குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை
குர்-ஆன் வசனங்களை இரத்து செய்வது என்பது இறைவசனங்களை திருத்துவதற்கு சமம் என்று ஒருவர் கூறினார், அதற்கு ஒரு முஸ்லிம் கீழ்கண்டவிதமாக பதில் அளித்தார்:
"அல்லாஹ் தன் வசனங்களை இரத்து செய்வது" பற்றி விமர்சனம் செய்த சகோதரருக்கு இந்த பதிலை தருகிறேன்.
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீங்கள் ஒரு அலுவலகத்தின் மேலாளர் (Manager) என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சில கட்டளைகளை நீங்கள் தரவேண்டியுள்ளது. இதற்காக உங்கள் செயலாளரிடம் (Secretary) கட்டளைகளைக் கொடுத்து, இவைகளை அப்படியே டைப் செய்யும் படி கேட்டுக் கொள்கிறீர்கள். இந்த செயலாளர் உங்கள் அனுமதியில்லாமல், அந்த கட்டளைகளோடு சிலவற்றை கூட்டுகிறார், சிலவற்றை நீக்கிவிடுகிறார். இந்த செயலாளர் செய்தது என்ன? மேலாளர் கொடுத்த மூல கட்டளைகளை இவர் திருத்திவிட்டார். இது தவறாகும். ஆனால், இப்போது இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள்.
மேலாளராகிய நீங்கள் உங்கள் கைகளாலேயே அக்கட்டளைகளை டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டைப் செய்யும் போது, சிலவற்றை புதியதாக சேர்க்கிறீர்கள், சிலவற்றை நீங்களே நீக்கிவிடுகின்றீர்கள். அதன் பிறகு உங்கள் செயலாளரிடம் கொடுத்து வேலையாட்களிடம் சேர்க்கும்படி சொல்கிறீர்கள். இந்த எடுத்துக்காட்டில், மேலாளராகிய நீங்கள் செய்ததை “மூலத்தை திருத்திவிட்டார்” என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. இக்கட்டளைகள் உங்களிடமிருந்து நேரடியாக வந்தபடியினால், உங்கள் அலுவலகத்தின் வேலையாட்களும், செயலாளரும் அவைகளை “மூலம்” என்று தான் சொல்வார்கள், திருத்தப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். இதே போலத்தான் அல்லாஹ் தன் வசனங்களை மாற்றுகிறார், அது மாற்றப்படாத மூலம் என்றே கருதப்படும். சிறந்த உவமைகள் அல்லாஹ்விற்கே சொந்தமாகும்.
கிறிஸ்தவனின் பதில்:
நீங்கள் ஒரு அருமையான உவமையைச் சொல்லியுள்ளீர்கள். எனக்கு உவமைகள் என்றால் அதிகமாக பிடிக்கும், ஏனென்றால், பல வரிகளில் விளக்கவேண்டிய விவரங்களை நச்சென்று நான்கு வரிகளில் அது விளக்கிவிடும்.
ஆனால், உங்கள் உவமையில் அனேக இறையியல் பிரச்சனைகள் இருப்பதை நான் காண்கிறேன்.
ஒரு மேலாளர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, கட்டளைகளை மாற்றுவதைப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த மேலாளர் தன் செயலாளரிடம் தன் கட்டளைகளை கொடுத்துவிட்ட பிறகும், தன் மனதை மாற்றிக்கொண்டு கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை அல்லது செயலாளரிடம் கொடுப்பதற்கு முன்பாகவே கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை. இந்த மேலாளருக்கு தன் கட்டளைகளை மாற்றும் அதிகாரம் உள்ளது, அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது.
ஆனால், ஒரு முக்கியமான விவரத்தை இங்கு கவனிக்கவேண்டும், அதாவது, இந்த மேலாளர் ஒரு சாதாரண மனிதர் ஆவார், இவர் இப்படிப்பட்ட தவறுகளை செய்யத் தான் செய்வார். இவர் ஏன் தன் கட்டளைகளை மாற்ற விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், தன் கட்டளைகளில் தவறு இருப்பதாக இவர் உணருகிறார், அந்த தவறு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். தன் தவறை இவர் உணரும் தருணத்தில் உடனே தன் முந்தைய கட்டளைகளை மாற்ற முயலுகிறார். தான் முன்பு எழுதிய கட்டளைகளை மாற்றுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது, அதனால் அவர் மாற்றுகிறார்.
இப்போது உங்களால் இந்த உவமையில் உள்ள பிரச்சனையை காணமுடியும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தன் முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, அவைகளுக்கு பதிலாக புதிய கட்டளைகளை கொடுக்க முடிவுசெய்துவிட்டால், இதன் அர்த்தம் என்ன? தாம் தவறு செய்துவிட்டதாக அல்லாஹ்வே சுய ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று அர்த்தமாகுமல்லவா? வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், தாம் முன்பு இறக்கிய கட்டளைகள் “பிழையற்ற கட்டளைகள் அல்ல, அவைகளில் தவறு இருக்கிறது, எனவே அவைகளுக்கு பதிலாக புதிய பிழையில்லாத கட்டளைகள் தேவைப்படுகிறது” என்று அல்லாஹ் சொல்வது போல இருக்கிறது.
அன்பான இஸ்லாமிய சகோதரரே, உங்களுடைய உவமையின் மூலமாக, ”அல்லாஹ் தவறு செய்துவிட்டார்” என்று நீங்கள் அவரை குற்றப்படுத்துகிறீர்கள்.
ஆனால், இறைவன் சர்வ ஞானியாக இருக்கிறார். புதிய சூழ்நிலைகளைப் பார்த்து, மக்களின் புதிய செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை, அவருக்கு சர்வமும் தெரியும். நடந்துவிட்டதும், நடந்துக் கொண்டு இருப்பதும், நடக்கப்போவதும அவருக்குத் தெரியும். இறைவன் தன் முந்தையை கட்டளைகளை இரத்து செய்துவிட்டார் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய கோட்பாடு, இறைவனின் தகுதிக்கும், இலக்கணத்துக்கும் இழுக்கை கொண்டு வருகிறது.
ஒருவேளை அல்லாஹ் குர்-ஆன் வசனங்களை இறக்குவதற்கு முன்பாக மாற்றி இருந்திருந்தால், ”இந்த மாற்றத்தைப் பற்றி” நாம் அறிந்திருக்கமாட்டோம். இப்போது நாம் ”இரத்து செய்த வசனங்களையும், இரத்து செய்யப்பட்ட வசனங்களையும்” அறிந்திருக்கிறோம். இதன் மூலம் இரண்டு விவரங்களை நாம் அறிகிறோம், “முதலாவது, அல்லாஹ் தம்முடைய முந்தையை வசனங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இரண்டாவதாக, தம்முடைய முந்தைய வசனங்களில் உள்ள தவறை உணர்ந்துக் கொள்ள அவருக்கு அதிக நாட்கள் பிடித்துள்ளது என்பதாகும்”.
முஸ்லிம்களின் படி, குர்-ஆன் என்பது படைக்கப்பட்ட ஒன்று அல்ல, அது நித்திய நித்தியமாக அல்லாஹ்வுடன் இருந்துள்ளது. இப்போது நமக்கு தோன்றும் கேள்வி என்னவென்றால், ”முஹம்மதுவிற்கு குர்-ஆன் வசனங்களை இறக்கிவிட்ட பிறகு, எப்படி அல்லாஹ்விற்கு தன் முந்தைய வசனங்களை மாற்றவேண்டும் என்ற ஞானம் வந்தது? அல்லது தன் முந்தைய வசனங்கள் கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது?”.
என்னை பொருத்தமட்டில், ”குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல்” என்ற கோட்பாடு அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த கோட்பாடு பரிசுத்தமான மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு மிகப்பெரிய அவமரியாதையாகும். இந்த கோட்பாடு, ”இறைவன் தவறு செய்பவன்” என்று அவனை குற்றப்படுத்துகிறது. அதாவது முதல் முறை ஒரு காரியத்தை செய்யும் போது (வசனங்களை இறக்கும்போது) அதனை சரியாக செய்யத் திராணியில்லாதவனாக இறைவன் இதன் மூலம் சித்தரிக்கப்படுகின்றான். அதன் பிறகு, தன் பிழையை சரி செய்ய, முந்தைய வசனங்களை இரத்து செய்கிறான். இப்படிப்பட்ட கோட்பாட்டை நிச்சயமாக என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இஸ்லாமின் இரத்து செய்தல் பற்றிய இதர கட்டுரைகளை படிக்க சொடுக்கவும் “Index to Islam (ஆங்கிலம்)” and “Quran section (தமிழ் மற்றும் ஆங்கிலம்)”.
இக்கட்டுரைக்கு ஒரு முஸ்லிம் சகோதரர் பதில் கொடுத்துள்ளார். இவருக்கு கிறிஸ்தவர்கள் இரண்டு பதில்களை கொடுத்துள்ளார்கள், அதனை இங்கு படிக்கவும்: