில் இதர அறிஞர்கள் கொண்டு இருந்த அணுகுமுறைகளை விட வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த அணுகு முறை தான் எல்லா அணுகுமுறைகளை விட சிறந்தது என்று நான் கருதவில்லை. இருந்த போதிலும், இதனை சரியான இடத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால், இது அதிக நன்மையைத் தரும்.  உங்களுக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருந்தால், அவரிடம் பேசுவதற்கு இந்த அணுகுமுறை ஒரு சுவாரசியாமான ஒன்றாக இருக்கும்.  கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைக்க மக்களை நாம் தனித்தனியாக அழைக்கும் போது, இந்த அணுகுமுறை சிறிது உதவியாக இருக்கும்.

பின் குறிப்புக்கள்:

[1] Arabic Al-Karim, although Yahya himself used the term Al-Jawwad.

[2] http://wahiduddin.net/words/99_pages/karim_42.htm

[3] Samir, Samir Khalil and Jorgan S Nielsen. Christian Arabic Apologetics During the Abbasid Period (750-1258). E.J. Brill: Leiden, The Netherlands, 1994, p74.

ஆங்கில மூலம்: God the Most Generous

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்