என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்
என் பெயர் தர்மிக்ஷி. நான் மலேசியாவில் வாழும் மலாய் இனத்தைச்  சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.  
நான் என் சுய விருப்பத்தின் படி கிறிஸ்தவத்தை அறிந்துக் கொண்டேன். பல  ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஒரு மனிதனின் வற்புறுத்தலும் இல்லாமல், சுயமாக  கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, தபால் மூலம் அது தொடர்பான பயிற்சியை  எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னை சுற்றியிருந்த நண்பர்களும் நான் வாழ்ந்த  சூழ்நிலையும், நான் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள தூண்டுதலாக இருந்தது .  ஆனால், என் இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு என்னை தர்மசங்கடமான  நிலையில் வைத்தது. ஏனென்றால், இஸ்லாமில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சடங்குகள்  இருப்பதாக எனக்குப் பட்டது, உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமாஜ் என்றுச்  சொல்லக்கூடிய தொழுகையை ஒரு குறிப்பிட்ட வகையில் தான் செய்யவேண்டும், மற்றும் அந்த  தொழுகை நேரத்தில் நமக்கு புரியாத மொழியில் தான் சூராக்களை ஓதவேண்டும் போன்றவைகளைச்  சொல்லலாம். அப்பயிற்சியின் மூலம் அடிப்படை கிறிஸ்தவ சித்தாந்தத்தையும்,  இஸ்லாத்துடன் அது கொண்டுள்ள ஒற்றுமையையும் அறிந்து கொண்டேன் (அதாவது நரகம் பற்றிய  நம்பிக்கையைப் பற்றிச் சொல்லலாம்). அந்த தபால் வழி கிறிஸ்தவ படிப்பை முடித்ததும்  எனக்கு ஒரு சான்றிதழ் அனுப்பினார்கள். 
அதன் பிறகு நான் கோலாலம்பூரில் உள்ள  ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்குச் சென்றேன். இங்கு நான் என் சுய விருப்பத்தின்படிச்  சென்றேன். அங்கு செல்வதற்கு முன்பு, அந்த தேவாலயத்தின் நிர்வாகத்தொடு தொலைப்பேசி  மூலம் தொடர்பு கொண்டு, என்னை அறிமுகம் செய்துக்கொண்டு, நான் கிறிஸ்தவத்தை அதிகமாக  அறிய விரும்புகிறேன், அதற்காக வரவிரும்புகிறேன் என்றுச் சொன்னேன். நீங்கள் தாராளமாக  ஆராதனையில் (தொழுகையில்) கலந்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆராதனையில்  கலந்துக்கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் என்னை  அன்புடன் வரவேற்று நட்புடன் பழகினார்கள். அந்த தேவாலயத்தில் எந்த ஒரு சிலை அல்லது  விக்கிரகத்தை நான் காணவில்லை, இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த  தேவாலயம் (சர்ச்) ஒரு பெரிய அறையாக (ஹால்) இருந்தது, மொத்தத்தில் ஒரு மசூதியைப் போல  இருந்தது. 
அந்த ஆராதனையில் "இரா போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய "ஹோலி  கம்யூனியன்" இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படிப்பட்ட சமயத்தில்  இஸ்லாமியர்களை வலையில் சிக்கவைப்பதற்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுபபர்கள். அந்த  ரொட்டித் துண்டை சாப்பிட்டவுடன் நம்முடைய இருதயம் இருளடையும், பிறகு நாம்  எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நான் இஸ்லாமியர்களால் போதிக்கப்பட்டு  இருந்தேன். ஆனால், அன்று "இரா போஜனம்" நடைப்பெறவில்லை. ஆராதனை முடியும் தருவாயில்  எனக்கு ஒரு சிறு புத்தகம் வழங்கப்பட்டு, என்னுடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றி  சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். 
உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க  வேண்டும் என்று தோன்றினாலும், தீர்வு காணப்படாத பல ஐயங்கள் இருந்தன. நான் என்னையே  கேட்டுக்கொண்டேன், "இந்த புதிய நம்பிக்கையினால் எனக்கு என்ன நன்மை  உண்டாகப்போகிறது?". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால்,  அக்காலத்தில் மலேசியாவில், "ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை  பின்பற்றுகிறவராக மாறமுடியாது". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின,  ஆதாவது, "இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க  வேண்டிவரும்?, நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? என்னுடைய இந்த முடிவு  சரியானதா?". இப்படிப்பட்ட அனேக கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. இக்கேள்விகள்  அனைத்தையும் நான் புறந்தள்ளிவிட்டேன், மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட்டேன்  (ஹஜ்ரத் ஈஸாவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டேன்). 
இந்த நிகழ்ச்சிக்கு  பிறகு நான் ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியனாக மாறினேன். என் குடும்ப அங்கத்தினர்களும்,  என் நண்பர்களும் தொடர்ந்து தொழுகையை நிலைநாட்ட உற்சாகப்படுத்தினர். அவர்கள்  கேட்டுக்கொண்டபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து நான் தொழுவேன். தொழுகை முடிந்ததும்  நிம்மதியாக நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். இப்படி பலமுறை நடந்தது. சுமார் ஆறு  மாதங்களாக என் இஸ்லாமிய கடமைகளை செய்ய நான் தவறவில்லை. அதன் பிறகு சிறிது  அமைதியாகிவிட்டேன். என்னை சுற்றியுள்ள மக்களால் நான் அதிகமாக கவரப்பட்டேன். எனக்கு  திருமணமாவதற்கு முன்பே நான் மத கடமைகளை செவ்வனே செய்வதில், அதிக ஆர்வம்  காட்டிவந்தேன். தினமும் ஐந்து வேளை தொழுகையை நான் கடைபிடிக்காமல்  விட்டுவிட்டதில்லை. இதோடு கூட, நான் திருமணம் செய்ய இருந்த பெண் கூட (இப்போது என்  மனைவி) என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினாள். நான் தொலைபேசியில் அப்பெண்ணோடு தொடர்பு  கொண்டு பேசும் போதெல்லாம், "இன்று எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?" என்று கேட்பாள்.  நான் தினமும் சிறிது கால தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் எங்கே நான் என் காலைத்  தொழுகையை தவறவிட்டுவிடுவேனோ என்று எண்ணி இப்படி கேள்வி கேட்பாள். ஏன் இன்னும்  அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை செய்யக்கூடாது என்று கேட்கத்தொடங்கிவிடுவாள்.  இப்படிப்பட்ட தொடர்ச்சியான உற்சாகத்தினால், நான் என் ஆன்மீக வாழ்வில் உச்சியை  அடைந்திருந்தேன். 
வளர்ந்த பிறகு உம்ரா கடமையை நிறைவேற்ற நான்  மெக்காவிற்குச் சென்றேன். பல நாட்டிலிருந்து வந்திருந்த பல இன மக்களின்  நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தேன். இஸ்லாத்திலும் கருத்து வேறுபாடும் சபை  வேறுபாடும் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தொழுகை  நடத்தினார்கள். ஒரே திசையை நோக்கினாலும் வெவ்வேறு விதமாகவே தொழுது கொண்டார்கள்.  இந்த தொழுகைகளில் கண்ட வித்தியாசம் என்னை சந்தேகத்திற்குள்ளாக்கியது. தொழுகை எப்படி  செய்யவேண்டும் என்ற முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இதன் படி மட்டுமே  செய்யவேண்டும் என்று நான் போதிக்கப்பட்டேன். ஆனால், இங்கு மக்காவிலேயே தொழுகை  பலவகைகளில் செய்யப்படுவதை என்னால் காணமுடிந்தது. இந்த தொழுகை முறைகளில் எது சரியான  முறை என்று நான் ஆச்சரியப்பட்டேன். மற்றும் இதுவரை நான் பின் பற்றி செய்த தொழுகை  முறை சரியானதா என்ற சந்தேகம் உண்டானது. ஒருவேளை நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை  முறை தவறானதாக இருக்குமானால், என் தொழுகைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அல்லாஹ்  அங்கீகரிக்கமாட்டார். இப்படியில்லாமல், நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை  சரியானதாக இருந்தால், மக்காவில் நான் என் கண்களுக்கு முன்பாக காணும் தொழுகைகளை  அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இது மிகவும் வேதனையான, தர்மசங்கடமான முடிவாகும்.  
தொழுகையை எந்த முறையில் செய்யவேண்டும் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லை,  முஹம்மதுவின் செய்கைகள், வார்த்தைகள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களில் மட்டுமே  சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் எந்த முறையில் தொழுகையை செய்கிறாரோ அதன் மீது சார்ந்து  தான் அவர் ஹதீஸ்களுக்கு பொருள் கூறுவார். ஒரு குறிப்பிட்ட தொழுகை முறைக்கு  பழக்கப்பட்டுவிட்ட ஒரு இஸ்லாமியர், மற்றவர்கள் வேறு முறையில் தொழுகையை செய்வதைக்  கண்டால், சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்திற்குச்  சொல்லவேண்டுமானால், தொழுகை நேரத்தில் கைகளை வைத்துக்கொள்ளும் நிலையைப் பற்றிச்  சொல்லலாம். அதாவது கைகளை விரித்து வைத்துக்கொள்ளவேண்டுமா, அல்லது இடது  புறத்திலிருந்து வலது புறத்திற்கு மாற்றவேண்டுமா? ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு  இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும்? அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி  இருக்கக்கூடாது? இப்படிப்பட்ட விவரங்கள் அனைத்தும் குர்ஆனில் சொல்லப்படவில்லை  அல்லது குர்ஆனினால் உறுதியாக்கப்படவில்லை. இறைத்தூதரின் வார்த்தைகளாகிய  ஹதீஸ்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பொருள்  கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்களால் கண்டு சாட்சியிடுகிறேன்.  இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமாக பொருள் கூறுவதினால், அனேக புதிய முறைகளை நான்  கண்டிருக்கிறேன். ஒரு சில முறைகளைத் தவிர மலேசியாவில் எல்லாவித தொழுகை முறைகளை  பார்க்கமுடிவதில்லை. மலேசியாவில் ஷபியா தொழுகை முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது.  மக்காவில் மலேசிய முறைப்படியான தொழுகை முறையை பின்பற்றி நான் தொழுதுக்கொண்டேன்.  
நான் மக்காவில் இருந்த சமயத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அனேக கேள்விகள்  எழும்பின. என்னை நானே கேட்க ஆரம்பித்தேன், "ஏன் நாங்கள் இப்போது  தொழுதுக்கொள்வதுப் போல தொழுதுக்கொள்ள வேண்டும்?" ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும்? இப்படி தொழுதுக்கொள்வதில்  உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். "இவைகள்  பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது  சரியானதா?" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை  முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு  இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன்? ஏன்? ஏன்? இப்படி செய்வது  எதற்காக?"
நான் மக்காவிலிருந்து என் தாய் நாட்டிற்கு வந்த பிறகு, என் தொழுகை  வாழ்க்கையை சிறிது தளர்த்தினேன். கிறிஸ்தவம் பற்றி மறுபடியும் சிந்திக்க  ஆரம்பித்தேன். இப்படி சிந்தித்ததாலும் எனக்கு எந்த நன்மையும் இல்லை, எனென்றால்,  யாரும் கிறிஸ்தவம் பற்றி எனக்கு போதிக்கவில்லை. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும்  இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று சரியாக விளங்கவில்லை. 
திடீரென்று என்  மனதில் ஒரு ஆலோசனை வந்தது. நான் தொலைபேசி புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ  சபை விலாசத்தை எடுத்துக்கொண்டு அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான்  பேசிய நபர் ஒரு இந்திய பெண்மணியாவார், அவர் தன்னை வந்து சந்திக்கும்படிச் சொன்னார்.  ஆகையால், நான் அவரைக் காணச் சென்றேன். நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.  இக்கேள்விகளில் ஒரு கேள்வி, "உருவச் சிலைகளைப் பற்றியது". இதற்கு முன்பு ஒரு  பிலிப்பினோ நண்பர் எனக்கு ஒரு சிறிய இயேசுவின் சிலையை கொடுத்து இருந்தார்.  அச்சிலையை நான் என்னுடன் கொண்டு வந்திருந்தேன், அதனை அப்பெண்மணியிடம் காண்பித்தேன்.  அவர் "இது சரியானது அல்ல" என்றுச் சொன்னார். இது தான் நான் முதல் முறை இப்படிப்பட்ட  பதிலை கேட்டது. இந்த பதிலைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த பெண்  எனக்கு இன்னும் அதிகமாக விவரித்தார்கள், பிறகு ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து  வீட்டிற்குச் சென்று படிக்கும் படிச் சொன்னார்கள். அந்த சிறிய புத்தகத்தை படித்த  பிறகு நான் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்து, "நான் ஹஜ்ரத் ஈஸாவை என் இரட்சகராக  ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இதற்கு உதவி புரியுங்கள்" என்றுச் சொன்னேன். அந்த  நாளில் ஒரு சிறிய ஜெபத்தை சொல்லி, நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி  புரிந்தார்கள். அந்த சகோதரி ஒரு சிறிய ஜெபத்தைச் சொல்லச் சொல்ல நான் திரும்பச்  சொன்னேன், அது ஒரு சிறிய ஜெபம் தான், அதாவது மனந்திரும்புதலுக்கான ஜெபம் மற்றும்  ஹஜ்ரத் ஈஸாவிற்கு என்னை ஒப்புவித்ததற்கான சிறிய ஜெபம். பிறகு எனக்கு பைபிளின் ஒரு  பிரதி கொடுக்கப்பட்டது. 
அந்த பெண்மணி என்னிடம் "உங்களை தொடர்ந்து வழி  நடத்த, ஒரு பெண்ணாக என்னால் முடியாது, எனவே, உங்களோடு தொடர்பு கொண்டு வழி நடத்த ஒரு  சகோதரனை" நான் காண்பிக்கிறேன் என்றுச் சொன்னார்கள். அவர் சகோதரர் "அ" என்பவரின்  விலாசத்தைக் கொடுத்தார்கள், அதன் பிறகு இந்த சகோதரர் எனக்கு மிகவும் உதவியாக  இருந்தார்கள். 
இப்பொழுதெல்லாம், "ஏன்" என்ற கேள்விகளை நான் கேட்பதில்லை,  ஏனென்றால், நான் என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கண்டுக்கொண்டேன். நான்  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள், அதினால்  என் அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. அந்த புத்தகத்தில், புதிதாக இயேசுவை சொந்த  இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுக்கு  பைபிளிலிருந்து பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இது மிகவும் உபயோகமான  புத்தகமாகும். 
இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஹஜ்ரத் இயேசுவை பின்  பற்றுகிறவனாக நான் மாறியதால், என் நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் மிகவும்  எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுடன் இஸ்லாமிய  சமுதாயம் மிகவும் கொடுமையான முறையில் நடந்துக்கொள்கிறது, அதுவும் காரணமில்லாமலேயே  வெறுக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியேறுபவனின் மீது கோபமும், மூர்க்கமும் கொண்டு  அவதூறாக பேசுகிறார்கள், ஏனென்றால், இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கத்தை தெரிந்தெடுக்க  அவன் தைரியம் கொண்டதால், இந்த நிலை. எல்லா விதமாக பயங்கரமான விளைவுகள் இஸ்லாமை  விட்டு வெளியேறுபவர்கள் சந்திக்க வேண்டி வரும். 
ஈஸா அல் மஸீஹாவை பின்  பற்றிய நாள் முதற்கொண்டு என் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.  நான் முஸ்லீமாக இருந்த போது, கடவுள் பயப்படவைப்பவர் போலவும், தண்டிக்கிறவர் போலவும்  கண்டேன். ஆனால், இப்போது அவரை வித்தியாசமாக காண்கிறேன். இப்போதும் அவர் மிகவும்  வல்லமைமிக்க உயர்ந்த தேவன் தான், ஆனால், அதே நேரத்தில் நான் அன்போடு அவரோடு பேசி,  என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவரை அவ்வளவு நெருக்கமாக  காண்கிறேன். எனக்கு நெருக்கமாக அவர் இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்கிறார்  என்பதை நான் அறிவேன். என்னை பொருத்த மட்டில், ஈஸா மஸீஹா உலக இரட்சகர் ஆவார், அவரே  தேவனாவார். நான் ஜெபம் செய்யும் போதெல்லாம், இதனை நான் நினைவில் நிறுத்துகிறேன்.  
தேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிகவும் சிறப்பான ஆசீர்வாதம்  என்னவென்றால், அவரது இரட்சிப்பை நான் காணும்படிச் செய்ததாகும், என்னை அவர்  தெரிந்தெடுத்துக்கொண்டதாகும். தேவன் என்னை தெரிந்தெடுத்துக் கொண்டார் மற்றும்  என்னைப் பற்றிய அவரது திட்டம், மலேசிய இஸ்லாமியர்களுக்கு அவரைப் பற்றி எனக்குத்  தெரிந்ததை பகிர்ந்துக்கொள்வதாகும். சமீபத்தில், ஒரு மலேசிய பெண்ணை சந்திக்கும்  வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனேக விஷயங்களை பேசினோம், அதாவது அப்பெண்ணின் கிறிஸ்தவ  நண்பர்கள், பைபிள் மற்றும் ஈஸா மஸீஹா போன்ற தலைப்புக்கள் பற்றி பேசினோம். ஆனால்,  அப்பெண் விசுவாசத்தில் காலெடுத்து வைக்க தயாராக இல்லை. இருந்தபோதிலும், ஒரு மலாய்  பெண்ணாக இருந்தால், கட்டாயமாக ஒரு முஸ்லீமாகத் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம்  இல்லை என்றுச் சொன்னாள். 
மலேசிய அரசாங்கம், மக்கள் இதர மதங்களுக்கு  மாறுவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன் பின்பற்றும்  தன் நம்பிக்கைக்காக முடிவுகளுக்காக, எந்த பயமுறுத்தலும் அவனுக்கு எதிராக  இருக்கக்கூடாது. மனிதர்கள் சில விஷயங்களில் தீவிரமாகவும், சில விஷயங்களில் லேசான  கண்ணோட்டத்தோடும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவாக  இருக்கவேண்டும், ஒரு பக்கமாக சாராமல் இருக்கவேண்டும், மக்கள் தங்களுக்கு பிடித்தபடி  தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும். ஒரு மனிதன் தனக்கு பிடித்த நம்பிக்கையை  பின்பற்றும்படியான சுதந்திரம் அவனுக்கு கிடைக்கும் நாட்கள் வரவேண்டும் என்று  எதிர்பார்க்கிறேன். அவன் எடுத்த நம்பிக்கையை மதித்து குடும்பமும், நண்பர்களும்,  சமுதாயமும், வேலை ஸ்தலங்களும் அவன் எடுத்த முடிவிற்காக அவனை மதிக்கும் நாட்கள்  வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன். 
ஆங்கில மூலம்:  Tarmizi  Testimony 

