நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்
10:22 பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
10:23 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
10:24 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது .
10:26 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள் .
10:27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது .
10:28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை .
10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது .
10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
10:31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
10:32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார் .
10:33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள் .
10:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க ,
10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
10:37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
10:38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
10:39 இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,
முதலாவது, ஒரு விவரத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும், அது என்னவென்றால் "இயேசு தம்மைத் தாமே தேவனின் ஒரே ஒரு குமாரனாக கூறினார் ". இதனை இன்னபிற அவரது வசனங்களிலிருந்தும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
இப்போது, யோவான் 10ம் அத்தியாயத்தில் நடந்த நிகழ்ச்சி என்னவென்று காண்போம்.
இயேசு கூறினார், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்", இதற்கு அவரை எதிர்த்தவர்கள் கீழ்கண்டவாறு பதில் அளித்தார்கள்:
“யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்”
பொதுவாக நாம் காணத்தவறுவது என்னவென்றால், இந்த "தேவதூஷண " குற்றச்சாட்டுக்கு இயேசு இரண்டு வகையில் பதில் அளிக்கலாம்.
(1) முதலாவது, அவர் "தன்னை தேவனுக்கு சமமாக கருதவில்லை, அல்லது கூறவில்லை" என்று பதில் அளிக்கலாம்.
(2) இரண்டாவதாக, "தாம் தம்மை இறைவனுக்கு சமமாக உரிமை பாராட்டியது தேவதூஷணம் அல்ல" என்றுச் சொல்லலாம்.
மேற்கண்ட இரண்டு வகையில் இயேசு எதனை செய்தார்? அவர் முதலாவது வழியில் பதில் அளிக்கவில்லை (இதனையே அனேகர் விரும்புகிறார்கள்), ஆனால், இயேசு இரண்டாவது வழியில் பதில் அளித்தார்.
"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?"
நிச்சயமாக இயேசுவின் பதிலில் உள்ள உண்மை தெளிவாக தெரிகிறது: அவர்களின் வேதத்தின்படி (சங்கீதம் 82) சிலரை "தேவர்கள்" என்று அழைப்பது "தேவதூஷணம் ஆகாது" என்று இருக்குமானால், நிச்சயமாக அதை இயேசுவிற்கு பயன்படுத்துவது (இயேசுவை தேவன் என்று அழைப்பது) தேவதூஷணமாகாது". இது தான் இயேசுவின் பதிலில் பொதிந்து இருந்த உண்மை.
இயேசுவின் பதிலின் மூலமாக கிடைத்த பலன் இது தான், அதாவது "தேவன்" என்று அழைத்துக்கொள்வதற்கு சங்கீதம் 82ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டவர்களை விட இயேசுவிற்கு அதிக தகுதி உள்ளது. ஏன் அவர் மற்றவர்களை விட சிறந்தவர் அல்லது தகுதியானவர்? ஏனென்றால், அவர் தம்மைப் பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
“பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான்”
மட்டுமல்ல, தம்முடைய அடுத்த வாக்கியத்தில், இன்னும் ஆழமாக ஆணித்தரமாக கூறுகிறார்:
“என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”
இந்த வாக்கியங்கள் முக்கியமானவைகள், அதாவது இவைகள் மூலம் "இயேசு எதனை சொல்லவில்லை" என்பதையும் அறியலாம்.
இயேசு தம் மீது கூறப்பட்ட "தேவ தூஷணம்" என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுபட விரும்பியிருந்தால், அவர் அதனை சுலபமாக செய்து இருக்கலாம், அதாவது, நான் என்னை தேவனுக்கு சமமாக கூறவில்லை, கருதவில்லை என்று சொல்லி குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து இருக்கலாம். ஆனால், இயேசு அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவர் சங்கீதம் 82ம் அத்தியாயத்திலிருந்து மேற்கோளை காட்டி, "தாம் தேவன் என்று உரிமை பாராட்டியது" தேவதூஷணம் அல்ல என்று கூறினார். இயேசுவின் பதிலை நாம் தெளிவாக விவரித்து கூறவேண்டுமானால், இவ்விதமாக கூறலாம் அதாவது, "யார் ஒருவர் தேவன் என்ற நிலைக்கு தகுதியானவரோ அவரை தேவன் என்று அழைப்பது, தேவதூஷணம் அல்ல" என்று இயேசு கூறியதை விளக்கலாம்.
அதன் பிறகு, இயேசு அந்த "தேவன்" என்ற பட்டத்திற்கு எப்படி தகுதியுள்ளவராக இருக்கிறார் என்பதையும் விளக்குகிறார். அதாவது, " பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் " என்று கூறுகிறார் மற்றும் " என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே " என்றும் கூறுகிறார். கடைசியாக " பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை " என்று கூறி தம்முடைய தகுதியை வெளிப்படுத்தினார்.
இயேசுவின் உரிமை பாராட்டலை அவரது எதிர்ப்பாளர்களாகிய யூதர்கள் சரியாக புரிந்துக்கொண்டார்கள், ஆகையால் அவரை கைது செய்ய முயற்சி எடுத்தார்கள் (வசனம் 39). இயேசு கூறிய கூற்றில் இருக்கும் "தர்க்கத்தை (லாஜிக்கை)" அவர்கள் புரிந்துக்கொண்டார்கள், அவர் தம்மை தேவனுக்கு சமமாக உரிமைப் பாராட்டல் செய்வதை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. ஆகையால் தான் இயேசு சொன்னது தவறு என்று கருதி, அவர் தேவதூஷணம் செய்தார் என்று குற்றம் சாட்டினார்கள்.
ஆங்கில மூலம்: மனிதர்களை "தேவர்கள்" என்று அழைப்பது